Header Ads



வெட்கப்படாமலிருக்க முடியவில்லை..!


தம்பி

கிழக்கு மாகாண அரசியல் அரங்கில் ஒரு புயல் வீசி ஓய்ந்திருக்கிறது! இந்தப் புயலில் சிக்கிய பலர் சேதங்களைச் சந்தித்திருக்கின்றார்கள். சிலரின் முதலமைச்சர் கனவுகளில் ஏகத்துக்கு மண் விழுந்திருக்கிறது. அமைச்சுப் பதவிகளுக்காகக் காத்திருந்த பலரும் ஏமாந்து போயுள்ளனர். ஒற்றை வரியில் சொன்னால், பலருடைய கனவுகளின் கல்லறைகள் மீதுதான் கிழக்கு மாகாணசபையின் ஆட்சி அதிகாரம் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. 

இன்னொருபுறம், கிழக்கு மாகாணசபையில் தமிழ் சமூகத்துக்கென ஓர் அமைச்சுப் பதவியைக் கூட வழங்க முடியாததொரு கையறு நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணசபையில் அமைச்சுப் பதவிகள் சமன்பாடற்ற முறையில் பங்கிடப்பட்டுள்ளது. இதன் பாரதூரத்தினை அறிந்து கொண்டே அரசு - இதைச் செய்து முடித்துள்ளமைதான் ஆச்சரியமாகவுள்ளது.

இதேவேளை, சுழற்சி முறையின் அடிப்படையிலேயே முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், சில நிபந்தனைகளை முன்வைத்தே அரசுக்கு தாம் ஆதரவளித்துள்ளதாகவும் மு.காங்கிரஸ் மீள மீளக் கூறிவருகிறது. ஆனால், இது தொடர்பில் ஆயிரத்தெட்டு சந்தேகங்கள் இருக்கின்றன. இந்த நிலையில், மு.கா. கூறுவதிலுள்ள உண்மைகளை அறிந்து கொள்வதற்காக - ஏன் சில காலம் பொறுத்திருந்து பார்க்கக் கூடாது என்று அந்தக் கட்சி சார்பானோர் கேட்கின்றனர். அப்படியென்றால், அதற்காக நாம் ஆகக்குறைந்தது இரண்டரை வருடங்கள் பொறுத்திருந்தே ஆக வேண்டும்.

கிழக்கு மாகாணசபையில் மு.காங்கிரஸின் ஆரவு - அரசுக்குக் கிடைத்துள்ள போதும், மு.கா.வுக்கு எதிரான முஸ்லிம் அணிகளைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளையும் அரச உயர் மட்டம் செய்தே வருகிறது. அமைச்சர் அதாஉல்லாவின் கட்சிக்காரரான உதுமாலெப்பைக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டமை, றிசாத் பதியுத்தீனின் கட்சிக்காரரும் கிழக்குத் தேர்தலில் வெற்றி பெற்றவருமான அமீர் அலிக்கு தேசியப் பட்டியல் நடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படவுள்ளதாக வெளிவரும் கதைகள் அனைத்தும்  மேற்சொன்னதை நிரூபிக்கும் வகையிலானவை!

மறுபுறம், மு.காங்கிரசுக்குக் கிடைத்த இரண்டு அமைச்சுப் பதவிகளையும் பங்கிடுவதில் அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் உள்ளுக்குள் ஒரு சுனாமியையே சந்தித்தமையானது இன்னுமொரு கதையாகும். இந்தக் கதையில் நிறையவே ஏமாற்றங்களைச் சந்தித்தவர் அம்பாறை மாவட்டத்திலிருந்து கிழக்கு மாகாணசபைக்குத் தெரிவாகியுள்ள மு.கா.வின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் ஜெமீல்தான்! 

