Header Ads



ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் எச்சரிக்கை


கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி இலங்கை வாழ் முஸ்லிம்களின் இதயத்தில் குத்திய ஒரு செயலே தம்புள்ளை பள்ளி வாசல் பௌத்த பிக்குளின் பின்புலத்துடன் தாக்கப்பட்ட சம்பம். அன்றைய அத்தாக்குதல் சம்பவம் இடம் பெற்ற போது இலங்கை முஸ்லிம்களின் உணர்வுகளை சீண்டிப்பார்த்து வம்புக்கு இழுக்கும் எத்தனங்களை அரச மற்றும் இனவாத சக்திகளின் உதவியுடன் பேரினவாத சமூகத்தின் சில புல்லுரிவிகள் அரங்கேற்ற முயற்சித்தனர். அல்லாஹ்வின் ஆலயத்தை ‘புனித பூமி’ என்ற போர்வையை போர்த்தி அப்பட்டமாய் கபளீகரம் செய்வதற்குண்டான முயற்சிகளை தீவிரப்படுத்தினர். ஆர்ப்பாட்டங்கள் புரிந்தனர். இத்தனை நடந்தேரியும் அரச தரப்பு மேலிடம் மௌனத்தையே பதிலாக பிரதிபலித்தது.

எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவதாய் தம்புள்ள ரஜமஹா விகார தேரர் “60 நாட்களுக்குள் பள்ளிவாசல் அகற்றப்பட்டு புனித பூமியின் விஸ்தரிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும். தவறினால் ஏற்படும் விபரீதங்களுக்கு புத்தசாசன அமைச்சே பொருப்பேற்க வேண்டும்” என்ற எச்சரிக்கையை மீடியாக்களில் அறிவித்தார்.

அது வரை பள்ளிவாசல் அகற்றப்படுமா? இல்லையா? என்பது குறித்து மறுப்பேதும் பேசாத நிலையில், தொடராக குருநாகல், தெஹிவலை, ராஜகிரிய என்று பள்ளிவாசல்கள் மீதான பௌத்த தாக்குதல்கள் தொடர ஆரம்பித்தன. அப்போதும் வாய் திறக்காத ஜனாதிபதி கிழக்கு மாகாண தேர்தலில் முஸ்லிம்களை ஏமாற்றி அவர்களின் வோட்டுக்களை கொள்ளையிடும் நோக்கில் கல்முனையில் வைத்து ‘எனது அரசு பள்ளிகளை ஒரு போதும் தாக்க மாட்டாது’ என்று கொக்கரித்தார். ஆளும் அரசுக்கு கூஜா தூக்கும் அஸ்வர், ரவூப் ஹகீம், அலவி மௌலானா உள்ளிட்ட பரிவாளங்களும் இதற்கு ஏற்றாற் போல் ஒத்தூதியும், அறிக்கை விட்டும் இனவாத செயற்பாட்டை முழுமையாக மூடிமறைக்க எத்தனித்தனர்.

ஆனால், இவையனைத்தும் முஸ்லிம்களின் வோட்டு வங்கியை இலக்கு வைத்து நகர்த்தப்பட்ட நகர்வுகள் என்பதனை தம்புள்ளை பள்ளி குறித்த புதிய நகர்வுகள் துலாம்பரப் படுத்தி நிற்கிறது. கிழக்கு மாகாண வெற்றியுடன் ரஜ விஹார தேரரின் இரு மாத கால்கெடுவை நிறைவேற்றும் விதமாய் ‘புன்னிய பூமி விஸ்தரிப்புப் பணி என்ற போர்வையில் மீண்டும் தம்புள்ளை பள்ளிவாசல் முற்றாக அகற்றப்படுவதற்குண்டான சகல ஏற்பாடுகளும் கச்சிதமாய் தீர்மானிக்கப்பட்டு முடிவடைந்துள்ளது.

27-09-2012  ஆம் திகதி தம்புள்ளை நகர அபிவிருத்தி அதிகார சபை(UDA)யினால் அனுப்பப்பட்ட கடிதம் பள்ளிவாசல் இடிக்கப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ‘புனித பூமி விஸ்தரிப்பை முன்னிட்டு 1984ம் ஆண்டு கெஸட் அறிவிப்பின் பிரகாரம் புனித பூமி விஸ்தரிப்புப் பணிகள் தொடரவுள்ளதால் எதிர்வரும் 31-10-2012ஆம் திகதிக்கு முன்னதாக தமது இடத்தை விட்டும் வேறு இடங்களுக்கு மாற வேண்டும்’ என்பதை குறிப்பிட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளமை ஆளும் அரசினதும், புத்தசாசன அமைச்சினதும், எமது முஸ்லிம் அரசியல் வாதிகளினதும் பித்தலாட்டத்தையே தோலுறித்துக் காட்டுகிறது.

