இஸ்லாமிய மாநாடு பற்றிய செவ்வி
ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் ஏற்பாட்டில் எதிருவரும் சனியும், ஞாயிறும் குருநாகல் மாவட்டத்தில் பறகஹதெனிய அஸ்ஸலபிய்யா அரபுக் கல்லூரி மைதானத்தில் தேசிய இஸ்லாமிய மாநாடு நடைபெறும். இம்மாநாடு பற்றி இவ்வமைப்பினூடாக இஸ்லாமிய மார்க்கப் பணி மற்றும் சமூகப் பங்களிப்பினை நல்கி வரும் பொதுத் தலைவர் என். பீ. எம். அபூபக்கர் சித்தீக் (மதனி) வழங்கிய செவ்வி.
நேர்காணல் இக்பால் அலி
இம் மாநாடு நடத்துவதற்கான முக்கிய காரணம் என்ன?
இஸ்லாம் வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டுகன்ற மார்க்கமாகும். அல்குர்ஆனினதும் அஸ்ஸுன்னாவினதும் வழியிலமைந்த இவ்வாழ்க்கை நெறியினை ரசூல் (ஸல்) அவர்கள் சமுதாயத்திற்கு முன்வைத்து அதன் அடிப்படையிலேயே வாழ்ந்து காட்டினார்கள். ரசூல் (ஸல்) அவர்களது இவ் வழிகாட்டுதல்களை ஸஹாபாக்களும் பின்பற்றி மனித சமுதாயத்துக்கு ஒரு முன்மாதரிமிக்க வாழ்க்கை நெறி இஸ்லாம்தான் என்பதைப் பதிவு செய்துள்ளார்கள்.
இந்த அற்புதமான, மனித வாழ்வின் நிம்மதிக்கு வழிகாட்டுகின்ற, ஈருலக பாக்கியமும் நிறைந்த சுவன வாழ்க்கைக்கு தம்மை தயார் படுத்துகின்ற வாழ்க்கை நெறி இஸ்லாம் தான் என்பதை எடுத்தியம்பி, அல் -குர்ஆனினதும் அஸ்ஸுன்னாவினதும் அடிப்படையில் ஓரணியில் ஒன்று கூடுவதற்கான முக்கிய மாநாடாக இதனைக் கொள்ளலாம்.
இவை மாத்திரமல்ல குர்ஆன் சுன்னா அடிப்படையில் முஸ்லிம்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒற்றுமையாக வாழ்வதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தல் மற்றும் தூய இஸ்லாத்தை மக்களுக்கு எத்தி வைப்பதுடன் இஸ்லாத்தைக் கலங்கப்படுத்தும் சமூகங்களுக்கு மத்தியில் தீய சிந்தனைகள், கொள்கை கோட்பாடுகளை இனங்காட்டுதல் மற்றும் இலங்கை வாழ் பல்லின மக்களிடையே முஸ்லிம்களை ஏனைய மக்களுடன் ஒற்றுமையுடன் வாழ வழிகாட்டுதல், சமூகங்களுக்கிடையே புரையோடிக்கிடக்கும் ஒழுக்க வீழ்ச்சியை எடுத்தியம்பி சீர் திருத்தப்பணியைமேற் கொள்ளல் போன்ற ஆரோக்கியமான பணி முன்னெடுப்புக்களில் ஈடுபட்டுவருகின்றோம்.
இஸ்லாதின் எதிரிகள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களுக்கிடையே வேற்றுமையை கருத்து முரண்பாடுகளையும் உருவாக்கி கரிபூசும் வகையிலேயே செயற்படுகின்றன. இன்றைய உலகில் இஸ்லாத்திற்கெதிராக வரிந்துகட்டிக் கொண்டு அமெரிக்கா களத்தில் குதித்துள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் இஸ்லாத்தையும் நிந்தனை செய்து அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட குறுந்திரைப்படம் பாரிய அதிருப்தியை உண்டு பண்ணியுள்ளது. காலத்தின் தேவையைக் கருத்திற் கொண்டு இந்தச் சந்தர்ப்பத்தில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஓர் அழகிய முன்மாதரி என்ற தலைப்பில் மார்க்கச் சொற்பொழிவு இடம்பெறவுள்ளது. இது போன்று அவ்வப் போது எமது முஸ்லிம் சமுதாயம் எதிர் நோக்கும் பிரச்சினைக்கும் சவால்களுக்கும் தக்கபதில் வழங்கும் நிவாரணியாகவே எங்களுடைய இஸ்லாமிய அழைப்புப் பணி அமைந்துள்ளது.