மு.கா.வுக்குக் கிடைத்த அமைச்சுப் பதவிகளில் ஒன்றை உங்களுக்கு வழங்குவேன் என்று ஜெமீலிடம் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் உறுதிமொழியொன்றினை வழங்கியிருந்தார் என்று உள்ளிருந்து வரும் தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. தலைவரின் வாக்குறுதியை நம்பியிருந்த ஜெமீலுக்கு கடைசி நேரத்தில் அந்தப் பதவி இல்லாமல் போனது. இதனால், கட்சிக்குள் ஒரு 'குட்டி'க் கலவரமே உருவானதை நீங்கள் அறிவீர்கள். இதனைத் தொடர்ந்து - தனக்குக் கிடைக்கவிருந்த பதவியினை தட்டிவிட்டவர்கள் 'இவர்கள்தான்' என்று ஒரு பட்டியலை ஊடகங்களிடம் ஜெமீல் ஒப்புவித்திருந்தார். மு.காங்கிரசின் கல்முனைத் தொகுதியிலுள்ள பிரமுகர்களுக்கிடையிலான உள்முரண்பாடுகள்தான் இதற்கான அடிப்படைக் காரணம் என்பதை அங்குள்ள அரசியலைத் தெரிந்தவர்கள் மிக நன்கு அறிவார்கள். இந்த உள் முரண்பாடுகள் களையப்படும் வரை - இவ்வாறான கூத்துக்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

இன்னொருபுறம், கிழக்கு மாகாணசபை ஆட்சியில் தமிழ் சமூகம் சார்பான பிரதிநிதியொருவருக்கு அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படாமை குறித்து வெட்கப்படாமலிருக்க முடியவில்லை. இது மிக மோசமானதொரு முடிவாகும். மு.காங்கிரசின் ஆதரவுடன் அமையப் பெற்றுள்ள ஆட்சியொன்றில் இவ்வாறானதொரு இழுக்கு இடம்பெற்றமைக்கு மு.காங்கிரசும் பொறுப்புதாரியாகப் பார்க்கப்படும். 

இதேவேளை, கிழக்கில் ஆட்சியமைப்பதற்கு அரசுக்கு ஆதரவு கொடுத்துள்ள போதும், தனது சமூகத்துக்குத் தேவையானவற்றினையே பேரம் பேசிப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையிலுள்ள முஸ்லிம் காங்கிரஸ் - தமிழ் தரப்புக்கான அமைச்சுப் பதவியினை எங்கு போய் பெற்றுக் கொடுக்கும் என்று யாராவது பகிடியாகக் கேட்டால் கூட, சொல்வதற்கு - அந்தக் கட்சியிடம்  பதில்கள் இருக்கப் போவதில்லை.

மறுபுறம் கிழக்கு மாகாணசபையில் தமிழர் ஒருவர் அமைச்சராக நியமிக்கப்படவில்லை என்பதை, த.தே.கூட்டமைப்பானது அரசுக்கு எதிரான பிரசாரத்துக்காகப் பயன்படுத்திக் கொள்வதில் முனைப்புக் காட்டும். குறிப்பாக, சர்வதேசத்திடம் இவ் விவகாரத்தினை ஒரு குற்றச்சாட்டாகக் கொண்டு செல்லும். தமிழர்கள் விடயத்தில் இலங்கை அரசின் மனப் போக்கு எவ்வாறு உள்ளது என்பதை நிரூபிப்பதற்கு இந்த விடயத்தினை த.தே.கூட்டமைப்பு ஆதாரமாக முன்வைக்கும். அதாவது, கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவருக்கு அமைச்சுப் பதவியொன்றினை வழங்காமல் விட்டதன் மூலமாக, உருண்டு திரண்டதொரு பொல்லை த.தே.கூட்டமைப்பின் கையில் அடிவாங்குவதற்கென்றே அரச தரப்பு கொடுத்திருக்கிறது!

