Header Ads



கிழக்கு கடற்கரைகளில் முட்டிமோதிய மீன்களின் வருகைக்குப் பின்னே ஆபத்து நிறைந்துள்ளதா?



(எஸ்.எல்.மன்சூர்)

அண்மைக்காலங்களில் கிழக்கில் அதிகளவான மீனர்கள் பிடிக்கப்பட்டமை யாவரும் அறிந்த விடயம். இதற்குப் பின்புலத்தில் இயற்கையின் மாற்றங்கள் நிகழக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக பலரும் தெரிவித்திருந்த நிலையில் இன்று அந்த நிகழ்வுகளுக்குக் கட்டியம் கூறுவதுபோல் கிழக்கில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதாகவும், மீனவர்கள் கடலுக்குள் செல்வதைத் தவிர்க்கும்படியும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை இலங்கையின் தென் மேற்குத் திசையிலிருந்து 500 – 700 கிலோமீற்றருக்கு இடைப்பட்ட தூரத்தில் கடலினுள் இந்தோனேசியா அவுஸ்திரேலியா புவித்தட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், தற்போதைய காலநிலை மாற்றம் போன்றவைகளுக்கும் இந்த அதிகளவான மீன்பிடிக்கும் தொடர்புகள் இருக்கலாம் என பலரும் கருதுகின்றனர். ஏனெனில் வரலாறு காணாத மீன்கள் கரையொதுங்கிய போது யாரும் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு மீனை கையால் பிடிக்கும் அளவுக்கு மீன்களின் வருகை காணப்பட்டது. அப்படியானால் இந்த இயற்கையின் எதிர்த்திசையான நிகழ்வுக்கு பக்கபலமாகக் காணப்படும் இந்நிகழ்வு உண்மையில் அதிசயமான விடயம்தான்!

குறிப்பாக அதிசயங்கள் பலவிதமாக நடைபெறும். இதுவும் ஒரு அதிசயமான நிலைமைதான் அதிலும் கடலில் ஏற்படுகின்ற அதிசயங்களைப் பற்றி நாம் அண்மையக்காலமாக பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம். பல்லாண்டுகளுக்கு முன்னர் கடல்கோள் ஏற்பட்டு உலகின் நிலங்கள் பிரிந்து கண்டங்கள் ஏற்பட்டதாகவும், ஒன்றாக இருந்த இலங்கையும் இந்தியாவும் பிரிந்தன என்றும், இலங்கையின் விகாரமாகதேவி கடற் கோளினால் பாதிக்கப்பட்டாள் என்றெல்லாம் கதைகளும், புராணங்களும், வரலாறுகளும் இருந்திட்டபோதிலும் நாம் வாழும் காலத்திலும் கடல் ஊருக்குள் வந்து நிலங்களை கபளீகரம் செய்த நிகழ்வுகள் அதிசயத்திலும் அதிசயமான ஒருநிகழ்வுதான்.

