Header Ads



'திவிநெகும' - முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்க வேண்டுமன வேண்டுகோள்


மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்களை மேலும் குறைக்கும் வகையிலும், நிதி நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையை முற்று முழுதாக இல்லாமல் செய்து அகற்றும் நல்லாட்சிக்கு விரேதமான அம்சங்களை உள்ளடக்கிய வகையிலும் அரசாங்கத்தினால் கொண்டு வரப்படவுள்ள 'திவிநெகும' சட்ட மூலத்திற்கு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தனது ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாண சபையில் இச்சட்ட மூலம் முன்வைக்கப்படும்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸானது அரசுக்கு விசுவாசமாகச் செயற்படுவதைக் காட்டிலும் அக்ட்சியினை இந்நாட்டில் ஒரு தீர்மானிக்கும் சக்தியாக உருப்பெருக்கிக் காட்டிய மக்களுக்கு விசுவாசமாகச் செயற்படுவதிலும், நாட்டின் நல்லாட்சியை உறுதிப்படுத்தும் விடயத்திலும் கூடுதல் கவனம் செலுத்தி அக்கட்சி தனது கடமையைச் சரியாகச் செய்ய வேண்டும் என்றும் அவ்வியக்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,,

சமுர்த்தி அதிகார சபை, தெற்கு அபிவிருத்தி அதிகார சபை மற்றும் உடரட்ட அபிவிருத்தி அதிகார சபை ஆகிய கட்டமைப்புக்களை இல்லாமல் செய்து 'திவிநெகும அபிவிருத்தித் திணைக்களம்' என்ற ஒரு புதிய கட்டமைப்பினை உருவாக்கி ஏறத்தாழ 80 பில்லியன் ரூபா வரையிலான நிதியைக் கையாளக்கூடியதாக 'திவிநெகும' என்ற புதிய சட்ட மூலத்தை பாராளுமன்றத்தினூடாக நிறைவேற்றிக் கொள்வதற்கு அரசாங்கம் தீவிர அக்கறை காட்டி வருகின்றது.

இச்சட்ட மூலமானது பாரிய நிதி நடவடிக்கைகள் தொடர்பில் யாரும் எதுவும் அறிந்து கொள்ள முடியாத வகையில் வெளிப்படைத்தன்மை அறவே இல்லாத ஒன்றாக அமைந்திருப்பதனாலும், மாகாண சபைகளின் அதிகாரங்களை மேலும் குறைக்கும் வகையிலான அம்சங்களைக் கொண்டிருப்பதனாலும் இச்சட்ட மூலத்தை ஆட்சேபிக்கும் மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம் 'திவிநெகும' சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெறுவதற்கு முன்பாக அதனை அனைத்து மாகாண சபைகளிலும் சமர்ப்பித்து அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

இந்நீதிமன்றக் கட்டளைக்கமைவாக கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மேல் மாகாண சபைக் கூட்டத்தில் அச்சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்ட வேளையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 08ம் திகதி நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது இந்த அரசாங்கம் திட்டமிட்டு மாகாண சபைகளின் அதிகாரங்களைக் குறைத்து வருவதாகவும், எனவே கிழக்கு மாகாண சபைக்கான பூரண அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதற்காக தாம் குரல் கொடுக்கப் போவதாகவும் வலியுறுத்திப் பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறு மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமெனப் பிரச்சாரம் செய்து கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களின் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றுக் கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மாகாண சபைகளுக்கு தற்போது வழங்கப்பட்டிருக்கின்ற ஒரு சில அதிகாரங்களையும் மேலும் குறைக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இச்சட்ட மூலத்திற்கு ஆதரவளித்திருப்பதானது அக்கட்சியின் மக்களுக்கு விசுவாசமில்லாத செயற்பாட்டினையே மேலும் நிரூபிப்பதாக அமைந்துள்ளது.

18வது திருத்தச் சட்டத்திற்கு கண்மூடித்தனமாக ஆதரவை வழங்கியதன் மூலம் இந்நாட்டில் நல்லாட்சி நிர்வாகத்திற்கு பக்கபலமாக எஞ்சியிருந்த ஒரு சில அத்திவாரங்களையும் அழித்தொழிப்பதற்கு அரசாங்கத்துடன் இணைந்து துணை போயிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னரும் இவ்வாறு மகாண சபைகளுக்கு இருக்கின்ற அதிகாரங்களையும் மேலும் குறைப்பதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு துணை போவதானது மேலுமொரு வரலாற்றுத் தவறாகவும், துரோகமாகவுமே கருதப்படுகின்றது.