மேலும் இம் மாநாடு குறித்து ஈண்டு குறிப்பிட்டுச் சொல்லப் போனால் முஸ்லிம்களின் ஈமானிய ஆத்மீக உணர்வைப் பலப்படுத்தி குர்ஆன் சுன்னா அடிப்படையில் செயற்படக் கூடியவார்களாக ஆக்கும் முக்கிய நோக்காகக் கொண்டே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்மாநாட்டின் ஏற்பாடுகள் பற்றிக் குறிப்பிடுவீர்களா?
ஆம். இம்மாநாட்டுக்கான ஏற்பாடுகள் யாவும் நிறைவு பெற்றுள்ளன. ஒரே நேரத்தில் சுமார் 10000 பேர் தொழுதற்குரிய டென்ட் அடிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிக மலசல கூடம் அமைக்கப்பட்டுள்ளது. மிக அழகான மேடை அமைப்பு, ஒலி பெருக்கி வசதிகள், குறுந்தூர நேரடி வானொலி சேவை, இணையத்தளம் ஊடாக உலக மக்கள் பார்ப்பதற்கான நேரடி வீயோடி சேவை, வீடியோக் காட்சியினை மண்டத்திற்கு தூர இடங்களில் உள்ளவர்கள் தெளிவாக காண்பிதற்கு விசேட ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. தங்குமிட வசதிகள், தண்ணீர் வசதி போன்ற சகல ஏற்பாடுகளும் நிறைவுபெற்றுள்ளன. வீடியோக் காட்சியினை பதிவு செய்வதற்காக இந்தியாவிலிருந்து விசேடமாக இங்கு வருகை தந்துள்ளார்கள்.
ஜமாஅத்த அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் தேசிய மாநாட்டை முன்னிட்டு ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யா அணியினர் கிழக்கு, மேல், தென், வட மத்திய, வடக்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா போன்ற மாகாணங்களுக்கு விஜயம் மேற் கொணடனர்.
தேசிய இஸ்லாமிய மாநாட்டை வெற்றிகரமாக நடாத்த இலங்கையின் அனைத்துப் பகுதிகளில் பலத்த ஆதரவு கிடைத்துள்ளன. ஒவ்வொரு மாகாணங்களிலிருந்து மக்கள் கலந்து கொள்ளவும் உள்ளனர்.
திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலுள்ள குறிப்பிட்ட முக்கிய பிரதேசங்களில் மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன. அதேபோல் சகல மாகாணங்களிலும் இம் மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்தின் போது பிரதேசங்களில் மாநாடு பற்றிய விளம்பரம் மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் செயல்லப்பட வேண்டும். அதற்கான வாகன ஒழுங்கள் மேற்கொள்ளல், மாநாட்டுக்கு வர ஆர்வமிருந்தும் வர முடியாத சகோதரர்களை அழைத்து வர முயற்சி செய்தல், கூடுதலான விளம்பரப் பணிகளை மேற்கொள்ளல் போன்ற பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய். சிறாஜ்நகர், திருகோணமலை, கிண்ணியா, மூதூர், தோப்பூர் போன்ற இடங்களில் முக்கிய ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன. அத்துடன் நிலாவெளி, குச்சவெளி. புடைவைக்கட்டு, புல்மோட்டை போன்ற பகுதிகளில் மாநாடு குறித்த விளம்பரங்களை தொடர்ந்து மேற்கொள்ளல் போன்ற பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு ஓட்டமாவடியை அண்மித்த கிராங்களான கஹவத்தமுளை, மீராவோடை, வாழைச்சேனை, நாவலடி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இங்கும் இம் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முயற்சிகள் மும்முரமாக நடைபெறுவதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன.
ஏறாவூரில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. அங்கிருந்து பல எண்ணிக்கைனோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
காத்தான்குடியில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது காத்தான்டிப் பிரதேசத்தை மையப்படுத்தி ஆயிரக் கணக்கான சகோதரர்கள் வருகை தரவள்ளார்கள்.
அதனை தொடர்ந்து அம்பாறை மாவட்டத்தை மையப்படுத்தி கல்முனைக்குடிய ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆப் பள்ளிவாசலில் விசேட கூட்டம் நடைபெற்றது. இங்கு மருதமுனை, நற்பட்டிமுனை, கொலனி. கல்முனை, சாய்ந்தமருது. சம்மாந்துறை, இரக்காமம், நிந்தவூர், ஒலுவில், பாலமுனை. அட்டாளச் சேனை, அக்கறைப்பற்றறு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பிரதிதிநிதிகள் கலந்து கொண்டனர். இங்கிருந்தும் ஆயிரக்கணக்கான சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர். இங்கு குறிப்பாக மருதமுனை அக்பர் கிராமத்திலிருந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இம்மாநட்டில் கலந்து கொள்வதற்;கு முன் கூட்டியே பெயர்களைப் பதிவு செய்துள்ளதாகவும் அதற்கான வாகன ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவும் அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கல்முனை சாயந்தமருதுப் பிரதேசங்களில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்குப் பிற்பாடு இம்மாநாடு குறித்த சுவெரொட்டிகள் எங்கும் காணக் கூடியதாக உள்ளன. ஜும்ஆத் தொழுகையின் பிற்பாடு அங்குள்ள பள்ளிவாசல்களில் இது குறித்த செய்திகள் அறிவிக்கப்பட்டன. மக்கள் பங்குபற்றுதலுக்கான பெயர் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. எங்கு பார்த்தாலும் மக்கள் நாட்டின் பல பாகங்களிருந்தும் ஆர்வத்துடன் கலந்கொள்வதற்கான தயார் நிலையில் உள்ளதாகவும் பெயர் பதிவுகளை வழங்கியதாகவும் எங்களுக்கு தகவல் கிடைத்த வண்ணம் உள்ளன.
