வெறித்தனத்தை கக்கும் பௌத்த தேரரும், அன்புக்கரம் நீட்டும் பத்திரிகையாளரும்..!
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பளீல் (நளீமி)
தலைப்பைப் பார்க்கையில் சற்று அதிசயமாகவும் ஒன்றுக்கொன்று முரண்படும் கருத்துக்களைத் தருவது போலும் இருக்கலாம். உண்மைதான் கடந்த 14.09.2012 அன்று வெளிவந்த "அத' பத்திரிகையில் கலகொட அத்தே ஞான தேரர் பத்திரிகையாளர் மகாநாடொன்றில் வெளியிட்டதாக எழுதப்பட்டுள்ள பாரதூரமான கருத்துக்களையும் அதே தினம் லங்காதீப பத்திரிகையில் ஆசிரியர் கருத்தையும் வாசித்தால் இலங்கையின் பௌத்தர்களுக்கு மத்தியில் மேற்படி இரண்டு முரண்பட்ட விதங்களில் சிந்திப்பவர்கள் இருக்கிறார்கள் எனப் புரிய முடியும்.
நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகளைப்பற்றி லங்காதீப பத்திரிகையின் ஆசிரியர் மதிப்பீடு செய்யும் போது நிதானமாக, நியாயமாக, நடுநிலையில் நின்று சம்பவங்களைப் பார்ப்போரும் இந்நாட்டில் இருக்கிறார்கள் என்பது புலனாகிறது. அவரது கருத்துக்களின் சாராம்சம் பின்வருமாறு,
கடந்த தேர்தலில் வாக்காளர்கள் தத்தமது இனம், தத்தமது மதம், தமது குலம், தமது பிரதேசம் ஆகிய பிரிவுகளின் அடிப்படையிலேயே வாக்குகளை வழங்கியுள்ளனர். குறிப்பாக இது சண்டைகளிலும் முடிவடைந்துள்ளது.
இன அடிப்படையில் நிலவும் பிரிவினை வாதத்தில் கடந்த 30 வருடங்களாக நடந்த யுத்தத்தில் எமது நாட்டில் நடந்த அழிவுகள் அதிகமாகும். யுத்தம் முடிந்தாலும் மோதல்கள் முடியவில்லை. இது நல்லதல்ல. ஒவ்வொருவருக்கும் அவரவரது மத, இன தனித்துவம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எமது கலாசாரத்தின் பிரதான பண்பு அதுவாகும். நாம் யாரென்று இனம் காணப்படுவதும் எமது அபிலாஷைகள் ஒழுங்கமைவதும் அந்த தனித்துவங்களின்படியாகும்.
அது அப்படியிருந்தும் இந்த தனித்துவங்களுக்கு அப்பால் தேசிய மற்றும் அரசியல் தளங்களில் சுதந்திரமாக சிந்திப்பதற்கு பழகுவதும் அதனடியாக தீர்மானங்களுக்கு வருவதும் அதிக முக்கியமானதாகும். அனைத்து இலங்கையர்களும் ஐக்கியப்பட்ட நாட்டை கட்டியெழுப்ப அப்போது தான் சாத்தியமாகும்.
உலகின் பல நாடுகளில் இன்னும் இன, மத மோதல்கள் இடம்பெற்றாலும் அவற்றிலிருந்து பாடம் கற்று புதிய போக்குகளை உருவாக்குவதில் பல நாடுகள் வெற்றி கண்டுள்ளன. அதன் மூலம் தான் கறுப்பினத்தவர் ஒருவர் அமெரிக்க ஜனாதிபதியாக மாற முடிந்தது. வெள்ளையர்கள் பயணிக்கும் ரயில் பெட்டியில் ஒரு கறுப்பருக்கேனும் பயணம் செய்ய தடுக்கப்பட்டிருந்த நாட்டில் நிலை மாறியுள்ளது. வெள்ளை கறுப்பு போராட்டத்தில் அமெரிக்கர்கள் பெற்ற பாடம் நிற பேதத்தை முற்றாக ஒழிக்க வேண்டும் என்பதாகும். என்று அவர் கூறுகிறார். இறுதியாக அவர் கூறும் கருத்து, நமது நாட்டிலுள்ள பௌத்த தீவிரவாதிகளுக்கு சாட்டையடியாகும்.
