நபிகள் அவமதிப்பதை யூடியூப்பிலிருந்து நீக்க அமெரிக்காவிடம் பாகிஸ்தான் கோரிக்கை
இது குறித்து, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:"முஸ்லிம்களின் அப்பாவித்தனம்' என்ற தலைப்பில் வெளியாகி உள்ள வீடியோ படம், உலகம் முழுவதும் உள்ள 150 கோடி முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல். உலகின், பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் மத்தியில் வன்முறை, வெறுப்பை ஏற்படுத்தும் தீய நோக்குடன் வீடியோ வெளியிடப் பட்டுள்ளது.
இக்கருத்தைக் கூறி, "யூ டியூப்' இணையதளத்தில் இருந்து சர்ச்சைக்குரிய வீடியோ படத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அமெரிக்க தூதரிடம் வலியுறுத்தி உள்ளோம்.எல்லா மதத்தவரிடமும் ஒற்றுமையையும், சகிப்புத் தன்மையையும் பேணிக் காப்பது அவசியம். மாறாக, வெறுப்பை வளர்க்கும் வகையில் வீடியோ படம் வெளியிடப்பட்டிருப்பது, மனித சமுதாயத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகக் கருதப்படும்.வீடியோ படத்தை கண்டிப்பதாகச் சொன்ன அமெரிக்க தூதர், அமெரிக்க அரசும், இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளதாகக் கூறினார். அமெரிக்க மக்களில் பெரும்பாலானோர், இந்த வீடியோவுக்கு கண்டனம் தெரிவிப்பதாக தூதர் தெரிவித்தார்.இவ்வாறு பாக்., வெளியுறவுத் துறை அமைச்சக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வீடியோ படத்துக்கு எதிராக பாகிஸ்தானில், கடந்த சில நாட்களாக வன்முறைச் சம்பவங்கள் நடக்கின்றன. பெஷாவர் நகரில் இரண்டு சினிமா தியேட்டர்கள், தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. வர்த்தக சபை கட்டடம் எரிக்கப்பட்டது. "டிவி' செய்தி சேனல் ஊழியர் ஒருவர் வன்முறையில் பலியானார்.தொடர் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 6,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
Post a Comment