இதேவேளை, முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானுக்குக் கிடைக்கவிருந்த அமைச்சுப் பதவியினை ஏற்றுக் கொள்வதற்கு அவர் மறுத்து விட்ட செய்தி குறித்து நீங்கள் அறிவீர்கள். அமைச்சுப் பதவியினை ஏற்றுக் கொள்வதும், கொள்ளாமல் விடுவதும் அவருடைய தனிப்பட்ட விருப்பமாகும். ஆயினும், அந்தப் பதவியை ஏற்றுக் கொள்ள முடியாமைக்கு பிள்ளையான் தெரிவித்திருந்த காரணம்தான் பொருத்தப்பாடுடையதாகத் தெரியவில்லை. 'கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராகப் பதவி வகித்த பிறகு, அந்த சபையில் ஓர் அமைச்சராக இருந்து செயற்படுவதில் பல்வேறு சிரமங்கள் இருக்கின்றன' என்று அவர் கூறியிருந்தார். ஆனால், இதன் பின்னணியில் பெரிய்ய்ய்ய்ய கதையொன்று இருப்பதாகப் பேசப்படுகிறது. கிழக்கு மாகாணத்தில் தனக்குக் கிடைக்கவிருந்த அமைச்சுப் பதவியினை பிள்ளையான் ஏற்றுக் கொண்டிருந்தால், அதாஉல்லாவின் அணியைச் சேர்ந்த உதுமாலெப்பை அமைச்சராகுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்காது என்பது தர்க்க ரீதியான உண்மையாகும். 

இது இவ்வாறிருக்க, கிழக்கு மாகாணசபையின் கல்வி, காணி போன்ற மிக முக்கிய அமைச்சுக்கள் - மீளவும் சிங்கள இனத்தைச் சேர்ந்த விமலவீர திஸாநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதை இன்னொரு வகையிலும் சொல்ல முடியும். அதாவது, மிக முக்கிய பொறுப்புக்களை சிறுபான்மையினரின் கையில் கொடுப்பதற்கு இந்த அரசு தயாராக இல்லை. குறிப்பாக, காணி தொடர்பான விடயங்களைக் கையாளும் பொறுப்புக்களை சிறுபான்மையினரிடம் கொடுப்பதற்கு பௌத்த பெருந்தேசியவாதிகளான நமது ஆட்சியாளர்கள் அச்சப்படுகின்றார்கள். ஆக, இப்படி நம்மை ஒவ்வொரு கணமும் சந்தேகித்துக் கொண்டிருப்போருடன் இணைந்துதான் கிழக்கு மாகாணசபையில் முஸ்லிம் மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுக் கொண்டதாகக் கூறும் மு.காங்கிரஸ் எனும் கட்சியானது குப்பை கொட்டப் போகிறது என்பதை நினைக்கையில் கவலையாக இருக்கிறது.

இவற்றுக்கெல்லாம் அப்பால், கிழக்கில் ஆட்சியமைப்பது தொடர்பில், த.தே.கூட்டமைப்பு மற்றும் மு.காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள மனக்கசப்புகளைக் களையும் வகையிலான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். கிழக்கில் தமிழ் - முஸ்லிம் அரசியல் உறவென்பது அத்துணை ஆரோக்கியமாக இல்லை என்பதுதான் உண்மை நிலையாகும். 

எனவே, எதிர் காலங்களிலாவது த.தே.கூட்டமைப்பு – மு.காங்கிரஸ் போன்ற கட்சிகள் இணைந்து கிழக்கு மாகாணத்தில் ஆட்சியொன்றினை அமைக்கும் வகையிலான களநிலைவரமொன்றினை உருவாக்குதல் அவசியமாகும். இதற்கான முயற்சிகளில் தமிழ் - முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஈடுபடுதல் வேண்டும். 

த.தே.கூட்டமைப்பினர் மு.காங்கிரஸ் மீது குற்றங்களைச் சுமத்தி வருவதையும், அதற்கு மு.காங்கிரஸார் பதிலளித்துக் கொண்டு வருவதையும் நிறுத்த வேண்டிய தேவை உள்ளது. த.தே.கூட்டமைப்பு மற்றும் மு.காங்கிரஸ் ஆகியவை - இரண்டு சமூகத்தின் பெரும்பான்மை ஆதரவினைக் கொண்ட அரசியல் கட்சிகளாகும். இந்தக் கட்சிகளின் கூற்றுகளும், நிலைப்பாடுகளும் - தவிர்க்க முடியாமல் அந்தக் கட்சிகள் சார்ந்த சமூகங்களின் நிலைப்பாடாகவும் பார்க்கப்படுகின்றன. 

