ஹஜ் பெருநாள் தொழுகை நேரத்தில் தற்கோலை தாக்குதல் - 41 பேர் வபாத்
ஆப்கானிஸ்தானில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்காக பள்ளிவாசலில் ஒன்றுகூடியோர் மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 41 பேர் கொல்லப்பட்டு 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வடக்கு ஆப்கானிஸ்தானின் பர்யா மாகாண தலைநகரான மய்மானவிலுள்ள பள்ளி வாசலுக்கு அருகில் வெள்ளிக்கிழமை காலை இந்த தற்கொலை தாக்குதல் இடம் பெற்றுள்ளது.
பெருநாள் தொழுகைக்கு பின்னர் பள்ளிவாசலை விட்டு மக்கள் வெளியேறும்போதே குண்டு வெடித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இதன் போது மாகாண அரசின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் பெருநாள் தொழுகையில் பங்கேற்ற போதும் இவர்கள் பாதிப்பின்றி தப்பியுள்ளனர்.
எனினும் மாகாண பொலிஸ் பிரதானி அப்துல் காலிக் அக்சாய் குண்டு தாக்குதலில் காயமடைந் துள்ளதாக மாகாணத்தின் பிரதி ஆளுநர் அப்துல் சதார் பரெஸ் ஏ. எப். பி. செய்திச் சேவைக்கு கூறியு ள்ளார்.
எனினும் யாரை இலக்கு வைத்து இந்த குண்டு தாக்குதல் நடத்தப் பட்டது என்று தெரியவில்லை என அவர் கூறியுள்ளார். தாக்குதலுக்கு எவரும் இதுவரை பொறுப்பேற்க வில்லை.
பெருநாள் தொழுகையை ஒட்டி பள்ளிவாசலை சுற்றி கடும் பொலிஸ் பாதுகாப்பு இடைப் பட்ட நிலையில் பொலிஸ் உடையில் வந்த ஒருவரே இந்த தற்கொலை தாக்குதலை நடத்தியதாக கூறப் படுகிறது.
கொல்லப்பட்டோருள் பொலிஸ், இராணுவம் உள்ளடங்கலாக பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த 19 பேர் இருப்பதாக மாகாண பிரதி ஆளுநர் அப்துல் சதார் குறிப்பிட்டார். தவிர, 17 சிவிலியன்களும் 5 சிறுவர்களும் பலியாகியுள்ளதாக அவர் கூறினார்.
இந்த குண்டு தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ள ஆப்கான் ஜனாதிபதி ஹமிட் கர்சாயி, இவர்கள் இஸ்லாத்துக்கும் மனித இனத்திற்கும் எதிரானவர்கள் என கூறியுள்ளார்.
Post a Comment