பல்லின சமுதாயம் கூடி வாழும் நாட்டில், அரசியல் சாசனம் எமக்குத் தந்த மத வழிபாட்டு உரிமையை தட்டிப்பறித்து, புனித பூமி என்ற பூச்சாண்டி காட்டி எம் புனிதத் தளங்களை இனவாத சக்திகள் கபளீகரம் செய்ய எத்தனித்தால் முஸ்லிம்களாகிய நாங்கள் அதனை ஒரு போதும் பொருத்துக் கொள்ள மாட்டோம் என்பதனை ஆணித்தரமாய் அரசுக்கு சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறோம். அது மட்டுமன்றி, பதவிகளுக்காய் சமூகத்தை பகடைக் காய்களாய் மாற்றி பலிகடாவாக்க நினைக்கும் போலி முஸ்லிம் தலைமைகளுக்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் எச்சரிக்கை விடுக்கிறது.

நீங்கள் உங்கள் கடமையினை செய்யாது, பதவிகளுக்கு சோரம் போவீர்கள் என்றால், அவ்வெற்றிடத்தை சட்ட ரீதியான அணுகு முறைகளுடன் எதிர் கொள்வதற்கும், எமது சமூகத்தின் உரிமையை வென்றெடுப்பதற்காய் உயிரை பணயம் வைத்தாவது இறுதி வரை போராடுவதற்கும் அல்லாஹ்வை மட்டும் அஞ்சி செயற்படக் கூடிய இந்த ஜமாஅத் தயாராகிவிட்டது என்பதனை சொல்லிக் கொள்கிறோம்.

அமெரிக்க நரித்தனத்தின் காயங்களின் வடு ஆறுவதற்கு முன்னர் இலங்கை அரசு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் துரோகத்தை செய்யுமாயின் அதற்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஒருபோதும் இடமளிக்க மாட்டாது என்பதனையும் அறிவித்துக் கொள்கின்றோம்!


4 comments:

  1. இன்ஷா அல்லாஹ் நாம் எல்லோரும் ஒன்றுபடுவோம்...

    ReplyDelete
  2. ஏய் அல்லாஹ்வை அஞ்சும் முஸ்லிம்களே எங்கே நீங்கள்,அல்லாஹ்வின் வீட்டை காப்பதற்கு துணிய மாட்டீர்களா?இங்கேயும் இயக்க வேறுபாட்டை காட்டப்போகிறீர்களா? அப்படியானால் நீங்கள் முஸ்லிம்கள் இல்லையா? அப்படியானால் ????? முனாபிக்குகளா?

    ReplyDelete
  3. இன்ஷா அல்லாஹ் நல்லதே நடக்கட்டும்.நாட்டை அபிவிருத்தி செய்யவும்,பயங்கரவாதத்தை ஒழிக்கவும் தான் அரபுகளும்,இஸ்லாமிய நாடுகளும் தேவை.இன வெறி அரசியல்,ஆணவம்,அகங்காரம் வென்றதாக சரித்திரம் இல்லை இலங்கையில் ஆசியன் வசந்தத்தைமிக விரைவில் எதிர்பார்க்கலாம்.முஸ்லிம் பெயர்தாங்கி அரசியல்வாதிகள் என்ன செய்யப்போகிறார்கள்.நாட்டின் அதிபர் எல்லாம் நடந்து முடிந்த பின் அப்படி யாரும் எதுவும் சொல்லவில்லை என
    நாடகமாடுவார்.இலங்கையில் முன்றாவது அணிவயொன்று உருவாகும் சூழ்நிலையை அரசே உருவாக்குகிறது.சத்தியம் எதுவென தெரிந்தும் வேற்றுமையில் ஒற்றுமை என பசப்பு வார்த்தைகளை சொல்லியது .போதும்.இனிமேலாவது ஜமாஅத்துகள் ஒன்றுபடவும்.எந்த ஜமாஅத் என்று பார்த்து அடி விழாது.

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Powered by Blogger.