கடந்த சுனாமி ஏற்படுவதற்கு முன்னர் கடலில் குறிப்பாக கிழக்கின் பல பகுதிகளில் மீன்களும், மீன்கள் போன்ற வேறு பிராணிகளும் காணப்பட்டமை நினைவிருக்கலாம். இவ்வாறான சந்தர்ப்பம்; ஒன்றின் வருகைக்கு பின்னர் கடல்கோள் ஏற்பட்டமை மக்களும் அவர்களது குடியிருப்புக்களும் நாசம் செய்த வரலாறு இன்னும் மறையவில்லை. ஆனாலும் வருடத்தின் ஒக்டோபர் தொடக்கம் ஜனவரி மாதங்களில் இயற்கையின் சீற்றம் ஏதோர்வடிவில் நம்மை பயமுறுதிக் கொண்டேதான் இருகின்றது. இவற்றுக்கெல்லாம் காரணம் இயற்கையை மனிதன் நோவினை செய்தமையினால் இயற்கை மனிதனை நோவினை செய்கின்றது என்று சூழலியலாளர்கள் கூறுவர். உண்மைதான் இயற்கையின் சமநிலை பாதிக்கப்படுகின்றன. அந்தப்பாதிப்பை ஏற்படுத்துவதில் மனிதர்கள்தான் முன்னிலை வகிக்கின்றனர். அபிவிருத்தி என்கிற பேரில் கடல் வளம் சூறையாடப்படுகின்றது. மலைகள் உடைக்கப்பட்டு கடலுக்குள் துறைமுக அபிவிருத்தி எனும்பேரில் கொட்டப்படுகின்றது. மாடாமாடிகைகள் கட்டப்படுகின்றன. வீதியோரத்து மரங்களும், காடுகளும் அழிக்கப்படுகின்றன கிராமம் நகரமயமாக்கப்பட்டு நரகவாழ்விற்கு அத்திவாரமாக அமைகின்ற ஒருநிலை உலகில் அனைத்து நாடுகளிலும் ஏற்பட்டுள்ளது. மக்கள் பெருக்கம், பசி, பட்டினி, யுத்தம் போன்ற இயற்கைக்கு எதிரான சவால்களை மனிதன் முன்னெடுக்கின்றபோது இயற்கையும் மனிதனை நோக்கி சீண்டிப்பார்த்து சீறிப்பாய்கின்றது என்பதுதான் உண்மையாகும்.

அண்மையில் கிழக்கில் கரையொதுங்கிய மீன்கள் பற்றிய நிகழ்வுகள் உண்மையில் பார்ப்பவர்களை பரவசமூட்டின. கடலினுள் இவ்வளவு அதிசயமா? சொல்லிவைத்தாற்போல எல்லா மீன்களும் கரையொதுங்கினால் எதிர்காலத்தில் மீன்களுக்கு என்னதான் செய்வது என்று கூறியவர்களும் உண்டு. அந்தளவுக்கு மீன்களின் வருகை ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. கிண்ணியா தொடக்கம் அட்டாளைச்சேனை வரையிலான கடற்பிரதேசங்கள் முழுவதிலும் திடீர் திடீரென விலையுயர்ந்த மீன்களும், விலைகுறைவான மீன்களும் வலைகளையும் தாண்டி கைகளால் பிடிக்குமளவுக்கு மீன்கள் வந்தமை இயற்கைக்கு மாற்றமான ஒரு நிகழ்வினை முன்னிறுத்தியே நடைபெறுகின்றன என்று கூறியோர் பலர். விஞ்ஞானரீதியான விளக்கங்கள் பற்றி அறிவிக்கப்பட்டாலும், பொதுவாகவே அதிகளவான மீன்கள் பிடிக்கப்படும் காலங்களில் மீன் ருசியற்று காணப்படுவதாக கூறப்பட்டாலும் அண்மையில் பிடிக்கப்பட்ட மீன்கள் அவ்வாறில்லாமல் காணப்பட்டமையும் ஒரு கலக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு  இலட்சக்கணக்கில் மீனினங்கள் கரையில் முட்டிமோதியதன் மர்மம்தான் என்ன என்பது அடங்குவதற்குள் கடலிலும், பொதுவாக இயற்கையிலும் ஏற்பட்டுள்ள மாற்றம் இன்னொரு சுனாமி ஏற்படுவதற்கான அறிகுறிகளா? என்பதும் புதிரான புதிராகவே தெரிகிறது. 

