பேரம் பேசும் சக்தியான முஸ்லிம் காங்கிரஸ் இன்று சோரம் போன சக்தியான நிலையில்..!
ஜெஸ்மி எம். மூஸா
(நவமணி)
முஸ்லிம் காங்கிரஸை நம்புவதனை விட அதாவை அரசு அதிகம் நம்புகிறது
பிக்குகளின் தலையீட்டால் நிறுத்தப்பட்ட பொத்துவில் காதி நீதிமன்றப் பணியை தொடர முடியாத கையாலாகாத நிலையில் மு.கா.
மிகவும் ஆவலுடன் எதிர் பார்த்திருந்த கிழக்கு மாகாண சபையின் ஆட்சி பீடமும் அமைச்சியல் பங்கீடும் உப்புச் சப்பில்லாமல் நடந்தேறி அமைச்சியல் என்ற பழுத்த போராளி ஒருவரின் அலுத்து விட்ட குமுறலோடு இந்த அலசலுக்குள் நுழைகின்றோம்.
முதலமைச்சர் பதவி மட்டுமல்ல, நீங்களே ஆட்சி அமையுங்கள் நாம் பார்வையாளராக இருக்கின்றோம் என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் வேண்டுகோளையும் இடைநடுவில் விட்டு விட்டு இறுதிநேர சந்திப்பிலும் ஏமாற்றத்தைக் கொடுத்து விட்டு இரவோடு இரவாக அரசின் பக்கம் சேர்ந்து முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கின் ஆட்சிப் பங்காளியாகியுள்ளது.
சம்பந்தனின் அழைப்பினை முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றிருக்க வேண்டும் என கிழக்கு மாகாணப் போராளிகளின் ஒரு பகுதியினர் விரும்பிய போதிலும் கூட்டமைப்புடனான உறவு உகந்ததல்ல என்பதே கட்சிக்குள் எழுந்திருந்த பரவலான வாதம். இதற்குள் சிலருக்குத் தனிப்பட்ட அஜந்தாக்கள் இருந்த போதிலும் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை பள்ளிவாசல் படுகொலைகள் போன்ற பல்வேறு சந்தர்ப்பங்களின் போது யதார்த்தத்தை மறந்து மௌனியாக இருந்த கூட்டமைப்பின் பழுத்த தலைகள் இன்று அடி நிலைக்கு வந்தாலும் கூட அவர்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதும் நியாயமானதே.
இது போன்ற சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைவது ஆரோக்கியமான முடிவல்ல எனத் தலைமை யோசித்திருந்தால் அடுத்து இரு வழிகள் உண்டு. ஒன்று தனித்து இயங்குவது அல்லது தேவையான சந்தர்ப்பங்களில் ஆதரவளித்து தமது உரிமைகளை நோக்கி நகர்வது. மற்றது தமது பேரம் பேசும் சக்தியை வைத்து அரசுடன் வலுவான ஒப்பந்தம் ஒன்றுடன் ஆட்சிப் பங்காளியாவது. அவ் ஒப்பந்தத்தின் மிகப் பெரும் எதிர்பார்ப்புக்களோடு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புக்களையும் அபிலாஷைகளையும் பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும்.
அம்பாறை கரையோர மாவட்டம் தென்கிழக்கு அலகு முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்தல் தமிழ் பேசும் அரச அதிபர்கள் பொலிஸ் நிருவாகப் பங்கு, ஒப்படைக்கப்படாத வீடுகளை மீளப் பெறல் என எத்தனையோ உரிமைகள் மேடைகளில் முழங்கப்பட்டும் அவைகளே மறைந்த தலைவர் அஷ்ரபின் கனவாக இருந்த போதும் அவை எதுவுமே இல்லாமல் பேரம் பேசும் சக்தியை இழந்து, அரசுக்கு அனைத்தையும் தாரை வார்த்து கோமாளித்தனமாக அரசின் பங்காளியாக மாறி இருப்பது குறித்து போராளிகளிடம் ஆத்திரம் மட்டுமல்ல, பலமான சந்தேகமும் எழுந்துள்ளது.
