'இலங்கையில் அகதிகள் என்று எவருமில்லையாம்' - அப்போது வடக்கு முஸ்லிம்களின் நிலை?
1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து புலிகளின் பலாத்கார வெளியேற்றத்திற்கு உட்பட்ட பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் இன்னும் தமது தாயகப் பிரதேசத்தில் மீளக்குடியேறாத நிலையில் தொடர்ந்தும் வாழ்ந்து வருகின்றமையும், மீள்குடியேறிய முஸ்லிம்களுக்கு உரியவசதிகள் செய்து கொடுக்காமையும், இங்கு குறிப்பிடத்தக்கது.
வடபகுதியின் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா மெனிக்பாம் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த இறுதித்தொகுதி மக்களின் மீள்குடியேற்றத்துடன், வவுனியா மெனிக்பாம் நலன்புரி நிலையம் இன்று மூடப்படவுள்ளதாக உயர் இராணுவ அதிகாரியொருவர் நேற்று தெரிவித்துள்ளார்.
'வடக்கில் இடம்பெற்ற யுத்தத்தின்போது இடம்பெயர்ந்த சுமார் 300,000 பேரில் இறுதித்தொகுதியாகிய 361 குடும்பங்களைச் சேர்ந்த 1,186 பேர் வவுனியா மெனிக்பாம் நலன்புரி நிலையத்திலிருந்து வெளியேறி முல்லைத்தீவு மாவட்டத்தில் தங்களது சொந்த இடங்களில் மீள்குடியேறவுள்ளனர்' என வடபகுதியில் இடம்பெயர்ந்தவர்களுக்கான தகுதிவாய்ந்த அதிகாரியாக செயற்படும் பாதுகாப்பு படைகளின் தளபதி பொனிபெஸ் பெரேரா டெய்லிமிரருக்கு குறிப்பிட்டுள்ளார். 'இன்றிலிருந்து நாட்டில் இடம்பெயர்ந்தவர்களென எவரும் இல்லை' எனவும் அவர் கூறியுள்ளார்.
இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு வன்னி பாதுகாப்பு படைத்தலைமையகத்திற்கும் முல்லைத்தீவு பாதுகாப்புத் படைத் தலைமையகத்திற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் பணித்ததாகவும் பாதுகாப்பு படைகளின் தளபதி பொனிபெஸ் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
'இப்பகுதிகளில் கண்ணிவெடி அகற்றும் வேலை காரணமாக மீள்குடியேற்றம் தாமதமாகியது. அரசாங்கத்திற்கு சிவிலியன்களின் பாதுகாப்பு முக்கியமானது. இந்நிலையில், இப்பகுதிகளில் கண்ணிவெடிகள் எவையும் இல்லையென்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டியிருந்தது' எனவும் அவர் கூறினார்.
வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்புக்கு இடம்பெயர்ந்த மக்களை சுமுகமாக அழைத்துச்செல்வதற்கான உதவியை அரசாங்க அதிபர்களுக்கும்; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களுக்கும் இராணுவத்தினர் வழங்கவுள்ளனர்.
சில குடும்பங்கள் அவர்களின் சொந்த இடங்களிலுள்ள தங்களின் வீடுகளில் மீள்குடியேறவுள்ள அதேவேளை, மற்றும் சில குடும்பங்கள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட புதிய காணிகளில் மீள்குடியேற்றப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, வவுனியா மெனிக்பாம் நலன்புரி நிலையம் இன்றுடன் உத்தியோகபூர்வமாக மூடப்படவுள்ளதாக வவுனியா மாவட்ட செயலகமும் தெரிவித்துள்ளது.
Post a Comment