எனக்காக பிரார்த்தித்தவர்களுக்கு நன்றிகள்..! மலாலா
பாகிஸ்தானின் ஸ்வாத் பள்ளத்தாக்கு பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி மலாலா. இது தலிபான்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதி. இங்கு பெண்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகம். பெண்கள் பள்ளிக்கு செல்லக் கூடாது, பொது இடங்களுக்கு ஆண்கள் துணை இல்லாமல் போகக் கூடாது, உடல் முழுவதும் மறைக்கும் உடைகளை மட்டுமே அணிய வேண்டும் என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
சிறுமி மலாலா, இந்த கட்டுப்பாடுளை எதிர்த்து தனது 11வது வயதிலேயே இன்டர்நெட்டில் பல கட்டுரைகளை எழுதினாள். பி.பி.சி.யிலும் உரை நிகழ்த்தினாள். இதற்காக அவளுக்கு விருது வழங்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த தலிபான்கள், கடந்த 9ம் தேதி பள்ளியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த சிறுமி மலாலா மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். சிறுமியின் தலை, கழுத்து முதுகு பகுதிகளில் குண்டு துளைத்தது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் பாகிஸ்தானின் ராவல்பின்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மலாலா, கோமா நிலைக்கு சென்றாள். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக அவளை இங்கிலாந்து கொண்டு சென்றனர். அங்குள்ள குயின் எலிசபெத் குழந்தைகள் மருத்துவமனையில் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுமி பூரண நலம் பெற வேண்டும் என்று பாகிஸ்தான் மட்டுமின்றி, உலகின் பல பகுதிகளிலும் மக்கள் பிரார்த்தனை செய்தனர்.
தீவிர சிகிச்சைக்கு பிறகு மலாலா தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் கை, கால்களை அசைப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். எனினும் அவளுக்கு முக்கியமான ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றும் டாக்டர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில், மலாலா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவளால் எழுந்து நிற்கவும் பேசவும் முடிகிறது. கண் விழித்தபின் முதல்முறையாக பேசிய மலாலா, தனக்காக பிரார்த்தனை செய்த மற்றும் உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றியை அர்ப்பணிப்பதாக உருக்கமுடன் தெரிவித்தாள்.
‘பெண்கள் அச்சமின்றி தீவிரவாதத்துக்கு எதிராகவும் பெண்ணுரிமைக்காகவும் குரல் கொடுக்க முன்வரவேண்டும். இதற்காக பல எதிர்ப்புகளை சந்திக்க வேண்டி இருந்தாலும் தயங்கக் கூடாது’ என்றும் மலாலா கூறியுள்ளாள். பல்வேறு மகளிர் அமைப்புகளும் மலாலா தாக்கப்பட்டதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே, சிறுமிக்கு வாழ்த்து கூறுவதற்காக மருத்துவமனை முன்பு ஏராளமான மக்கள் திரண்ட வண்ணம் உள்ளனர்.
Post a Comment