தற்போது வளவாளர்களாக கலந்து கொள்ளவுள்ள வெளிநாட்டு பிரமுகர்கள் யாவரும் சமூகமளித்துள்ளார்கள். இந்த மாநாடு வெற்றிகரமாக நடைபெற பறகஹதெனிய வாழ் மக்கள் முதியோர், இளைஞர், சிறுவர்கள் எனப் பாராமல் அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். வெளியூர்களிலிருந்து வரும் மக்களை மிகுந்த அன்போடு அரவணைக்கத் தயாராகவுள்ளார்கள் என்பதை இங்கு விசேட குறிப்பிட வேண்டும்.
உங்கள் அமைப்பின் சமூகப் பணிகள் என்ன?
குருநாகல் மாவட்டம், பறகஹதெனிய கிராமத்தைச் சேர்ந்த மிகப் பெரும் சீர்திருத்தவாதியும் சமூக ஆர்வலருமான அல்லாமா அப்துல் ஹமீத் பக்ரி றஹிமஹுல்லாஹ் என்பவரால் அதே கிராமத்தில் 1947 ம் ஆண்டு இவ்வமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. அது 65 வருடங்களுக்கு மேலாக செயற்படும் மிகப் பழமைவாயந்த அமைப்பாகும். அன்றிருந்து இன்றுவரை தங்கு தடையின்றி பல சவால்களுக்கு மத்தியில் பணியாற்றி வருகின்றோம்.
இஸ்லாமிய அழைப்புப் பணி. பொதுக் கல்விப் பணி, சமூகப் பணி என்ற அடிப்டையில் வரலாற்றில் மறக்கவோ மறைக்கவோ முடியாதளவுக்கு எங்கள் சாதனைகள் நிறைந்துள்ளன. கல்வி என்பது மிகப் பெரும் சொத்து. அது இல்லையென்றால் மனித இனமே இல்லை. இஸ்லாம் கல்வியை முன் நிறுத்துகிறது. இஸ்லாத்தின் சங்க நாதமே 'ஓதுவீராக' (படிப்பீராக) என்பதுதான். எமது வழிகாட்டியான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கல்விக்கு அளித்துள்ள இடம் வேறு எந்தத் தூதுவர்களும் மார்க்கங்களும் வழங்கவில்லை என்பது யாவரும் அறிந்த ஒன்றே. அவர்கள் சொல்கிறார்கள்.
கற்பவனாக இரு அதாவது மாணவனாக இரு அல்லது கற்பிப்பவனாக இரு அதாவது ஆசிரியனாக இரு அல்லது அதற்கு உதவுபவனாக இரு நான்காவது நபராக இருக்காதே இதன் மூலம் கல்வியின் பெருமை அதற்கு உதவுவது பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன என்பது புரிந்திருக்கும் அதனால்தான் இப்பணியை எமது தலையாய பணியாகக் கருதி செயற்படுகிறோம்.
எனவேதான் இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே கல்விப் பணி தொடங்கப்பட்டு அதற்;கு உதவுவதில் நாம் மிக முனைப்போடு செயற்பட்டு வருகிறோம்.
இவ்வமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இந்த 65 ஆண்டு காலப் பகுதியில் இன்று நாம் அதில் பெரும் சாதனை படைத்திருக்கிறோம்.
தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா என்ற நாமம் சூடி எமக்கென மூன்று கல்விக் கூடங்கள் உள்ளன. அதில் (1) பறகஹதெனியவில் அமைந்துள்ளது. ஏனைய இரண்டும் முறையே கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டம் ஓட்டமாவடியில் ஒன்றும் அதே மாகாணம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையில் ஒன்றும் இயங்குகிறது. இம்மூன்றிலும் மொத்தமாக 350 பிள்ளைகள் சமகாலத்தில் கவ்வி கற்றுக் கொண்டிருக்கிறார்கள். எமது கல்விப் பணி வரலாற்றில் இது குறிப்பிடத்தக்க செயற்பாடாகும்.
