Header Ads



கிழக்கு மாகாணத்தில் மு.கா. ஆட்சியமைக்க ஆதரவளிப்போம் - சம்பந்தன் அறிவிப்பு

TM

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாகத்தெரிவு செய்யப்பட்டால் அக்கட்சி ஆட்சி அமைப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் ஆதரவளிக்கும். அதுபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனிப்பெரும் கட்சியாக வெற்றியீட்டினால் அது ஆட்சியமைப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு அளிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
 
 பெருந்தன்மையாக தாராளமாக விட்டுக்கொடுத்து முஸ்லிம் மக்களுடன் செயற்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் தயாராக இருக்கின்றது என்றும் சம்பந்தன் திருகோணமலைக்கு வடக்கே உள்ள புல்மோட்டை என்ற முஸ்லிம் கிராமத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடத்தப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.
 
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக திருகோணமலை மாவட்டத்திலிருந்து போட்டியிடும் புல்மோட்டையைச் சேர்ந்த சின்னமரைக்கார் பளீல் மற்றும் முதன்மை வேட்பாளர் சி.தண்டாயுதபாணி ஆகியோரும் கூட்டத்தில் பங்குபற்றினர். சம்பந்தன் மேலும் தெரிவித்ததாவது,
 
 'புல்மோட்டை என்ற பெயரை கனிஜபுர என்று ஜெயவர்த்தனா அரசாங்கம் மாற்றியபோது அதனை எதிர்த்து ஜெயவர்த்தனாவிடம் முறையிட்டேன். அதனை அடுத்து கனிஜபுர என்ற பெயர்ப்பலகை அகற்றப்பட்டது. அதுபோன்று திருகோணமலை நிர்வாக மாட்டத்தின் கீழ் இருந்த புல்மோட்டையை அநுராதபுரம் நிர்வாக மாவட்டத்தின் கீழ் கொண்டு வந்தபோது நான் அதனை எதிர்த்தேன். அதனைத் தொடர்ந்து புல்மோட்டை மீண்டும் திருகோணமலை நிர்வாக மாவட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.
 
புல்மோட்டை முஸ்லிம் மக்களிடம் வாக்குக் கேட்பதற்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு உரித்து உண்டு. புல்மோட்டை முஸ்லிம் மக்கள் எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் வாக்களிக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முன்னுரிமை கொடுத்து வாக்களிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசஸுக்கு வாக்களிக்க வேண்டும். எக்காரணங்கொண்டும் ஆளும் கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது.
 
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனிப்பெரும் கட்சியாகத் தெரிவு செய்யப்படுமிடத்து அதற்கு ஆதரவளித்து ஆட்சி அமைக்க உதவும்படி முஸ்லிம் மக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக தெரிவு செய்யப்பட்டால் அது ஆட்சி அமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் உதவும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையேயான உறவு மகிவும் நெருக்கமாக வளரவேண்டும்.
 
அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையில் இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு காணுவதற்கான சந்தர்ப்பம் உருவாகிவருகின்ற போது தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் பிரிந்து நின்று செயல்பட முடியாது. இரு இனங்களும் ஒற்றுமையாக உறுதியுடன் செயற்பட்டு எதிர்வரும் தேர்தலில் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும்'- என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.

1 comment:

Powered by Blogger.