எனவே, இந்தக் கட்சிகள் ஒன்றையொன்று வார்த்தைகளால் தாக்கிக் கொள்ளும் நிலையானது கடைசியில், எஞ்சியிருக்கும் தமிழ் - முஸ்லிம் சமூக உறவினிலும் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடிய அபாயமுள்ளது. 

அப்படியொரு நிலை ஏற்படுமாயின் அதற்கு சம்பந்தன் - ஹக்கீம் ஆகிய இரண்டு 'தலை'களும்தான் பொறுப்புக் கூறவேண்டும்!
·

1 comment:

  1. தம்பி ! அது எப்பிடி ஹகீம் ஏன் அதற்குப் பொறுப்புக்கூறவேண்டும் ?
    அரசியலின் களநிலவரம் , யதார்த்தம் என்பனவற்றை பற்றி அரிவரி அறிவுகூட இல்லாதவர்போல சம்பந்தன் கதைக்கும் கதைகளால்தான் இந்த உறவு சிதைக்கப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியாததா ? அல்லது குற்றுயிராய் கிடக்கும் இவ்வுறவின் மீது கத்தி பாய்ச்சி குதத்திக் கிழித்து பதைக்கப்பதைக்க கொலைசெய்துகொண்டிருக்கிற ஊடகம் ( நீங்களும் அவர்களின் தயவில்தான் )அதற்கு பொறுப்புதாரி என்பதை சொல்லப் பயப்படுகிரீர்களா ?
    ஹகீம் ஊடகங்களுக்கும் , மின்னலின் மூலம் எல்லோருக்கும் மிகத் தெளிவாக ஏன் இந்த முடிவை எடுக்க நேர்ந்தது என்பதையும் , தமிழர் தரப்பின்மீது மு .கா விற்கு உள்ள பொருப்புக்ககூறல் பற்றியும் தெளிவுபடுத்தயுள்ளார் , அதுபோக சம்பந்தன் ஐயா பற்றி மரியாதையுடனும் கௌரவ மாகவும் தான் கதைத்து வருகிறார் .

    தம்பி! முஸ்லிம்கள் கிழக்கில் தமிழர்களுடன் மட்டுந்தான் வாழ்கிறார்கள் என்று நீங்கள் ஏன் நினைகிறீர்கள் .... மற்ற மூன்று திசைகளிலும் முஸ்லிம்கள் சிங்களவர்களுடனும் சிநேகமாகத்தான் வாழ்ந்து வருகிறார்கள் .
    மு.கா கிழக்கு மக்களின் ஆதரவுத்தளத்திலேயே வேரோடி இருக்கிரதென்றாலும் அது தன் கிளைகளை நாடு பூராகவும் விரித்து குடையாய் காக்கிறது நிழல் கொடுக்கிறது என்பதையும் கவனியுங்கள். உங்களை போன்ற திறமையான ஊடகவியலாளர்கள் இந்த உண்மைகளை
    ஏன் உங்களுக்கு வாய்ப்புத்தருகிற தமிழ் ஊடகங்களில் எழுதுவதே இல்லை?

    உண்மையிலேயே தமிழ் -முஸ்லிம் உறவில் விரிசல் கிழிந்து கந்தலானால் அதற்கு பதில் சொல்லவேண்டியது ஹக்கீமை விடவும் உங்களைபோன்ற ஊடகவியலாலர்கள்தான். உங்களை போன்றவர்களின் மீதுள்ள மரியாதையால்தான் மனம் நொந்து இன்று இதனை எழுதுகிறேன் .
    மனச்சாட்சியுடன் பதில் சொல்லுங்கள் .
    ( இது தம்பிக்கு மட்டுமல்ல மற்ற முஸ்லிம் உடகவியலாலர்களுக்கும்தான் .)

    ReplyDelete

Powered by Blogger.