மேல் மாகாண சபையில் இச்சட்ட மூலத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளித்திருப்பது குறித்து அக்கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி. ஹஸன் அலி ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது 'திவிநெகும சட்ட மூலத்தை தான் இது வரை வாசிக்கவில்லை' என்று கூறியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

ஒரு கட்சியின் பொதுச் செயலாளர் என்பவர் அரசாங்கம் முன்வைக்கின்ற இது போன்ற அதிமுக்கியமான சட்ட மூலங்களை மிகவும் உன்னிப்பாக வாசித்தறிந்து அதன் சாதக பாதகங்களை தனது கட்சி உறுப்பினர்களுக்கு எடுத்துக் கூறி அவர்களை ஜனநாயகத்தையும், நல்லாட்சியையும் பேணத்தக்க வகையில் வழி நடாத்த வேண்டிய பொறுப்புள்ளவராவார்.

தனது கட்சியின் சார்பான மக்கள் பிரதிநிதிகள் இவ்வாறானதொரு சட்ட மூலத்திற்கு மாகாண சபையொன்றில் ஆதரவளித்து அங்கீகாரம் அளித்திருக்கின்ற நிலையில், தான் இன்னமும் அச்சட்ட மூலத்தை வாசித்துக்கூடப் பார்க்கவில்லையெனத் தெரிவித்திருப்பதானது அக்கட்சி எவ்வாறு பொறுப்பற்ற முறையில் தொடர்ந்தும் நடந்து கொள்கின்றது என்பதனை மேலும் நிரூபிப்பதாக அமைகின்றது.

இவ்வாறு தொடர்ச்சியாக மக்களின் நலன்களுக்கு விரோதமாகச் செயற்பட்டு வருகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அக்கட்சியின் சந்தர்ப்பவாத அரசியல் நடவடிக்கைகளினால் ஆவேசமடையும் பொதுமக்களை ஆசுவாசப்படுத்தவே 'இச்சட்ட மூலம் தொடர்பாக நாம் கலந்துரையாடிய பின்னரே கிழக்கு மாகாண சபையில் முடிவுகளை எடுப்போம்', 'சிறுபான்மையினரின் அதிகாரப்பகிர்வில் நாம் கவனமாகவே இருப்போம்', 'எந்த சக்திகளுக்கும் விலை போகவோ விட்டுக் கொடுக்கவோ மாட்டோம்' என்றெல்லாம் தமது வழமையான வாய்ச்சவடால் பாணியில் கருத்துக்களைத் தெரிவித்தும் வருகின்றது.

ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் நியமிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீதிடம் 'இச்சட்ட மூலத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு பெறப்படுமா?' என்பது குறித்து ஊடகங்கள் வினவியதற்கு 'ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் கிழக்கு மாகாண சபையிலும் இச்சட்ட மூலத்திற்கான ஆதரவும் அங்கீகாரமும் வழங்கப்படும்' என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலின்போது அரசாங்கத்தின் இவ்வாறான மெத்தனப் போக்குகளுக்கு எதிராகவும், தமக்கு விசுவாசமாகச் செயற்படும் ஆட்சியொன்றினை கிழக்கு மாகாண சபையில் உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கையிலும் வாக்களித்த 132,000த்திற்கும் அதிகமான வாக்காளர்களின் எண்ணங்களும் எதிர்பார்ப்புக்களும் மண்ணாகும் என்றே நம்ப முடிகிறது.

'திவிநெகும' சட்ட மூலம் தற்போது இந்நாட்டில் இடம்பெற்று வரும் வெளிப்படைத்தன்மையற்ற ஆட்சி முறைமையினை மேலும் இருட்டுக்குள் கொண்டு செல்லும். ஏற்கனவே பொதுமக்களின் தகவலறியும் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ள நிலையில் இச்சட்ட மூலத்தின் மூலமாக அமுல்படுத்தப்படவுள்ள அரச அதிகாரிகளின் 'இரகசியம் பேணுகின்ற காப்புப் பிரமாண'மானது, எந்தவிதமான விபரங்களையும் ஊடகங்கள் உட்பட எவராலும் கேட்டுப் பெற முடியாத அபாயகரமான நிலையையே ஏற்படுத்தும்.
இது நல்லாட்சி நிர்வாகத்தின் அடிப்படை அம்சங்களுக்கே முற்றிலும் விரோதமானது என்பதோடு பாரிய நிதி மோசடிகளுக்கும் வழிகோலுவதாக அமையுமென்றே அஞ்சப்படுகின்றது.