இந்தியா இன ரீதியான பல மோதல்கள் இடம்பெற்ற நாடாகும். இன்னும் அவை நடக்கின்றன. அப்படியிருந்தும் அங்கு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக வருவது அவர்களுக்கு பிரச்சினையல்ல. பிரதமர், ஜனாதிபதி பதவிகள் மட்டுமன்றி நாடடின் வேறு பதவிகளுக்கும் சிறுபான்மையினர் நியமனமாகினர். அது இந்தியா கற்ற பாடமாகும். பாரிய அளவில் இரத்த ஆறு ஓடிய இலங்கையும் கற்க வேண்டிய பாடம் அதுவாகும். அதுபடி நடந்து ஒவ்வொருவரது தனித்துவங்களை அங்கீகரித்ததுடன் இன, மத பிரிவினைகளை கீழே தள்ளி விட எமக்கு முடியுமாக வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
அத்துடன் அண்மையில் இலங்கை வந்த அல் ஜஸீரா ஊடக வலையமைப்பின் முன்னாள் பணிப்பாளர் வதாகன்பர் பாக்கிர் மாக்கார் நினைவுப் பேருரையை கொழும்பில் நிகழ்த்தினார். அந்த உரை இடம்பெற்ற இடமும் அதனை ஏற்பாடு செய்த நிறுவனம், அதற்கு சமுகம் தந்தவர்கள் ஆகிய இந்த மூன்று அம்சங்களும் இங்கு முக்கியமானது என்பதை லங்காதீப ஆசிரியர் தொட்டுக்காட்டி இது போன்ற நிகழ்வுகள் முன்மாதிரியாகக் கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார். அவரது கருத்தை நாம் சற்று விரிவாக இவ்வாறு நோக்க முடியும்.
1. பௌத்த மதம் ஸ்தாபிக்கப்பட்டு 2600 வருடங்கள் பூர்த்தியாவதை நினைவு கூரும் வகையில் இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள சம்புத்த ஜயந்தி கட்டடத்தில் அந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. பௌத்த மதத்தை பாதுகாக்கவென்றே நிறுவப்பட்ட இக்கட்டடத்தில் அது நடைபெற்றமை முக்கிய அம்சமாகும்.
2. இந்நிகழ்வை இன ஐக்கியத்துக்கான பாக்கிர் மாக்கார் நிறுவனம்தான் ஏற்பாடு செய்திருக்கிறது. இன மோதல்கள் இடம்பெறும் சூழலில் இந்த நிறுவனத்தின் சுலோக வாசகம் மிகவும் முக்கியம் பெறுகின்றது.
3. அந்த நிகழ்வுக்கு ஆளும் கட்சியையும் எதிர்க்கட்சியையும் சேர்ந்த பிரபலங்கள் மட்டுமன்றி பௌத்த மத குருக்களும் வருகை தந்திருந்தனர்.
இன ரீதியான மத ரீதியான மோதல்கள் இடம்பெற்ற, இடம்பெற்று வருகின்ற சூழலில் அந்தத் தரப்பினரை ஐக்கியப்படுத்துவதற்காக செய்யப்படும் முயற்சிகள் பாராட்டப்பட வேண்டும். அப்படியான செயல்களை வெற்றியடையச் செய்ய சகல முறைகளிலும் உற்சாகமூட்டப்பட வேண்டும். இருளுக்கு வெளிச்சம் எனும் வகையில் எதிர்காலத்தில் மோதல்கள் அற்ற நாட்டை உருவாக்க இப்படியான முயற்சிகள் உதவும் என நாம் எண்ணுகிறோம்.
எனக் கூறி அவர் தனது ஆசிரியர் தலைப்பை நிறைவு செய்தார்.
மேற்படி அவரது கூற்றுக்கள் எமக்குப் பல படிப்பினைகளைத் தருகின்றன. இலங்கையின் பிரபலமான நாளிதழ் ஒன்றின் ஆசிரியரது இன
சௌஜன்யத்துக்கான மனப்பதிவுகளை அவை படம் பிடித்துக் காட்டுகின்றன. சிறுபான்மையினர் என்ற ஒரே காரணத்துக்காக இலங்கையின் தமிழ், முஸ்லிம் இனத்தவர்களுக்கு அரசியல், தொழில், கல்வி, சமூக விவகாரங்களில் வாய்ப்புக்களை வழங்காது ஒதுக்குவது நல்லதல்ல என்றும் அவர்களை சகவாழ்வு நிலைக்குள் உள்வாங்க வேண்டும் என்றும் அவர் உளப்பூர்வமாக விரும்புகிறார். இந்தியாவையும் அமெரிக்காவையும் இவர் உதாரணமாகக் காட்டுவதும் அரபி முஸ்லிம் ஒருவர் நிகழ்த்திய உரைக்கு பௌத்த பிக்குகள் கூட வருகை தந்திருப்பதையும் முன்னுதாரணமாக அவர் காட்டியிருக்கிறார். அதேவேளை, ஒவ்வோர் இனமும் தனது தனித்துவங்களை பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார். இது போன்ற ஊடகவியலாளர்களை இனம் கண்டு இந்நாட்டின் இன ஐக்கியத்தை உருவாக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்த நாம் முயற்சிக்கலாம்.