எந்த ஒருநிகழ்வும் வழமைக்கு மாற்றமான ஒரு செயற்பாடாக அமைகின்றபோது அங்கே விபரீதம் ஏற்படப்போகின்றது என்பதுதான் யாதார்த்தம். அந்தவிடயம் இயற்கையில் ஏற்பட்டால் காலநிலையில் ஒருமாற்றம் ஏற்படப்போவதற்குரிய அம்சமாகவே மக்களும், கடல் ஆராய்சியாளர்களும் நோக்குகின்றனர். ஒரு பார்வையும் காணப்படுகின்றது. ஆனால் கடலினுள்ளே காணப்படுகின்ற செயற்பாடுகளைப் பார்க்கின்றபோது அது உலக அதிசயங்களையும் விஞ்சும் அளவுக்கு இருப்பதுதான் விஞ்ஞானிகளையே வியக்கவைத்துள்ளது. இன்னும் முழுமையான கடலின் ஆழத்தைக்கூட கண்டறியாத மனித இனம் கடல்வாழ் மீனினம் கரையில் தானாகவே ஒதுங்குவதற்கு பல்வேறு காரணங்களைக் கூறினாலும் இயற்கையின்மாற்றம் ஒன்றுக்கான முன்னறிவிப்பாகவே பார்க்கப்படுவதாக நீண்டகாலம் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுவருவோர் கூறுகின்றனர். ஆராய்ச்சிகளும், ஆய்வுகளும் தொடரான கண்காணிப்பின் பின்னரான முடிவுகளை வைத்தே கண்டறியப்படுகின்ற நிலையில் தமது வாழ்நாள் முழுவதும் கடலின் அலைகளில் உருண்டு புரண்டு உழைக்கும் மீனவர்களின் வாய்ச்சொல்லில் பல உண்மைகளும் இருக்கலாம்? 

இன்னொரு மீன்பிடியாளர் கூறும்போது ஆறு மற்றும் கால்வாய்களில்தான் மக்கள் கைகளினால் மீன்பிடித்த வரலாறுகள் உண்டு. ஆனால் இன்று ஆழ்கடலின் கரைகளுக்குள் மக்கள் கைகளினால் மீன்பிடித்தமை உண்மையில் அதிசயத்திலும் அதிசயம்தான். இவ்வகை மீன்கள் அதிகம் பிடிக்கப்பட்டமை இதுதான் முதல்தடவை. இவ்வாறு அளவுக்கதிமான மீன்கள் கரைக்கு  வந்தமை அதியசமான ஒருசம்பவமாகவே பார்க்கப்படுகிறது என்று கூறும் அந்த மீனவர் மீன்பிடிப்பதற்கான சீசன் காலங்களில் குறிப்பாக ஒக்டோபர் தொடக்க பெப்ரவரி மாதங்கள் வரையான காலங்களில் அதிகளவான மீன்களைப் பிடிப்போம். அக்காலங்களில் நீரோட்டமும் வித்தியாசமாக இருக்கும்.  கரையை நோக்கி வருகின்ற சிறிய மீன்களையும், அதனை உண்ணவருகின்ற பெரிய பெரிய மீன்களையும் பிடிப்போம். ஆழ்கடலிலும், கரையோர இழுவை வலைகள் மூலமும் இவ்வாறான மீன்களைப் பிடிப்போம். அதுமட்டுமன்றி நீரோட்டங்கள், காற்றின்திசை போன்ற பலகாரணிகளும் மீன்பிடித்தலில் அதிக செல்வாக்குச் செலுத்தும். ஆனால் தற்போது பிடிக்கப்பட்ட மீன்கள் ஒரு வித்தியாசமான பார்வைக்குள் சென்று எங்களையே ஆச்சரியத்தில் அழ்த்தியுள்ளமை வியப்பான செயலாகும். என்று கூறுகின்ற அந்த மீனவர், இயற்கையான அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கான முன்னெச்சரிக்கையாகவும் அமையலாம்  என்பதுதான் பொதுவான அபிப்பிராயமாக தோன்றுகின்றது என்றும் அந்த மீனவர் தெரிவித்தார்.

