அஷ்ரப் சிஹாப்தீனுக்கு மொழிபெயர்ப்புச் சிறுகதை நூலுக்கான சாஹித்திய விருது (படம் இணைப்பு)
அனா
அஷ்ரஃப் சிஹாப்தீன் மொழிபெயர்த்த 'ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்' நூல் இவ்வாண்டின் சிறந்த மொழிபெயர்ப்புச் சிறுகதை நூலுக்கான சாஹித்திய விருதைப் பெற்றிருக்கிறது.
இன்று (30.09.2012) வெயங்கொட சியனே தேசிய கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் அஷ்ரஃப் சிஹாப்தீன் தனது விருதைப் பெற்றுக் கொண்டார்.
'ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள்' அறபுச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பாகும். ஈராக், சிரியா, எகிப்து, சூடான், பலஸ்தீன், எமன், மொரோக்கே, ஓமான், லிபியா ஆகிய நாடுகளின் சிறுகதை எழுத்தாளர்களின் பத்துச் சிறுகதைகள் இத்தொகுதியில் அடங்கியுள்ளன. அறபுச் சிறுகதைகள் தமிழுக்கு மொழிமாற்றம் செய்து வெளிவந்த முதலாவது நூல் இது என்றும் கருதப்படுகிறது.
அஷ்ரஃப் சிஹாப்தீன் முதலாவது தேசிய சாஹித்திய விருதை 2009ம் ஆண்டு தனது கவிதைத் தொகுப்பான 'என்னைத் தீயில் எறிந்தவர்' நூலுக்குப் பெற்றார். 2010ல் வெளிவந்த பலரதும் கவனத்தை ஈர்த்த 'ஒரு குடம் கண்ணீர்' என்ற நூல் 2011ம் ஆண்டு தேசிய சாஹித்திய விருதுக் குழுவினரால் சிறந்த நூலுக்கான சான்றிதழ் பெற்றது. 2011ம் ஆண்டு காயல்பட்டினத்தில் நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் 'தமிழ்மாமணி' விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்ட மூவரில் அஷ்ரஃப் சிஹாப்தீனும் ஒருவராவார்.
கல்குடாப் பிரதேசத்தில் தேசிய சாஹித்திய விருது பெற்ற மூன்றாவது படைப்பாளி அஷ்ரஃப் சிஹாப்தீன் ஆவார். காலஞ் சென்ற வை.அகமத் அவர்கள் தனது 'புதிய தலைமுறைகள்' நாவலுக்காகப் பெற்ற பெற்ற விருதே கல்குடா பிரதேசத்துக்குக் கிடைத்த முதலாவது தேசிய சாஹித்திய விருதாகும். அதனைத் தொடர்ந்து 'மக்கத்துச் சால்லை' சிறுகதை நூலுக்கான விருதை எழுத்தாளர் எஸ்.எல்.எம். ஹனீபா பெற்றார்.
இம்முறை விருதுபெற்ற பத்துப் பேரில் ஐந்து முஸ்லிம்கள் அடங்குகிறார்கள். திக்குவல்லை கமால், ஆர்.எம். நௌஷாத், பாலமுனை பாரூக், எஸ்.ரிஷான் ஷெரீப் ஆகியோரே விருது பெற்ற ஏனைய முஸ்லிம் படைப்பாளிகளாவர். எஸ்.ஏ. உதயன், நந்தினி சேவியர், ச.முகுந்தன், சுஜந்தன், கந்தையா ஸ்ரீகந்தவேள் ஆகியோரே விருது பெற்ற தமிழ்ப் படைப்பாளிகளாவர்.
கல்குடா இலக்கியப் பரப்பில் அஷ்ரப் சிஹாப்தீன் பெற்றிருக்கும் இந்த விருதானது கல்குடாவில் இலக்கியம் பெற்ற மூன்றாவது குழந்தையாகும். இலக்கியம் என்ற வட்டத்திற்குள் நின்று செயற்படும் எம்மவர்கள் அரசியல் என்ற மற்றொரு வட்டத்திற்குள் காலடி எடுத்து வைக்கும் போது அதில் அவர்கள் நற்பெயரை பெற முடியாத நிலைதான் காணப்படுகின்றது.
ReplyDeleteமர்ஹூம் வை.அஹமத் தனது காலத்திற்குள் நேரடியான அரசியலில் ஈடுபடாததினால் அவர் அரசியல் என்ற விமர்சனத்திற்கு ஆட்படவில்லை,
ஆனால் எஸ்.எல்.எம் ஹனிபா மு்ஸலிம் காங்கிரஜினுாடாக வட-கிழக்கு மாகாண சபை உறுப்பினராக சென்றததன் பின் இலக்கியத்தில் அவருக்கு இருந்த மதிப்பு அரசியல் செயற்பாடுகளால் சிதைக்கப்பட்டது. அதேபோன்று அஷ்ரப் சிஹாப்தீன் அவருடைய சகோதரர் எம்.எஸ.எஸ் அமீர் அலியின் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டமையால் அவருக்கு இருந்த மதிப்பு அரசியல் மேடைகளில் காட்டமாக விமர்சிக்கப்பட்டு வருவதை நாம் அவதானிக்கின்றோம்.
எனவே, இலக்கிய காரர்கள் அரசியலில் ஜெய்ப்பது என்பது கல்குடாவில் சுவாத்திய நிலைக்கு பொருத்தமாக இருக்கப்போவதில்லை என்ற அனுபவங்களை கல்குடா இலக்கியப் பரப்பு எமக்கு தந்திருக்கின்றது என்பதை நாம் கசப்பான உண்மையாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்