இலங்கையின் கப்பல்களை தடுத்துநிறுத்தியுள்ள அமெரிக்கா..!
ஈரானில் எரிபொருள் ஏற்றச் சென்ற இலங்கையின் எரிபொருள் தாங்கி கப்பல்களை அமெரிக்கா தடுத்து நிறுத்தியுள்ளது. ஈரான் மீது பொருளாதாரத் தடையை விதித்துள்ள அமெரிக்கா, தனது கடற்படைக் கப்பல்களின் மூலம் ஈரானுக்குச் செல்லும் கப்பல்களை தடுத்து வருகிறது.
எரிபொருள் தேவைக்கு ஈரானையே முழுமையாக நம்பியுள்ள இலங்கை அரசாங்கம், எரிபொருளை ஏற்றி வருவதற்கு கப்பல்களை தெஹ்ரானுக்கு அனுப்பியிருந்தது. இவற்றை அமெரிக்கா தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியுள்ளது, அதனால், அந்தக் கப்பல்களை சவூதி அரேபியாவுக்கு இலங்கை திருப்பி விட்டது.
ஈரான் எரிபொருள் இறக்குமதி தடைப்பட்டுள்ளதால், ஈரானில் இருந்து இறக்குமதி செய்யும் மசகு எண்ணெயை சுத்திகரிக்கும் சபுகஸ்கந்த ஆலை மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, தமது பாரிய எண்ணெய் தாங்கிக் கப்பல்களின் மூலம் இலங்கைக்கு எரிபொருள் விநியோகிக்கத் தயார் என்று ஈரான் கூறியுள்ளது.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஈரானியத் துதுவர் ஹசானி, “ஈரானின் பாரிய எரிபொருள் தாங்கி கப்பல்கள் இலங்கையின் சிறிய துறைமுகங்களுக்குள் நுழைய முடியாது என்று எமக்குத் தெரியும். ஒரே ஒரு தெரிவு உள்ளது. இலங்கையின் கடல் எல்லைக்குள் வைத்து வேறு கப்பல்களுக்கு எரிபொருளை மாற்ற முடியும். இதுதொடர்பாக நாம் இலங்கை அரசுடன் கலந்துரையாடி வருகிறோம்” என்று கூறியுள்ளார்.
Post a Comment