இவ்வாறு அதிகளவான மீன்கள் பிடிக்கப்பட்டமை தொடர்பாக அண்மையில் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கின்றபோது இவ்வாறான மீன்களை உண்ணாமல் விடுவதுதான் சிறந்தது என்று தெரிவித்திருந்தார். ஏனெனில் கடல் நீரின் தன்மை, மீன் போன்றவற்றை ஆராய்ச்சி செய்ததன் பின்னர்தான் உண்ணவேண்டும் என்கிற கருத்தை தெரிவித்து, அதற்கான மாதிரிகள் பெறப்பட்டு உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் தெரிவித்திருந்தார். ஆனால் நாரா நிறுவனம் இம்மீன்களை உண்ணுவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. இவ்வாறு மீன்கள் அதிகம் பிடிக்கப்பட்டமைக்கு அராபிய கடலின் நீரோட்டம் வங்காள விரிகுடாவில் கலந்துள்ளமை போன்ற பல காரணங்களை கூறுகின்றது. எது எப்படியிருந்தாலும் இவ்வாறான ஒரு நிலை குறிப்பாக நமது நாட்டின் கிழக்குப் பகுதியில் புகுந்து விளையாடுவது அதுவும் மழைக்காலம், வங்காள விரிகுடா அமைதியாக காணப்பட்டபோது ஏற்பட்டுள்ளமை பலதிசைகளிலும் சிந்திக்க வைத்துள்ளது.  சுனாமி ஏற்பட்டு எட்டு ஆண்டுகள் நிறைவடைகின்ற இக்காலகட்டங்களில் இப்படியான மீன்களின் வரவினை வைத்துக் கொண்டு கடலில் நிகழப்போகும் மாற்றத்தை பற்றிய பயம் மக்கள் மத்தியில் மீண்டும் ஒருதடவை சுனாமி அல்லது இயற்கை அனர்த்தம் ஒன்று நிகழப் போகின்றதோ என்பதை பறைசாற்றுவதுபோல் தெரிகின்றது.

அண்மையில்கூட இந்தியாவின் தமிழ்நாட்டில் அதிகமான இடங்களில் ராட்சத அலைகள் ஊருக்குள் புகுந்தன. கடல் அரிப்பு ஏற்பட்டு மரங்களும், மீனவர்களின் வீடுகள், மீன்பிடி உபகரணங்கள் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டன. இவ்வாறெல்லாம் திடீரென கடலில் சுனாமிபோல ஏற்படுவது காலநிலையில் ஏற்படுகின்ற மாற்றங்கள்தான் என்று கூறப்படுகிறது. அப்படியானால் கிழக்கில் கூடுதலாக பிடிக்கப்பட்ட மீன்களின் வரவு நாட்டில் இன்னொரு இயற்கை அனர்த்தத்தை எதிர்வு கூறுவதுபோலவே உள்ளனவாஎன்பதை கட்டியம் கூறி நிற்கின்றது.

காலநிலை மாற்றம் என்கிறபோது குறித்த காலப்பகுதியில் காலநிலை அளவீடுகளில் புள்ளிவிபர ரீதியில் கணிசமானதெனக் கொள்ளத்தக்கதாக ஏற்படும் மாற்றங்களை காலநிலை மாற்றம் எனக் கூறலாம். ஒக்டோபர் நவம்பர் வந்துவிட்டால் காற்று புயலாக மாற்றமடையும், சிறிய கடலலைகள் பேயாட்டம் ஆடும், அதிகளவான மீன்கள் பிடிக்கப்படும். சிலவேளைகளில் மார்கழியிலும் மழைபெய்யாது காணப்படுகின்ற சம்பங்களும் கடந்தகாலங்கில் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். உலகளவில் கடந்த நூற்றாண்டைவிட தற்போது0.7பாகை செல்சியசால் வெப்பம் உயர்ந்துள்ளது என்றும், எதிர்வரும் 2050ஆம் ஆண்டில் மேலும் உயரக்கூடும் எனவும் காலநிலை சம்பந்தமான உலக மாநாட்டின் அறிக்கைகள் எடுத்தியம்புகின்றன.

இதேவேளை தேசிய கடல்வள ஆராய்ச்சி நிலையம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக விலங்கியல் பிரிவு என்பன பலவேறு கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்துள்ளன. ஆழ்கடல் பகுதிகளில் மீன்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஒட்சிசன் குறைபாடு என்றும், ஒருவகை வைரஸ் தொற்று நோய் ஏற்பட்டிருக்கலாம். இவ்வாறான நிலை கடந்த வருடம் வெளிநாட்டு கடல் பிரதேசங்களிலும் ஏற்பட்டுள்ளமையினை சுட்டிக்காட்டுகின்றனர். அதிக வெப்பம் அல்லது அதிக குளிரான கால நிலை மாற்றம், நச்சுப், இரசாயனப்பதார்த்தங்கள் ஆழ்கடலின் அடியில் கலக்கப்பட்டிருக்கலாம். பாசித்திரள்கள் போன்றன காரணமாக அமையலாம். என்கிற எதிர்வு கூறல்களும் கூறப்படுகின்றன.

