Header Ads



கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவரின் ஜனாஸா மீட்பு (படம் இணைப்பு)



பிரதான படம் - எம்.எம்.ஜெஸ்மின்

மேலதிக படங்கள் அபூதீனா

தகவல் - அஸ்லம் எஸ்.மௌலானா

கடந்த 22 ஆம் திகதி சனிக்கிழமை கல்முனையில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக சென்று காணாமல் போன சாய்ந்தமருது மீனவர் இன்று வியாழக்கிழமை காலை ஜனாஸா மீட்கப்பட்டுள்ளது. சாய்ந்தமருது -10 முந்திரியடி வீதியைச் சேர்ந்த எம்.வை.ஏ.லத்தீப் (வயது-52) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்.

கடந்த சனிக்கிழமை கல்முனை கடற் பரப்பிலிருந்து இயந்திரப் படகு ஒன்றில் ஆழ்கடல் மீன் பிடிப்புக்காக சென்ற மூன்று மீனவர்கள் தமது பணிகளை முடித்துக் கொண்டு மறுநாள் ஞாயிறு அதிகாலை திரும்பி வரும்போது படகை செலுத்தி வந்த மேற்படி மீனவர் ஏதோ ஒரு காரணத்தின் பேரில் படகில் இருந்து தவறி கடலில் விழுந்துள்ளார் எனக் கூறப்பட்டது.

இதன்போது நித்திரையில் இருந்த மற்ற இரு மீனவர்களும் சில நிமிடங்களில் விழித்துப் பார்க்கும் போது படகுச் சாரதியான சக மீனவர் இல்லாமல் படகு தத்தளிப்பதை கண்ணுற்று தமக்கு அண்மித்த பகுதியில் படகில் சென்று கொண்டிருந்த மீனவர்களின் உதவியை நாடியதன் பேரில் அவர்கள் இருவரும் காப்பாற்றப்பட்டனர். 

இதனைத் தொடர்ந்து அவர்கள் வழங்கிய தகவலின் பேரில் படகு உரிமையாளர் சங்கம் பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டை அடுத்து கடற் படையினரும் விமானப் படையினரும் சில நாட்கள் தொடர்ச்சியாக தேடுதல் நடத்தி வந்தனர். எனினும் அந்த முயற்சி வெற்றி அளிக்காத நிலையில் தேடும் நடவடிக்கைகள் கை விடப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்று அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்களினால், காணாமல் போன குறித்த மீனவரின் ஜனாஸா கண்டுபிடிக்கப்பட்டு அவர்களது உதவியுடன் உறவினர்கள் அதனை மீட்டுக் கொண்டு வந்துள்ளனர் என்று அறிவிக்கப்படுகிறது.

சம்பவத்தின் போது படகில் இருந்த கல்முனைக்குடியை சேர்ந்த ஏனைய இரு மீனவர்களிடமும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். உயிரிழந்ததாக கருதப்படும் மீனவர் கடந்த இருபது வருடங்களாக கடற்றொழிலில் ஈடுபட்டு வந்தவர் என்று அவரது குடும்ப உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

இவர் இரு பிள்ளைகளின் தந்தையாவார். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டவர்கள் என்றும் அந்த உறவினர் தெரிவித்தார்.








1 comment:

  1. இன்னாலில்லாஹி வயின்னாஹ் இலைஹி ராஜியுன்

    ReplyDelete

Powered by Blogger.