அரசிலிருந்து வெளியேறினால் தமது அமைச்சுப் பதவியும் கண்ணியமும் பறிபோய்விடும் என்று எடுகோளை எடுத்தாலும் பொத்துவில் பகுதியில் கட்டப்பட்ட காதி நீதிமன்றப் பணியை பிக்குகளின் கெடுபிடியைத் தளர்த்தி விட்டு முன்னெடுக்க முடியாத நிலையில் ஜே.பி. பதவிகளை வழங்குவதற்கான இவ் அமைச்சுப் பதவி எதற்கு? என்ற எதிரணியினரின் கேள்வி நியாயமானதாகவே தோன்றுகின்றது.
தேர்தல் முடிந்ததும் மக்கள் எதிர்பாராத வகையில் நாம் முடிவெடுப்போம் எனத் தனக்கே உரித்தான பாணியில் மருதமுனை கடற்கரை இப்தார் நிகழ்வில் கூறியதன் முடிவு எப்போது?
திருமலை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நஜீப் ஏ. மஜீத் கிழக்கு மாகாணத்தின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார். அது மகிழ்ச்சியானதே. எனினும் முஸ்லிம் காங்கிரஸின் ஊடாகவே அந்த முதலமைச்சர் வர வேண்டும் என எதிர்பார்த்திருந்த போராளிகளுக்கு இது ஏமாற்றமே. சரி, அதன் முதல் இரண்டரை வருடத்தையாவது தங்களால் பெற முடிந்ததா என்றால் அதுவும் இல்லை. பின்னாலுள்ள இரண்டரை வருடத்தையே நாமே பொறுப்பேற்போம் இல்லாவிட்டால் அரசு பாரிய விளைவுகளை எதிர் நோக்க வேண்டிவரும் என மு.கா. செயலாளர் ஹஸன் அலி அறிக்கை விட்டாலும் முன்னர் விட்ட அறிக்கைகள் பல காற்றாக மாறிய நிலையில் இது கூட சாத்தியமாகப் போகிறதா? என்பதனை நடந்ததன் பின்னர்தான் நம்பவுள்ளனர் கட்சிக்காரர்கள்.
தனக்கு இரண்டரை வருட விடயம் பற்றி தெரியாது எனக் கூறுவதாகக் கசிந்துள்ள நஜீப் ஏ. மஜீதின் கூற்றில் உண்மை இருக்குமானால் முதலமைச்சர் பதவியும் கோட்டை விட்ட கதையாகி விடும்.
நஜீப் ஏ. மஜீத் சுதந்திரக் கட்சிக்காரர் என்பதனால் இது அரசாங்கத்தின் முதலமைச்சாகும். முஸ்லிம் காங்கிரஸின் பேரம் பேசும் சக்தியின் மூலம் ஜனாதிபதியால் முன் மொழியப்பட்ட முதலமைச்சரை வழிமொழிந்து ஆசனத்தில் அமர்த்தி இருக்கிற முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் நிச்சயம் நியமிக்கப்படுவார் என்ற அமைச்சர் ஹக்கீமின் வார்த்தைச் சித்து போராளிகளுக்கு விளங்காமல் இல்லை.
முதலமைச்சராவதற்காகவே போட்டியிடுகின்றேன் எனக் கூறி களமிறங்கிய அமீர் அலி அலரி மாளிகைக்குள் சென்று ஓரிரு மணித்தியாலங்களின் பின் தோற்றுப் போனார். தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பதவி விலகி அதனுõடாக அமீர் அலியைப் பாராளுமன்றத்திற்கு அனுப்பி பிரதியமைச்சர் பதவியொன்றை கொடுக்கக் காய் நகர்த்தப்படுகின்றது. நான்கு உறுப்பினர்களைத் தன் கட்சி சார்பாக வைத்திருக்கும் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் பேரம் பேசும் நகர்வே இது.
முதலமைச்சர் பதவியின் போட்டி நிலையில் முன்னணியாளர்களில் ஒருவராக இருந்த பிள்ளையான் திடீரென ஜனாதிபதியின் ஆலோசகராகி அமைச்சுப் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.
அமீர் அலி பாராளுமன்றம் சென்றால் ஜனாதிபதியின் அடுத்த நகர்வில் உள்ள அலி சாஹிர் மௌலானா மாகாண சபை உறுப்பினராவார். முஸ்லிம் காங்கிரஸின் ஏழு உறுப்பினர்களின் சம்மதக் கடிதங்களையும் பெற்றே ஆட்சிபீடமேறியுள்ளோம் எனக் கூறும் அரசாங்கம் முஸ்லிம் காங்கிரஸிற்கு அட்டகாசமில்லாத இரு அமைச்சுக்களையே கொடுத்திருக்கின்றது. அரச தரப்பு ஆசிர்வாதத்துடன் விமலவீர திசாநாயக்க மீண்டும் கல்வியமைச்சர் ஆகியுள்ளார்.