எனவேதான் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் இந்தச் சட்ட மூலத்திற்கு எதிராக தனது ஆட்சேபனையைத் தெரிவித்துக் கொள்வதுடன், தேர்தல் காலத்தில் நல்லாட்சி பற்றியும், கிழக்கு மாகாண சபைக்கான கூடுதல் அதிகாரங்கள் பற்றியும் அதிகமாகப் பிரச்சாரம் செய்து மக்களின் ஆதரவைப் பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இச்சட்ட மூலத்திற்கு ஆதரவளிக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொள்ள விரும்புகின்றது.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுத்துவரும் அரசுடன் சரணாகதியாகி அமைச்சுப் பதவிகளைப் பெறும் நோக்குடனான செயற்பாடுகள் குறித்தும், மேல் மாகாண சபையில் 'திவிநெகும' சட்ட மூலத்திற்கு ஆதரவளித்திருப்பது குறித்தும் அக்கட்சியின் பதவி நிலை உயர்பீட உறுப்பினர்கள் பலரும் இப்போது போர்க்கொடி தூக்கியிருப்பதுடன் உடனடியாக கட்சியின் உயர்பீடத்தைக் கூட்டி இத்தகைய நடவடிக்கைகளுக்கு எல்லாம் விளக்கமளிக்குமாறு செயலாளர் ஹஸன் அலிக்கு அவசரக் கடிதங்களையும் அனுப்பியிருப்பதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தப் பதவி நிலை உயர்பீட உறுப்பினர்களின் 'போர்கோல'மானது, முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களித்த கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 132,000த்திற்கும் அதிகமான முஸ்லிம் வாக்களர்களினாலும் காலக்கிரமத்தில் முன்னெடுக்கப்படுமானால் அதுவே தேர்தல் காலங்களில் மு.கா. தலைவர் தனது பிரச்சாரத்தில் வீராவேசத்துடன் குறிப்பிட்டுச் சொல்லி வந்த நம்நாட்டின் 'அரபு வசந்த'மாக இருக்கும் என்பதையும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும்.

கிழக்கு மாகாண சபையின் முதலாவது முன்மொழிவாக இச்சட்ட மூலமே முன்வைக்கப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்படும் இவ்வேளையில் இச்சபையின் எதிர்க்கட்சிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஐக்கிய தேசியக் கட்சியும் இச்சட்ட மூலத்தை எதிர்க்கவுள்ளதாக ஊடகங்கள் மூலம் அறியக் கிடைத்துள்ளது.

எனினும் கிழக்கு மாகாண சபையில் ஆட்சியை அமைப்பதற்காக அரசாங்கத்துக்கு முட்டுக்கொடுத்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸானது இச்சட்ட மூலத்திற்கு தனது ஆதரவை வழங்கி அங்கீகரிக்குமாக இருந்தால் ஏனைய எல்லா மாகாண சபைகளிலும் அரசாங்கம் இச்சட்ட மூலத்தை அங்கீகரிக்கச் செய்வதற்கும், பாராளுமன்றத்தில் சட்டமாக்கிக் கொள்வதற்கும் ஏதுவாக அமையும் என்ற எச்சரிக்கையையும் நாம் தெரிவிக்க விரும்புகின்றோம்.

எனவே, கிழக்கு மாகாண சபையில் இச்சட்ட மூலம் முன்வைக்கப்படும்போது அக்கட்சி அரசுக்கு விசுவாசமாகச் செயற்படுவதைக் காட்டிலும் தம்மை இந்நாட்டில் ஒரு தீர்மானிக்கும் சக்தியாக உருப்பெருக்கிக் காட்டிய மக்களுக்கு விசுவாசமாகச் செயற்படுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வலியுறுத்த விரும்புகின்றது என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.