அதேவேளை, இவரது கருத்துக்கு நேர் எதிரான ஒரு கருத்தை ஒரு பௌத்த பிக்கு வெளியிட்டிருக்கின்றார் என்பது கவலை தருகின்றது. அதாவது, அதே தினமான 14.09.2012 வெள்ளிக்கிழமை வெளியான அத பத்திரிகையில் முதல் பக்கத்தில் பௌத்த பல ஜாலய எனும் அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் என்பார் கூறியதாக ஒரு செய்தி பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. தீவிரவாதிகளுக்கு இந்நாட்டில் இடமில்லை. ஹக்கீமுக்கு இருக்க முடியாவிட்டால் போகலாம்'' என்பது அந்த செய்தியின் தலைப்பாகும்.
இனத்தை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம் அடிப்படைவாதிகளால் தொடர்ந்தும் அரசுக்கு நெருக்குதல்கள் ஏற்படுத்தப்படுவதால் முழு நாட்டுக்கும் அது பெரும் வடுவாக மாறி விட்டது. என்று கூறும் அவர் லங்காதீப ஆசிரியர் கூறும் பதவிகள் இன, மத வேறுபாடின்றி வழங்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கு மிக விரோதமான ஒரு கருத்தை பின்வருமாறு வெளியிடுகிறார்.
நீதியமைச்சு போன்ற அதி முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புவாய்ந்த அரச பதவியொன்று அப்படியான தலைவர் ஒருவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மதத்துக்கு மேலாய் அமைய வேண்டிய உன்னதமான சட்டத்தினது பொறுப்பாளராக வேற்று மதத்தவர் ஒருவரை எமது சிங்களக் கழுதைகள் நியமித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், ஐக்கிய இலங்கையில் நடைமுறையில் இருக்க வேண்டிய ஏக சட்டம் என்ற கருத்து நிலை அடிப்படையில் தளம்பல் நிலைக்கு உள்ளாகலாம். பிரதான நீதிமன்றத்திலிருந்து விலகி தனியான முஸ்லிம் நீதிமன்றம், முஸ்லிம் சட்டம் என்பன நடைமுறையாகும் நிலைக்கு நாடு வந்துள்ளது. நாட்டின் அதி உத்தம நீதிமன்ற முறைமைக்கு முஸ்லிம் அமைச்சர் ஒருவர் மூலம் சாட்டையடி கொடுப்பது முஸ்லிம்களது நிறை மூர்த்தங்களிலுள்ள மனப்பாங்காகும்.
இது போதாததற்கு ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸானது இன அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டு தனியான அரசு உட்பட மேலும் பல தீவிரமான கோரிக்கைகளை முன் வைத்து இந்நாட்டை மீண்டும் ஒரு தடவை பிரிவினைக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கிறது. சரியாக ஒரு ஹிஜாஹ் அமைப்பாகவே முஸ்லிம் காங்கிரஸ் நடந்து கொள்கின்றது. தீவிரவாதிகளால் தொடர்ந்தும் நெருக்குதல்கள் தரப்பட்டால், இந்நாட்டிலுள்ள முஸ்லிம்களது சகல வியாபார நடவடிக்கைகளையும் நாம் பகிஷ்கரிக்க வேண்டும். அரசில் இருக்க முடிந்தால் இருக்கலாம் முடியாவிட்டால் போய் விடுங்கள் என்று நாம் ரவூப் ஹக்கீமுக்கு எச்சரிக்கை விடுக்கின்றோம்.
ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் தமது உயிர்களைத் தியாகம் செய்து வடக்கு கிழக்கை விடுவித்திருப்பது அவற்றை மீண்டும் ஈழமாக அல்லது சபரிஸ்தானாக மாற்றுவதற்கல்ல. எம்மவரில் எவருக்கும் வடக்கு கிழக்குக்கு வெளியில் காணி வாங்க முடியும். அப்படியிருந்தும் வடக்கு கிழக்கிலுள்ள மூலக் குடியிருப்பாளர்களுக்கு அப்பகுதிகளுக்கும் வரவும் அனுமதிக்கப்படுவதில்லை. மாலையில் பிரித் போகும் போது முதுமஹா விஹாரைக்கு கல் வீசுகிறார்கள். கிழக்கு மாகாணத்தில் உள்ள புராதன பௌத்த ஆலயங்கள் டோஸர் செய்யப்படுகின்றன. இவற்றுக்கெதிராக அரசால் எவ்வித நடவடிக்கையுமில்லை.
எமது மூதேவிகளான எமது சிங்கள ஆட்சியாளர்கள் இவற்றுக்கு முன்னால் மௌனிகளாகிவிட்டனர். எமதுõரில் சிலருக்கு தமது வாக்குகளை பாதுகாப்பதுதான் முக்கியமாகும். எனவே, அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தலில் சமுதாயத்தின் கலாசாரத்தைக் காக்கும் வகையிலான நுõற்றுக்கணக்கிலான புதிய தலைவர்களாக நாம் அரசியலில் பிரவேசிக்க இருக்கிறோம். வாய் மூடிக் கொண்டிருக்கும் இன உணர்வற்ற எவருக்கும் பாராளுமன்றத்துக்கோ மாகாண சபைக்கோ மாநகரசபைக்கோ பிரதேச சபைக்கோ காலை வைக்கக்கூட விட மாட்டோம். என்று அவர் தொடர்ந்தும் கூறினார்.
13ம் திகதி மாலை கொழும்பு தும்முல்லையில் அமைந்துள்ள சம்புத்த ஜயந்தி ஆராய்ச்சி நிலையத்தில் இடம்பெற்ற பௌத்தபல அமைப்பின் விஷேட பத்திரிகையாளர் மாநாட்டிலே அவரால் இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டன. இதே கட்டடத்தில் தான் வதாகன்பரின் பாக்கிர் மாக்கார் நினைவுப் பேருரையும் இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். ஒரே இடத்தில் இரண்டு முரண்பட்ட நிகழ்வுகள் இடம்பெற்றமை இந்நாட்டின் விசித்திரமான நிலையாகும்.
எதிரும் புதிருமான கருத்துக்களை வெளியிட்டுள்ள லங்காதீப பத்திரிகையின் ஆசிரியருக்கும் ஞானசே தேரருக்கும் இடையிலான வேறுபாடு பற்றி சிந்திப்போம். பத்திரிகையாளரான அரசியல் சுழிவு நெழிவுகளைப் புரிந்து விரிந்த மனப்பாங்கு கொண்ட மத நல்லிணக்கத்திலும் இன சௌஜன்யத்திலும் நம்பிக்கை கொண்டு பத்திரிகா தர்மத்தை சரியாகப் பயன்படுத்தியவராக லங்காதீப ஆசிரியரை நாம் இனம் காண்கின்றோம். அவரது உள்ளம் விரிந்தது என நாம் புரிகிறோம். ஆனால், மைத்ரீய, கருணாவ போன்ற அன்பு, அகிம்சை, இரக்கம், மன்னிப்பு போன்ற கொள்கைகளை போதிப்பதையே தனது அடிப்படை இலக்குகளாகக் கொண்ட பௌத்த மதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பௌத்த மதகுருவின் கருத்துக்கள் எப்படி அமைந்துள்ளன? அவரது பேச்சில் வைராக்கியம், வெறித்தனம், பொறமை என்பன அப்பட்டமாகவே தொனிக்கவில்லையா? மதம் என்ற சொல்லுக்கு சமயம் என்ற கருத்துப் போலவே வெறி என்ற பொருளும் இருப்பதனால் இப்படி நடந்திருக்கலாம். முஸ்லிம்களுக்குப் பதவிகளை வழங்காதீர்கள். முஸ்லிம்களது வியாபார முயற்சிகளை பகிஷ்கரியுங்கள். முஸ்லிம் முறைப்படியான தனியார் சட்டத்துக்கு இடமளிக்கக் கூடாது என்றெல்லாம் அவர் கருதுகிறார்.
அறிவாளியான ஒரு பத்திரிகையாளருக்கும் ஆத்மீகவாதியான மதகுருவுக்குமிடையிலான வித்தியாசம் இப்படி இருக்கக் கூடாது. பொதுவாக உலகக் கல்விகளைக் கற்றவர்களிடம் மனித நேயம், அன்பு, ஆத்மீக வெளிச்சம் என்பன குறைவு என்பது பலரது மனப்பதிவாகும். இவர்களது சடவாத இறுக்கமான போக்குகளை தனித்து பளிச்சிடும் மனிதப் புனிதர்களாக இவர்களை மாற்றும் பணியைத்தான் மதவாதிகள் உலகில் செய்து வருகின்றார்கள் என நம்பப்பட்டாலும் இங்கு நடந்திருப்பதோ வேறொன்றாகும். மதவாதியை மத சார்பற்றவர் நெறிப்படுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
கடந்த வாரம் 12ம் திகதி இரவு தனியார் தொலைக்காட்சியொன்றில் நள்ளிரவில் ஒளிபரப்பான மிருகவதை தொடர்பான கலந்துரையாடலில் பரிமாறப்பட்ட கருத்துக்களும் பக்கச் சார்பானவையாகவே அமைந்திருந்தன. மிருகங்களது மாமிசத்தை உண்பவர்கள் மூர்க்கத்தனம், பகைமை குற்றச்செயல்களில் ஈடுபடும் தன்மை கொண்டவர்களாக இருப்பர் என்றும் மிருகங்களை அறுப்பதற்கு முனையும் ஒருவரிடம் ஈவிரக்கம் இருக்காது என்றும் பேசப்பட்டது. அப்படியாயின் பிற இனங்கள்பால் துவேசத்தையும் வெறுப்பையும் கக்கும் மதவாதிகள் அனைவரும் மாமிசம் உண்ணாதவர்களா? அந்த கலந்துரையாடலின் போது, மீன், முட்டை, கோழி போன்ற அனைத்தும் உண்ணப்படக்கூடாது என்றும் ஒரு நாளைக்கு ஒரு பாடசாலை மாணவருக்கு ஒரு முட்டை வழங்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி சிபாரிசு செய்தமையை அனைவரும் ஆட்சேபிக்க வேண்டும் என்றும் பேசப்பட்டது. முட்டைக்காக கோழிகள் வளர்க்கப்பட்டால் அக்கோழிகளை எப்போதாவது அறுக்க வேண்டிவரும். அது உயிர்க் கொலைக்கு வித்திடும் என்பதால் முட்டையும் வேண்டாம் என்று தர்க்கித்தனர் அவர்கள்.
இலங்கை வரலாற்றில் ஜே.வி.பி. கலவரங்களை அடக்கவும் வடக்கில் நடந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரவும் செய்யப்பட்ட மனிதக் கொலைகள் இந்த மிருக பலியின் முன்னால் அற்பமானவையா? அறுப்புக்காக நியமிக்கப்பட்ட ஆடுகளையும் மாடுகளையும் விடுதலை செய்வதனை புண்ணிய காரியங்களாகக் கருதுவோர் மியன்மாரில் இடம்பெற்ற சுமார் 26 ஆயிரம் அப்பாவி முஸ்லிம்களையும் பச்சிளம் பாலகர்களையும் பதைக்கப் பதைக்க கொன்ற நிகழ்வுகளை எப்படிப் பார்ப்பார்கள்.
மனிதனா மிருகமா முக்கியம் என்ற கேள்விக்கு விடை கிடைக்குமா? சுருங்கக் கூறின் இலங்கையில் யுத்தம் முடிவடைந்தாலும் இனப்பிரச்சினைக்கான யதார்த்தமான தீர்வு காணப்படவில்லை. தீர்வு காணப்படாதது மட்டுமன்றி புதிய பல யுத்தங்களை இனங்களுக்கிடையில் தோற்றுவிக்கும் வகையிலான துவேஷமான இயக்கங்கள் தோன்றியுள்ளன. வெப்தளங்கள், நுõல்கள், துண்டுப் பிரசுரங்கள் முஸ்லிம்களுக்கெதிரான பௌத்தர்களை துõண்டிவிடும் வேலையைச் செயது வருகின்றன.
லங்காதீப பத்திரிகை ஆசிரியர் போன்ற பௌத்தர்களுக்கு மத்தியிலுள்ள விரிந்த மனம் படைத்த அறிவாளிகள், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்களை அழைத்து முஸ்லிம் அறிவாளிகள் பல சந்திப்புக்களை நடத்தி சில காத்திரமான முயற்சிகளில் அவசரமாக இறங்காத போது அல்லாஹ்வின் பாதுகாப்பு கிட்டாது போய் விடலாம்.
Post a Comment