எஞ்சியுள்ள ஓர் அமைச்சினையும் பெறுவதற்கு உரித்துடைய போட்டித்தன்மையுடையவர்களாக இருந்த அமீர் அலியும் பிள்ளையானும் ஆட்டத்திலிருந்து விலக்கப்பட்டதனால் அது அதா அணியின் உதுமாலெப்பைக்கே போகும் என்பது சிறுபிள்ளைக் கணக்கிலும் சமனாகும்.
எவ்வளவோ இடவுகளையும் காய் நகர்த்தல்களையும் செய்த அரச தரப்பு போனஸ் ஆசனத்தில் ஒன்றை அம்பாறையில் கூட்டமைப்பில் தோல்வியடைந்த சிங்களவர் ஒருவருக்கு வழங்கியது. கடந்த மாகாண சபைத் தேர்தலை விட அம்பாறை சிங்கள வாக்குகள் இம்முறை குறைவடைந்துள்ளது. அதா அணி சொற்ப வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களைப் பெற்றுள்ள நிலையில் சிங்களவர்களுக்குள் எழும் சிந்தனை மாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இம்முயற்சி என அதாவின் ஆதரவாளர்கள் இதனைப் பார்க்கின்றனர்.
முஸ்லிம் காங்கிரஸை நம்புவதனை விட அதாவை அரசு அதிகம் நம்புகிறது. பள்ளி உடைப்பென்ன காணிப்பகிர்வென்ன எந்த விடயமாயினும் அரசுக்கு எதிராக ஒரு வார்த்தையேனும் பேசாத கொள்கை ஜனாதிபதிக்குப் பிடித்திருக்கலாம். ஹக்கீம் குழுவினரை நம்பி அதா றிஷாட்டை கைவிட அரசு விரும்பாது. இவர்கள் இடையில் விட்டு விட்டு ஓடி விட மாட்டார்கள் என்ற எண்ணம் ஜனாதிபதிக்கு இருக்கிறது என்கிறார் விடயம் அறிந்த ஒருவர்.
கைபட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம் என்ற நிலை முஸ்லிம் காங்கிரஸுக்கு இருந்த போதும் அதன் முடிவுகளுக்குப் பின்னால் உள்ள பேரம் பேசும் சக்தி தாரை வார்க்கப்பட்டிருக்கின்றது என்பதுதான் உண்மை.
பேரம் பேசும் சக்தி என்பது பலமான ஒப்பந்தங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். சந்திரிகா அஷ்ரப் ஒப்பந்தம் என்பது பேரம் பேசும் சக்தியின் பலத்தின் வெளிப்பாடு. அது ஒரு காலத்தின் எதிர்காலச் சரித்திரம். இவ்வாறு வெளிப்படையாகப் பெயர் கூறி ஒப்பந்தம் செய்ய முடியாதளவு இன்றைய முஸ்லிம் காங்கிரஸின் நிலை இருக்கிறது என்றால் பேரம் பேசுதல் என்ற சொல்லின் அல்லது ஆணையின் பொருள் என்ன?
அரச அனுமதியுடன் கரையோர மாவட்டம் விரைவில் வர்த்தமானியில் இடப்படும் என்ற செய்தியும் உயர் மட்டத்திலிருந்து கசிந்து வந்துள்ளது. இதுவாவது நடக்குமானால் போராளிகளின் அலைந்து போயுள்ள உணர்வுகளை மீள இழுத்து உரம் கொடுக்கலாம்.
தொலைக்காட்சி நேரடி விவாதங்களைத் தொடர்ந்தும் மறுதலித்து வந்த அமைச்சர் ஹக்கீம் திடீரென கடந்த ஞாயிற்றுக்கிழமை தோன்றினார். விஜயகாந்துடன் வடிவேல் சண்டைக்காட்சியில் தோன்றுவது போல் இருந்தது அமைச்சர் ஹக்கீமுடன் பாராளுமன்ற உறுப்பினர் வேலாயுதம் வந்திருந்தது.