அதேவேளை அனைவரும் அதியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த இந்நிகழ்வினை அரசோ, அதற்கான திணைக்களமோ பெரியளவில் அலட்டிக் கொள்ளவில்லை என்கிற குறைபாடும் மீனவர்களுக்கு மத்தியில் எழுந்துள்ளது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் இந்தளவு மீனை சந்தைப்படுத்தலில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் போன்றன நிவர்த்திக்கப்படுவதற்கு உரிய அதிகாரிகள் முன்வராமை கவலை அளிப்பதாக தெரிவித்த மீனவர் ஒருவர் தற்போது ஒலுவில் கடற்கரை முற்றாக செயலிழந்து போனதன் பிற்பாடு இவ்வாறு ஒரு திடீர்பாய்ச்சல்,  நீண்டகாலத்திற்குப் பிறகு ஏற்பட்டமை மகிழ்ச்சியாக இருந்தாலும் எதிர்காலத்தில் நடக்கப்போகும் அபாயத்தை எண்ணி மனது சஞ்லப்படுகின்ற ஒருநிலைமையும் இங்குள்ள மக்களின் உள்ளத்தில் குவிந்துள்ளன.

மீன்பிடித்தொழிலில் பாண்டித்தவம் பெற்ற பரம்பரை கடற்றொழில் மீனவர்கள் இதனை ஒரு ஆபத்தான சமிக்ஞையாகவே கருதுகின்றனர். இருந்த போதிலும் வெகு நாட்களாக வெறுங் கைகளோடு கடலில் சென்று திரும்பிய மீனவர்களுக்கு இது ஒரு வரப்பிரதாசமாகவே தெரிகின்றது. கருதுகின்றனர். தென்கிழக்கு பிரதேசமான அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை, சின்ன பாலமுனை ஆகிய பகுதிகளில் தலா 1300கிலோவுக்கும் மேற்பட்ட இரண்டு சுறாமீன்களும், மற்றும் 80 இலட்சம் ரூபா பெறுமதிமிக்க பாறை மீன்களும், 30 இலட்சம் மற்றும் 40 இலட்சம் ரூபா வரையிலான சூரை, வளயா, கீறி, சாள போன்ற வகை மீன்களின் ஊடாக வருமானம் ஈட்டப்பட்டன. 
தென்கிழக்கின் ஒலுவில் துறைமுகம் அமைந்துள்ள பிரதேசத்தில்தான் கடந்த காலங்களில் மீன் பிடிக்கு பெயர்பெற்ற இடமாக காணப்பட்டது. ஆனால் தற்போது அப்பிரதேசம் முழுவதும் துறைமுகப் பணிகள் நடைபெற்றுள்ளதால் மீன்பிடித்தொழில் முற்றாக செயலிழந்து போன நிலையில் இவ்வாறு இறைவன் முகம்பார்த்து ஏழை மீனவர்களின் வாழில் ஒருமுறையாவது செழிப்பை வழங்கினானே அந்த ஏக இறைவனுக்கு நன்றி பாராட்டும் மக்களும் இல்லாமலும் இல்லை. எவ்வாறாகினும் மீண்டும் ஒரு இயற்கையின் சீற்றம் இப்பிரதேசவாழ் மக்களின் மோதுவதற்கு மீன்களின் வருகை காரணமாக இருக்குமோ என்கிற அச்சமும் இல்லாமலும் இல்லை. எல்லாவற்றுக்கும் இறைவனே மேலானவன் என்று பழியை இறைவன் மேல் போடவும் முடியாது. இயற்கையை நாம் பாதுகாத்தால் இயற்கை நம்மைப் பாதுகாக்கும் என்கிற கொடியை உயர்த்திப் பிடித்து இயற்கையின் வெறித்தனத்திலிருந்து எம்மையும், நமது பூவுலகத்தையும் காப்பாற்ற முனைவோமாக?




No comments

Powered by Blogger.