ஹஜ் பயணம் தொடர்பில் அமைச்சர் பௌஸியின் விளக்கம்
முஸ்லிம் கலாசார திணைக்களத்தில் பதிவிலக்கம் 3155க்கு உட்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு இதுவரை கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இவர்கள் நிச்சயம் ஹஜ் கடமையை நிறைவேற்ற செல்வார்களெனவும், முகவர்கள் இவர்களை நிராகரித்தாலும் அவர்களை ஹஜ்ஜூக்காக அனுப்புவது எங்களது பொறுப்பாகுமெனவும் அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் இருந்து 2012ஆம் ஆண்டு ஹஜ் கடமையினை நிறைவேற்று வதற்கு சுமார் 6400 பேருக்கு அதிகமானவர்கள் மு.ச.ப.அ. திணைக்களத்துக்கு விண்ணப்பித்துள்ளனர். பொதுவாக இலங்கைக்கான கோட்டா வரையறுக்கப்பட்டுள்ளதால் வருடாந்தம் இலங்கையிலிருந்து ஹஜ் கடமையினை மேற்கொள்ள செல்லும் ஹாஜிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. கடந்த வருடம் இலங்கைக்கு 3800 கோட்டா கிடைத்தது.
இலங்கைக்கான கோட்டா வரையறுக்கப்பட்டிருப்பதன் காரணமாக கடந்த காலங்களில் பலமுறைகேடுகள் ஹஜ் விவகாரங்களில் நிகழ்ந்துள்ளதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
சில முகவர் நிலையங்கள் ஹஜ் காலத்திற்கு முன்பதாகவே ஹாஜிகளி டமிருந்து முன்கூட்டியே பணத்தினை பெற்று ஹஜ் காலம் நெருங்கியதும் எமக்கு போதிய கோட்டாவை அமைச்சர் அல்லது திணைக்களம் தரவில்லை போன்ற குற்றச்சாட்டுகளை விடுத்து, அதிக பணத்தை செலுத்திய ஹாஜிகளை மாத்திரம் அழைத்துச் சென்ற முறைப்பாடுகள் அநேகம் கிடைக்கப்பெற்றன. இதனை தடுக்கும் முகமாக இம்முறை ஹஜ்ஜிக்கு செல்ல உத்தேசித்துள்ள ஒவ்வொரு ஹாஜிகளிடமிருந்தும் மீளளிக்க கூடிய 25,000 ரூபாவினை அறவிடப்பட்டது.
இதுவரை 2800 கோட்டாவே கிடைக்கப்பெற்றுள்ளது. அவற்றை மு.ப.அ.தி. பதிவுக்கு இணங்க முதல் 2800 விண்ணப்பதாரிகளை தெரிவு செய்து அவர்களுக்கான கடிதங்களை அனுப்பியுள்ளோம். இதில் முதன் முறையாக ஹஜ்கடமையை நிறைவேற்றுகின்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளோம்.
கட்டணம் ஹஜ்ஜூக்குரிய கட்டணம் 425,000 ரூபாவை அறிமுகம் செய்துள்ளோம். தற்போது பத்திரிகை, வானொலி உட்பட ஊடகங்களில் பல்வேறு விதமான விளம்பரங்கள் முகவர் நிலையங்களால் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இதனைக் கண்டு ஏமாற வேண்டாமெனக் கேட்டுக் கொள்வதுடன் முகவர் நிலையங்களில் வழங்கும் சேவைகளை மிகத் தெளிவாக எழுத்து மூலம் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றேன்.
Post a Comment