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி அமைத்தாலும் எனக்குப் பிரச்சினை இல்லை என ஜனாதிபதி கூறியும் தன்னால் ஜனாதிபதியை எதிர்த்துச் செல்லத் துணிவில்லை என்ற கருத்துப்படப் பேசிய ஹக்கீம் தங்களது எதிர்த்தரப்பினருக்கு அதிகாரங்கள் கிடைக்கக்கூடாது என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோம் என்றார். ஹஸன் அலியும் ஊடகவியலாளர் மாநாட்டில் அதா அணியினருக்கு அதிகாரம் கிடைக்க நாம் விட மாட்டோம் என வீறாப்புப் பேசினார். ஆனால், மறுநாள் முன்னாள் அமைச்சர் உதுமானுக்கு பழைய அமைச்சு மீண்டும் கிடைத்துள்ளது.
போராளிகளை ஆசுவாசப்படுத்தி, உணர்வேற்றிய நிலையில் முஸ்லிம் காங்கிரஸினால் எடுக்கப்பட்ட எல்லா முடிவுகளும் போராளிகளைத் தோல்வியடையவே செய்திருக்கிறது. மக்களிடம் வந்து அவர்களது கருத்துக்களை அறிந்தே முடிவு எடுப்போம் எனக் கூறிய கட்சித் தலைமை அதற்குச் சந்தர்ப்பம் கொடுக்காமல் எதிர்பார்ப்புக்கள் ஒவ்வொன்றையும் சுக்கு நுõறாக்கி இருப்பது கட்சியின் முன்னெடுப்புக்களில் தளர்ச்சியையே உண்டுபண்ணி இருக்கிறது.
முதலமைச்சர் நியமனத்தில் தொடங்கி அமைச்சு ஒதுக்கீடு, அதா அணிக்கான அமைச்சு பங்கீடு என அனைத்திலுமே மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளையும் மறந்து முஸ்லிம் காங்கிரஸ் விட்டுக் கொடுப்புக்களோடு நடப்பது ரோசமுள்ள போராளிகளுக்கு மேலும் கடுப்பை உண்டாக்கி இருக்கிறது.
இத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸிற்கு கிடைத்த வாக்குகளில் சுமார் 20 ஆயிரம் வரை பள்ளி உடைப்புக்கும் காணி சுவீகரிப்புகளுக்கும் எதிராகக் கிடைத்தவைகளாகும். இவ் ஆணை பேரம் பேசும் சக்தியாக மாறிய போதும் அதனை முஸ்லிம் காங்கிரஸ் தலைமை பயன்படுத்தத் தவறியுள்ளது. இதனால் மேலதிகமாக வந்த வாக்குகள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பி விடவும் கூடும்.
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தேர்தல் மேடைகளில் கூறியதுபோல் எல்லாவற்றையும் மறந்து தேர்தல் காலங்களில் மக்கள் ஒரே தவறையே மீண்டும் செய்ய முனைந்தால் எமக்கான உரிமையென்பது எதிர்பார்த்து எதிர்பார்த்து மறுக்கப்படுகின்ற ஒன்றாகவே மாறி விடும்.
அதாஉல்லாவின் கொட்டத்தை அடக்குவோம். அவரது ஆட்களுக்கு அமைச்சுப் பதவி கொடுக்க மாட்டோம் என்றெல்லாம் தோல்வியடைந்து போகின்ற வீர வார்த்தைகளை வீசுவதனை நிறுத்தி விட்டு மக்களால் அமானிதமாக தரப்பட்ட வாக்குகளுக்கான பேரம் பேசும் சக்தியை முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறு அர்த்தமுள்ளதாக்கியுள்ளது என்பதே தற்போதைய விடை தேடப்படுகின்ற வினாவாகும்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைமை அப்படி சும்மா ஒன்றும் தாரை வார்த்துக் கொடுக்கவில்லை. காலம் வரும்போது அதனைச் செய்து காட்டுவோம். இதனை நாம் காட்டமாகத் தெரிவிக்கின்றோம். என்கின்ற தலைவர் ஹக்கீமின் தனியார் தொலைக்காட்சி அறிக்கையாவது மக்களால் நம்பப்படுமானால் இதன் அர்த்தத்தையாவது முஸ்லிம் காங்கிரஸ் செயலில் காட்டுமா?
