பிரிட்டனில் இப்படியும் நடந்தது..!
பிரிட்டனில் பத்து நாள் கோமாவில் விழுந்து எழுந்த பெண், 13 ஆண்டு வாழ்க்கையை மறந்து போனார். கணவர், குழந்தைகளை மறந்து, "டீன் ஏஜ்' குமரியாக நினைத்து எழுந்தவருக்கு, எல்லாமே ஆச்சரியம்தான்! "என்ன... பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் இறந்துவிட்டாரா?' என, பல்வேறு கேள்விகளை கேட்டு அசத்தி வருகிறார் அப்பெண்.பிரிட்டனில் டெவான் பகுதியில் உள்ள, வரலாற்றுப் புகழ் பெற்ற நகரான, எக்செடரை சேர்ந்தவர், சாரா தாம்சன், 32. மூளையின் ஒரு பகுதியில் ரத்தம் உறைந்ததால், சில மாதங்களுக்கு முன், திடீரென மயங்கி சரிந்த சாராவை, ஆம்புலன்சில் ஏற்றி, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவர் கோமாவில் மயங்கி உள்ளார் என, பல்வேறு பரிசோதனைகளுக்கு பின், மருத்துவர்கள் கூறினர். "சாரா மீண்டும் பிழைக்க, ஆண்டவன் கண் திறக்க வேண்டும்' என்று கூறி, அவர்கள் கைவிரித்தனர்.இதையடுத்து, சாராவின் மூன்று குழந்தைகளும், கணவர் கிறிசும், பத்து நாளாக மருத்துவமனையே கதியென்று காத்திருந்தனர். அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. மெல்ல கண் விழித்த சாரா, 19 வயது குமரியாக தன்னை நினைத்தபடி, எழுந்து உட்கார்ந்தார். நர்ஸ் உற்சாகத்துடன் தந்த தகவலை அடுத்து அங்கே கூடினர், கணவரும், குழந்தைகளும். எல்லோரையும் மிரள, மிரள பார்த்த சாராவுக்கு, கணவரை மட்டுமே நன்றாக நினைவு இருந்தது. அதுவும், 13 ஆண்டுகளுக்கு முன், இருவரும் காதலில் விழுந்து மோகப்பார்வை பார்த்த நினைவுகள்.
மற்றபடி, திருமணம் ஆனதையும், மூன்று குழந்தைகள் பிறந்ததையும் சுத்தமாக மறந்து விட்டார் சாரா. குறிப்பாக, "என்ன... மைக்கேல் ஜாக்சன் இறந்து விட்டாரா?' என, சாரா, ஆச்சரியமாக கேட்டதைக் கண்டு, கணவர் மிரண்டு நின்றார்.சாராவின் நெருங்கிய உறவினரும், மருத்துவர்களும், 13 ஆண்டில் நடந்தவை என்ன? என்பதை பட்டியலிட்டு விவரித்தபோது, அதிர்ச்சியில் உறைந்தார். பின், கணவரும், குழந்தைகளுமாக சேர்த்து எடுத்த புகைப்படங்களையும், வீடியோவையும் பார்த்து, சிறிது சிறிதாக உண்மை நிலவரத்தை நம்பத் துவங்கினார்.
தற்போதைய மனநிலை குறித்து சாரா கூறியதாவது:குழந்தைகள் என்னை வந்து பார்த்தபோது, அவர்கள் யார் என்றே எனக்கு தெரியவில்லை. வேறொருவரின் குழந்தைகள், என, நினைத்தேன். கரு கருவென தலைமுடியுடன் இருந்த என் தம்பியை, வழுக்கைத் தலையுடன் பார்த்தபோது, நம்ப முடியவில்லை. நடப்பது எல்லாமே புதுசாகத்தான் இருக்கிறது. இருப்பினும், பழைய புகைப்படங்களை பார்த்து நம்ப ஆரம்பித்து இருக்கிறேன்.இவ்வாறு சாரா கூறினார்.
Post a Comment