Header Ads



கொழும்பு வெள்ளத்தில் மூழ்கியது - நாடு பூராகவும் 50.000 பேர் பாதிப்பு



கொழும்பில்  புதன்கிழமை மாலை பெய்த அடை மழையினால் கின்சி வீதி, நகர மண்டபம், தும்முள்ள சந்தி, டார்லி வீதி மற்றும் இப்பான்வல ஆகிய பிரதேசங்களிலுள்ள வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

இதனால் ஹோர்டன் பிளேஸ், கின்சி வீதி, நகர மண்டபம் மற்றும் வார்ட் பிளேஸ் ஆகிய பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. நாட்டின் பல பாகங்களிலும் வீசிய சூறாவளியினால் 35 வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன், பாரிய மரங்கள் முறிந்து விழுந்தமையினால் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது. அவ்வாறான பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதுடன் தொலைத்தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. 

கொழும்பு, ஹைலெவல் வீதியின் திம்பிரிகஸ்யாய சந்தியில் சற்றுமுன் பாரிய மரங்கள் இரண்டு முறிந்து விழுந்தமையினால் அவ்வீதியினுடனான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது. இதனால், அதனை அண்மித்த வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

 திக்வெல்ல பகுதியில் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலமரமொன்று முறிந்து விழுந்துள்ளது. அதனை வெட்டி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  இரத்மலானை கரையோரப் பிரதேசங்களில் ஏற்பட்ட கடலரிப்பினால் சுமார் 10 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. 

நாட்டில் ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக இதுவரை 13,074 குடும்பங்களைச் சேர்ந்த 49,788 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதில் முலட்டியான மற்றும் கோப்பாய் பகுதிகளில் இரு உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளதென அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மண்சரிவு, வெள்ள அனர்த்தத்தால் முல்லைத்தீவு மாவட்டத்தில் 5,583 குடும்பங்களைச் சேர்ந்த 19,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 503 குடும்பங்களைச் சேர்ந்த 1721 பேர் 9 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை வடக்கில் மாத்திரம் 35 ஆயிரத்து 207 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.


No comments

Powered by Blogger.