முஸ்லிம் காங்கிரஸின் உள்ளூர் தலைமைகள் உண்மைப் போராளிகள், ஏதோ நடக்கப்போகிறது என நம்பி ஒன்றுபட்ட அனைவருமே இன்று கட்சித்தலைமையின் மீது நம்பிக்கை இழந்து நிற்கின்றனர். இதனை மீள இழுத்து நிறுத்துவதற்குத் தலைமை என்ன செய்யப் போகிறது? அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்திலும் கால தாமதமாகும் பட்சத்திலும் மாற்று அணியினர் மீதான திசை திரும்பல் அதிகரிக்கலாம்.
உரிமைகளும் இல்லை. அபிவிருத்திக்கான பதவி வழிகளும் இல்லை. எம்மைவிட இரண்டு மடங்கு வாக்குகளைக் குறைவாகப் பெற்று மூன்று ஆசனங்களோடு உள்ளவர்களுக்கும் ஒரு பெறுமதி மிக்க அமைச்சு பேரம் பேசும் சக்தியோடு சென்ற எமக்கும் இரண்டு அமைச்சுப் பதவி என்கின்ற ஒப்பீடுகள் காலப் போக்கில் மாற்றங்களுக்கு வழி வகுக்காது என உறுதிபடக் கூற முடியாது. எதிரணியினருக்குப் பாடம் புகட்டுவோம் என அடிக்கடி கூறி மக்களின் உணர்வுகளோடு உரசிப் பார்க்கின்ற விசப் பரீட்சையில் உசாரடையும் மக்கள் ஒரு முறை முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கும் அதனோடு இணைந்த முடிவு காரர்களுக்கும் பாடம் புகட்ட வெளிக்கிட்டால் நிலைமையை சீராக்கம் செய்வதென்பது எட்டாக் கனியாகி விடும்.
விரால் இல்லாத குளத்திற்கு குறட்டை ராசா என்ற கதையல்ல தற்போதைய அரசியல் களம். மாற்று அணியினரும் பல்வேறு அதிகாரங்களுடனும் ஆளுமைகளுடனும் வலம் வரும் போது மக்களின் அபிலாசைகளில் அரைவாசிக்கு மேலான பகுதிகளை நோக்கியாவது நாம் நகர வேண்டும். மக்கள் தொடர்ந்தும் மடையர்களாக இருப்பார்கள். தாங்கள்தான் அறிவாளிகள். கட்சிக்கென்ற தனிப்பட்ட செல்வாக்கு மரணிக்கும்வரை இருக்கும். அதனை வைத்து நாம் வியாபாரம் செய்யலாம் என நினைத்தால் மக்களோடு பேரம் பேசி அரசியல் செய்ய வேண்டிய காலம் வந்து விடும்.
எது எப்படியிருந்தாலும் முஸ்லிம் காங்கிரஸிற்கு மக்கள் அளித்த பேரம் பேசும் சக்தி வெறும் பூச்சிய நிலையை அடைந்துள்ளது. மக்கள் வெறுப்படைந்துள்ளனர். இக்கள நிலவரங்களை உணர்ந்து தலைமைகளும் கூட உள்ளவர்களும் மக்களின் உணர்வுகளுடன் இறங்கி அரசியல் செய்ய முன்வர வேண்டும். அடுத்த தேர்தலுக்கு வரலாம். இதனையெல்லாம் மக்கள் மறந்து விடுவார்கள் எனப் பகற்கனவு காண்பது எல்லாக் காலங்களிலும் சாத்தியமாகாது. காலங்கள் மாறும் போது மனிதர்களும் மாறுவர் என்கிறார் மேலைத்தேய அரசியல் விமர்சகர் ஒருவர்.
மக்கள் எதிர்பார்க்கும் பேரம் பேசும் சக்தியை விட வேறு விடயங்கள்தான் பேரம் பேசும் சக்திக்குரியவை என முஸ்லிம் காங்கிரஸ் உச்சம் விளங்கி இருந்தால் வார்த்தை ஜாலங்களை விட்டு விட்டு மக்களுக்கு அவற்றைத் தெளிவுறுத்துங்கள். விரைவில் எமது முடிவின் காட்டத்தை மக்கள் உணர்வர். என்ற கருத்தோடு நம்பிக்கை பெற்றுக் காத்திருக்கும் மக்களுடன் நாமும் கை கோர்ப்போம்.
சோரம் போனது இப்போது தானா கண்டு பித்தது போல் இருக்கிறது.
ReplyDelete