Header Ads



வடபுல முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம் - 22வது ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள்


1990 களில் வடபுல முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டது. வடமாகாணத்தின் எல்லா மாவட்டங்களில் இருந்தும் முஸ்லிம்கள் மிகவும் குறுகிய கால அவகாசத்துடன் ஆயுத முனையில் மிகவும் பலவந்தமாக விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டார்கள். இந்நிகழ்வு இடம்பெற்று  இன்றோடு வருடங்கள் 22 உருண்டோடிவிட்டன. 

இப்போது யுத்தம் நிறவடைந்து 3வருடங்கள் கடந்த நிலையிலும் யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் போதியளவு சாத்தியமாகத நிலை தொடர்கின்றது. “எம்மை வெளியேற்ற உந்திய மனோநிலைகள் இன்னமும் உயிரோடிருக்கின்றனவா?” என்ற எண்ணம் முஸ்லிம்களின் மத்தியில் இழையோடியிருக்கின்றது. 

வடக்கு முஸ்லிம்களின் மீது நிகழ்த்தப்பட்ட ஒரு அநியாயத்தை எதிர்த்து அந்த மக்களுக்கு நீதியும் நியாயமும் கிடைக்க வழிசெய்வது மனிதத்தை நேசிக்கின்ற நீதியை ஆதரிக்கின்ற எல்லோரதும் கடப்பாடாகும்.  வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தை எவ்வாறு ஒரு வரலாற்றுத்தவறாக உணர்கின்றோமோ அதேபோன்று அவர்களை மீளவும் குடியேறவிடாது தடுக்கின்ற எண்ணப்பாடும் செயற்பாடுகளும் தவறானவையே.

எனவே வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதையும் அவர்கள் மீளக்குடியேறாது தடுக்கும்  நடவடிக்கைகளையும்  நிராகரித்து வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தையும் சகஜவாழ்வை உறுதிப்படுத்துவதும் காலத்தின் தேவையாகும். அந்தவகையில் பொதுவான அரசியல் அபிலாஷைகளுக்கு அப்பால் சென்று நல்லிணக்கம் சகோதரத்துவம் குறித்த எண்ணங்களோடு யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீளக்குடியேற்றத்தை சாத்தியப்படுத்துவது தொடர்பில் நாம் சிந்திக்கவும் செயலாற்றவும் கடமைப்பட்டிருக்கின்றோம். 

அந்தவகையில் வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றத்தை பொதுவாகவும் யாழ்ப்பாண முஸ்லிம்களின் வெளியேற்றத்தை குறிப்பாகவும் குறிக்கின்ற ஒக்டோபர் 30ம் நாள் ஒரு விஷேட நிகழ்வையும் ஒன்றுகூடலையும் நாம் ஏற்பாடு செய்திருக்கின்றோம். மேற்படி ஒன்றுகூடலில் “யாப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு தடையாக இருக்கின்ற காரணிகள் “ என்னும் மகுடத்தில் பேராசிரியர் எச்.எஸ் ஹஸ்புல்லாஹ் அவர்களும் “யாழ் மாவட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு எவ்வாறு ஒத்துழைப்பு நல்கலாம்” என்னும் தலைப்ப்பில் பேராசிரியர் இரா சிவச்சந்திரன் அவர்களும் விஷேட பகிர்வுகளை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சபையோரின் கருத்துக்களையும் உள்வாங்கும் நிகழ்வும் இணைக்கப்பட்டுள்ளது. 

எனவே மேற்படி நிகழ்வில் தாங்கள் கலந்து சிறப்பிப்பது வடக்கு முஸ்லிம்களின் விவகாரங்களில் உங்களுக்கு இருக்கும் ஈடுபாட்டினை உறுதி செய்வதாக இருக்கும் என்பது எமது தாழ்மையான அபிப்பராயமாகும். 

No comments

Powered by Blogger.