சவால்களுக்கு துணிச்சலுடன் முகம்கொடுப்போம் - ஹக்கீம் பெருநாள் வாழ்த்து
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதியான ஹஜ் கடமையை தொடர்ந்து முஸ்லிம்கள் 'ஈதுல் அழ்ஹா' எனப்படும் தியாகத் திருநாளை கொண்டாடும் வேளையில், உலகளாவிய ரீதியிலும் உள்நாட்டிலும் எதிர்நோக்கப்படும் சவால்களுக்கு துணிச்சலோடு முகம்கொடுத்து அவற்றை முறியடித்து வெற்றிபெற எல்லாம் வல்ல அல்லாஹ்வை இறைஞ்சுவோமாக என நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள தியாகத் திருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
வழமை போன்று இவ்வாண்டும் வேதனைகளுக்கும், சோதனைகளுக்கும் மத்தியில் இன்னொரு 'ஈதுல் அழ்ஹா' பெருநாளை முஸ்லிம் உம்மத் சந்திக்கின்றது. முஸ்லிம்களுக்கு எதிராக அடிப்படை வாதம், பயங்கரவாதம் என்பவற்றுக்கு எதிரான போராட்டம் என்ற போர்வையில்; நன்கு திட்டமிடப்பட்ட முறையில் உடல் ரீதியாகவும், உள ரீதியாவும், பொருளாதார ரீதியாகவும், ஊடகங்கள் ஊடாகவும் தாக்குதல்கள் பல்வேறு கோணங்களில் பரவலாக அநேக நாடுகளில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள சூழ்நிலையில், தங்களது சன்மார்க்கத்தையும், இருப்பையும் தக்க வைத்துக்கொள்வதற்காக முஸ்லிம்கள் தங்களை தற்காத்து கொள்ளவேண்டிய தேவையை முன்னரை விடவும் அதிகமாக உணர்ந்திருக்கிறார்கள். இதனை நாளாந்த நிகழ்வுகள் நன்றாக எடுத்துக்காட்டுகின்றன. குண்டுத் தாக்குதல்கள், விமானத் தாக்குதல்கள், ஆள் இல்லாத விமானத் தாக்குதல்கள் என்பன போன்றவை பலநாடுகளில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இத்தகைய சந்தர்ப்பத்தில், நபி இப்ராஹிம் (அலை), இஸ்மாயில் (அலை) ஆகியோரின் அளப்பரிய தியாகத்தை நினைவு கூரும் இவ்வேளையில் முஸ்லிம்கள் தங்களது தியாக உணர்வையும், ஈமானிய உணர்வையும் மேலும் மெருகூட்டிக்கொள்கிறார்கள் என்ற பேருண்மையை சர்வதேசம் புரிந்துகொள்ள வேண்டும்.
இலங்கையைப் பொறுத்தவரை முப்பது ஆண்டுகாலமாக நீடித்த கோர யுத்தத்தின் காரணமாக உயிரழப்புகளாலும், உடைமை இழப்புகளாலும், பொருள் இழப்புகளாலும் பாதிக்கப்பட்ட ஒரு சமூகம் என்ற முறையிலும், வாழ்விடங்களை இழந்து இன்னமும் அகதி வாழ்க்கையை அனுபவிக்கும் ஒரு சமூகம் என்ற முறையிலும் இங்கும் முஸ்லிம் உம்மத் அளவிடவொண்ணாத இன்னல்களைச் சுமந்திருக்கிறது என்பதை மறந்துவிட முடியாது.
இவ்வாறான எல்லாவிதமான துன்ப துயரங்களிலிருந்தும் விடுபட்டு இம்மை மறுமை இரண்டிலும் விமோசனமடைய எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் பாலிப்பானாக. இவ்வாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள 'ஈதுல் அழ்ஹா'வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment