Header Ads



அமெரிக்காவை அச்சுறுத்தும் 'ஹன்டா' வைரஸ்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் இருந்த யோஸ்மைட் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் முகாமிட்டுத் தங்கியிருந்தவர்கள் ஆயிரக்கணக்கானோருக்கு உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய ஒரு கிருமித் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
 
நுரையீரல் நோயை உண்டாக்கவல்ல ஹன்ட்டா வைரஸ் எனப்படும் இந்த அரிதான கிருமி ஏற்கனவே இரண்டு பேரை பலிகொண்டுள்ளது என்றும், நான்கு பேருக்கு இந்தக் கிருமியால் நுரையீரல் நோய் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
 
இந்த ஹன்ட்டா வைரஸ் தொற்று ஏற்பட்டால் அதனை குணப்படுத்தும் சிகிச்சை எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. இக்கிருமித் தொற்றுடைய எலிகளுடைய கழிவுகள் மூலம் இது பரவுகிறது.
 
கிருமி தொற்று ஏற்பட்டு ஆறு வாரங்கள் கழித்த பின்னரே நோய் அறிகுறிகள் தோன்றும் என்றும், கிருமித் தொற்று ஏற்பட்டவர்களில் மூன்றில் ஒருவர் உயிரிழக்கக் கூடும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
 
எலியுடைய மலத்திலிருந்தும் சிறுநீரிலிருந்தும் எச்சிலிலிருந்தும் மண்ணிலும் தூசில் கலக்கும் இக்கிருமியை, கூடாரம்போல சிறிய அடைத்த இடத்தில் இருந்து சுவாசிக்கும் ஆட்களுக்கு பரவி விடுகிறது.
 
கிருமி கலந்த பொருட்களை தெரியாமல் தொட்டுவிடுவது, உட்கொண்டுவிடுவது அல்லது கிருமித்தொற்றுடைய விலங்கு கடித்துவிடுவது போன்றவற்றாலும் இக்கிருமி பரவுகிறது.
 
யோஸ்மைட் தேசியப் பூங்காவில் கர்ரி வில்லேஜ் பகுதியில் அமைக்கப்பட்ட கூடாரங்களில் புகுந்துகொண்டிருந்த எலிகள்தான் தற்போது இந்த கிருமி மனிதர்களிடையே பரவக் காரணம் என்று கருதப்படுகிறது.
 
கடந்த ஜூன் மாதத்துக்கும் ஆகஸ்ட் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தப் பகுதியில் பத்தாயிரம் பேர் தங்கியிருந்துள்ளனர் என்று நோய்க் கட்டுப்பாட்டு மையம் கூறியுள்ளது.
 
எவருக்கேனும் ஹன்ட்டா வைரஸ் இருப்பது தெரியவந்தால், மருத்துவர்கள் அதனை உடனடியாக சுகாதாரத்துறையிடம் தெரியப்படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
 
இந்த கூடாரங்களுக்கு வந்துபோனவர்கள் சுமார் மூவாயிரம் பேர் வரையிலானோரைத் தொடர்புகொண்டு தலைவலி, ஜுரம், மூச்சுத் திணறல், உடல்வலி, இருமல் போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவரை நாடுங்கள் என்று இந்த தேசியப் பூங்காவின் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கிருமித் தொற்றின் பாதிப்பு மிகவும் அதிகமாக இருப்பவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படலாம், சிலவேளை மரணம் நிழகலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
 
யோஸ்மைட் தேசியப் பூங்கா ஆண்டுதோறும் நாற்பது லட்சம் பேர் வருகிற ஒரு சுற்றுலா மையமாகும். இதிலே 70 சதவீதமானோர் கர்ரி வில்லேஜ் அமைந்திருக்கின்ற யோஸ்மைட் பள்ளத்தாக்குப் பகுதிக்கு வந்துபோவார்களாம். bbc

No comments

Powered by Blogger.