'முஸ்லிம்கள் தமது வரலாற்றை மறந்ததே பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணம்' - அபூபபக்கர் சித்தீக்
முபாரக், இக்பால் அலி,ஜெஸ்மி மூசா, அ.அஸ்வர்
முஸ்லிம்கள் தங்களது வரலாற்றை மறந்ததே அவர்கள் முகங்கொடுத்திருக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணம் என்றும், அதனால் முஸ்லிம்கள் தம் வரலாற்றை அடிக்கடி மீட்டுப் பார்ப்பது அவசியம் என்றும் ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னதில் முஹம்மதியா அமைப்பின் பொதுத் தலைவர் அஷ்ஷெய்க் என்.பி.எம்அபூபபக்கர் சித்தீக்(மதனி) நேற்று தெரிவித்தார்.
இந்நாட்டில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் பெரும்பான்மை இன மக்களுடன் அன்பாகவும், பண்பாகவும், புரிந்துணர்வுடனும் ஒற்றுமையாக வாழ வேண்டியது காலத்தின் அவசியத் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னதில் முஹம்மதியா அமைப்பினர் குருநாகல் மாவட்டத்திலுள்ள பறகஹதெனியவில் ஏற்பாடு செய்திருந்த இருநாள் தேசிய இஸ்லாமிய மாநாடு (சனிக்கிழமை) அஸ்ஸலபிய்யா கலாபீட மைதானத்தில் வைபவரீதியாக ஆரம்பமானது. இந்த மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போது அமைப்பின் தலைவரான அஷ்ஷெய்க் அபூபக்கர் சித்தீக்(மதனி) மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தமிழ்நாடு சென்னை தாருல் ஹுதா வெளியீட்டகத்தின் நிறுவுனர் அஷ்ஷெய்க் முப்தி உமர் ஷரீப், மதுரை அஹ்லுஸ் ஸுன்னா ஸ்தாபகர் அஷ்ஷெய்க் முஜிபுர்ரஹ்மான் உமரி, இந்தியாவின் ஜம்மிய்யது அஹ்லுல் ஹதீஸ் வல்குர்ஆன் அமைப்பின் மாநில துணைத் தலைவர் கோவை எஸ். ஐயூப், ஜாமியா நளீமிய்யா கலாபீட பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.சி.அகார் முஹம்மத் உட்பட உள்நாட்டு வெளிநாட்டு முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இம்மாநாட்டில் நாடெங்கிலுமிருந்து பெருந்தொகையான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
அஷ்ஷெய்க் என்.பி.எம்.அபூபக்கர் சித்தீக்(மதனி) இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில,
இந்நாட்டில் முஸ்லிம்களாகிய நாம் சிறுபான்மையினராக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நாம் பெரும்பான்மை மக்களுடன் எவ்வாறு ஒழுக்கமாகவும், பண்பாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிவூட்டுவதையும் தெளிவுபடுத்துவதையும் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக கொண்டே இம்மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளோம். இதனையே காலத்தின் அவசிய தேவையாகவும் கருதுகின்றோம்.
இன்றைய காலகட்டத்தில் இஸ்லாம் குறித்தும், இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் தொடர்பாகவும், தவறாகவும், பிழையாகவும் பிரசாரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இவ்வாறான சூழ்நிலையில் அவற்றை களைந்து இஸ்லாத்தின் மகத்துவத்தையும் புனிதத் தன்மையையும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் சிறப்பையும் சரியான முறையில் தெளிவுபடுத்த வேண்டியது எமது பொறுப்பாகும். இதனை முஸ்லிம் மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் மாற்று மத மக்கள் மத்தியிலும் கொண்டுசெல்ல வேண்டியுள்ளது. இதற்கு பொறுமை, சகிப்புத் தன்மை, அன்பு, கருணை ஆகியன மிகவும் இன்றியமையாதது. முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் ஆரம்பகால வாழ்க்கையில் இதற்கு நிறைய முன்னுதாரணங்கள் உள்ளன. அவற்றை நாமும் முன்மாதிரியாகக்; கொண்டு செயற்பட வேண்டும்.
முஸ்லிமாக இருக்கின்ற ஒவ்வொருவருக்கும் கொள்கையும், கோட்பாடும் மிக முக்கியமானது. இதனையே அல்-குர்ஆனும் வலியுறுத்துகின்றது. குறிப்பாக அல்-குர்ஆனில் 'இஹ்லாஸ்' என்ற அத்தியாயமும் இதனையே தெளிவுபடுத்துகின்றது. இந்த நான்கு வசனங்களைக் கொண்ட அத்தியாயத்தை முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் முழுக் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்கு சமமானது என்றார்கள். இஸ்லாம் ஒருபோதும் வன்முறையை அனுமதிக்கவேயில்லை. அன்பும் பண்புமே இஸ்லாத்தின் பிரதான அம்சங்களாகும். இதனடிப்படையில் குர்ஆன், சுன்னாவைப் பேணி வாழ வேண்டும். இதுவே இன்றைய முஸ்லிம் சமுதாயத்திற்கான செய்தியுமாகும்.
Post a Comment