முஹம்மது நபி அவமதிப்பு திரைப்படத்திற்கு முஸ்லிம் தலைவர்கள் கண்டனம்
முஹம்மத் நபியை இழிவுபடுத்தும் வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்திற்கு எதிராக பொதுச்சபை கூட்டத்தில் முஸ்லிம் நாடுகளின் மன்னர்கள், ஜனாதிபதிகள் மற்றும் ஏனைய நாட்டு தலைவர்கள் கருத்து வெளியிட்டனர். மேற்கு நாடுகள் இஸ்லாத்திற்கு எதிரான பயத்தை கைவிட வேண்டும் எனவும் முஸ்லிம் தலைவர்கள் குறிப்பிட்டனர்.
உலகில் அதிக முஸ்லிம் சனத்தொகை கொண்ட இந்தோனேஷிய நாட்டு ஜனாதிபதி சுசிஸோ பம்பாங் யதயோனோ, இந்த சர்ச்சைக்குரிய திரைப்படம் மற்றுமொரு கொடூரமான மத அவதூறுச் செயல் என்றார். ‘சர்வதேச மனித உரிமை பிரகடனத்தில், அனைவரும் சமூக ஒழுங்கை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதிலே நிச்சயமாக கருத்துச் சுதந்திரம் இடம்பெறவில்லை’ என்றும் இந்தோனேஷியா ஜனாதிபதி குறிப்பிட்டார். அத்துடன் மதம் மற்றும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட வன்முறைச் செயல்களை தடுக்க சர்வதேச கட்டமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அமெரிக்காவின் நெருங்கிய உறவு கொண்ட நாடான ஜோர்தானின் இரண்டாவது அப்துல்லா மன்னரும் இந்த திரைப்படத்திற்கு எதிராக கருத்து வெளியிட்டார். இதில் பாக். ஜனாதிபதி ஆசிப் ஆலி சர்தாரி சர்ச்சைக்குரிய திரைப்படத்திற்கு எதிராக சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுத்தார். ‘கருத்துச் சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்து உலகின் அமைதியை சீர்குலைக்கும் செயலில் ஈடுபடுவோருக்கு எதிராக சர்வதேச சமூகம் ஒரு போதும் அமைதியாக இருக்காது’ என்றும் சர்தாரி பொதுச் சபை கூட்டத்தில் தெரிவித்தார்.
தீவிர மத நம்பிக்கை கொண்டவர்களை தூண்டும் செயலாகவே இந்த சர்ச்சைக்குரிய திரைப்படம் தயாரிக்கப்பட்டிருப்பதாக ஆப்கான் ஜனாதிபதி ஹமீட் கர் சாயி ஐ.நா.வில் கூறினார். இஸ்லாத்திற்கு பயந்தவர்களின் நடத்தை உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
எனினும் எகிப்தின் கொப்டிக் கிறிஸ்தவர் ஒருவரால் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படத்தை தடைசெய்ய முடியாது என பராக் ஒபாமா குறிப்பிட்டிருந்தார். அமெரிக்க அரசியல் அமைப்பு கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பதால் இதனைத் தடை செய்ய முடியாது என ஒபாமா பொதுச் சபை கூட்டத்தில் கூறினார். ‘எமது நாட்டின் ஜனாதிபதி மற்றும் எமது இராணுவத்தின் கட்டளை பிரதானி என்ற வகையில் ஒவ்வொரு நாளும் மக்கள் என்னை மோசமான வகையில் அழைக்கிறார்கள். அதனை நான் அனுமதிக்கிறேன். ஏனென்றால் நான் அவர்களுடைய உரிமையை பாதுகாக்க கடமைப்பட்டிருக்கிறேன்’ என்று ஒபாமா ஐ.நா. உரையில் கூறினார்.
இது தவிர ஐ. நா. பொதுச்சபையின் செவ்வாய்க்கிழமை கூட்டத்தில் கடந்த 18 மாதங்களாக தொடரும் ஈரான் விவகாரம், ஈரான் அணு செயற்பாடு ஆகியனவும் முக்கியமாக பேசப்பட்டன. இதில் கட்டார் நாட்டு தலைவர் ஷெய்க் ஹமத் பின் கலிபா அல்தானி சிரியா மீதான தலையீட்டுக்கு வலியுறுத்தினார்.
சிரியாவில் தொடரும் மோதலை நிறுத்துவதில் பாதுகாப்புச் சபை தோல்வியடைந்துள்ளது. எனவே அரபு நாடுகள் சிரியாவில் தலையிடுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார். அதேபோன்று பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கொயிஸ் ஹெலென்டேவின் ஐ. நா. உரையில் சிரிய தலைமைக்கு எதிர்காலம் இல்லை என்றும் நாட்டில் விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளைக் கொண்ட புதிய அரசு ஐ. நாவினால் பிரகடனப்படுத்தப்படும் என்று கூறினார்.
Post a Comment