பல்கலைக் கழகங்களில் கற்கும் மருத்துவம், பொறியியல், விஞ்ஞானம், வர்த்தகம், சட்டம், கலை ஆகிய சகல துறைசார்ந்த வறிய மாணவ மாணவிகளுக்கும் புலமைப் பரிசில் நிதி வழங்கி வருகிறோம். இதுவரை சுமார் 300 மாணவ மாணவிகள் இவ்வாறான உதவிகள் பெற்று தமது படிப்பை பூர்த்தி செய்திருக்கிறார்கள். உண்மையில் இது ஒரு சிறந்த நல்தொரு செயற்பாடாக நாம் கருதுகிறோம். எத்தனையோ பேர் வறுமையின் விளிம்பில் நின்று தமது பட்டப்படிப்பை முடிக்க வழிதெரியாது கைவிடும் நிலையில் இருந்தவர்களை இறைவன் அருளால் அவர்களை கரை சேர்த்து விட்டிருக்கிறோம்.
தந்தையை இழந்த அநாதைப் பிள்ளைகளுக்கு அவர்கள் க.பொ.த. உயர் தரம் படித்து முடியும் வரை தனியாக ஒரு திட்டத்தை அமுல்படுத்தி வருகிறோம். இப்பிரிவில் முழு இலங்கையிலும் சுமார் 1500 பிள்ளைகள் தற்போது பராமரிப்பிலுள்ளார்கள். ஆண் பெண் வித்தியாசமின்றி செய்யப்படுகின்ற இப்பணி மூலம் இதுவரை சுமார் 600 பிள்ளைகள் பலனடைந்துள்ளர்கள்.
புத்தகங்கள் வழங்கி நூல் நிலையங்களின் வளர்ச்சிக்கு உதி வருகிறோம். க.பொ.த. சாதாரண தரம், உயர் தரம், 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் ஆகிய வகுப்புகளுக்கு கருத்தரங்குகளை நடாத்துவது. கல்வி விழிப்புணர்வு கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்வது. அதேபோல் சமூகப் பணிகள் என எடுத்துக் கொண்டால் சமூகப் பணியும் இஸ்லாம் முக்கியத்துவம் கொடுத்துள்ள ஒரு விடயம்தான். ஒரு முறை காலில் செருப்பில்லாத தலைக்கு எண்ணெய் இட்டிராத மிக அழுக்கடைந்த ஆடைகளுடன் நபிகள் நாயகத்தின் முன்னிலையில் ஒரு கூட்டம் வந்தபோது இதனைக் கண்டு கொதித்தெழுந்து விட்டார்கள் அவர்களது முகம் மாறிவிட்டது. இதற்கு உடனடி பரிகாரம் செய்யும் நோக்குடன் தன்னைச் சூழ இருந்தவர்களிடம் தர்மத்தைப் பற்றிக் கூறி உடனடியாக நிதி திரட்டி நிவாரணமளித்தார்கள்.
எனவே, அல்குர்ஆனும் நபிகளாரின் சுன்னாவும் வலியுறுத்தும் சமூகப் பணியையும் எம் தலைமேல் சுமந்து கொண்டோம். அதுவும் இயற்கை அனர்த்ததங்கள் அடிக்கடி இடம் பெறுகின்ற இக்காலகட்டத்தில் அது மிக இன்றியமையாத ஒன்றாகும்.
சமூகப் பணிகள் ஏராளம் உண்டு. அனைத்தையும் கூறி முடிக்கின்ற அளவு இங்கு அனைத்தையுயும் சொல்லி விட முடியாது. ஒரு சிலதை தொட்டுக் காட்ட விரும்புகிறேன். தேவை ஏற்படும் பட்சத்தில் முஸ்லிம்கள் வாழும் கிராமங்களில் அரச அங்கீகாரத்தோடு சகல விடயங்களும் நன்கு ஆராயப்பட்ட பின் பள்ளி வாசல்களை அமைத்து வருகிறோம். இதே ஒழுங்கமைப்பில் எந்தவித குறையுமின்றி அல்குர்ஆன் கற்பிக்கும் மத்ரஸாக்களை நிறுவி வருகிறோம். ஏழை மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கிறோம். இதுவும் ஒரு பிரதான சமூகப் பணியாகும். குழாய்க் கிணறுகள், ஆழக்கிணறுகள், நீர்த்தாங்கியுடன் கிணறுகள், வீட்டுக் கிணறுகள், பாடசாலை, வைத்திய சாலைக் கிணறுகள் என்று கிணற்றின் பட்டியல் மிக நீளமானது. மழை, வரட்சி, குறிப்பாக சுனாமி போன்றவற்றால் ஏற்படும் அனர்த்தங்களின்போது உணவு, உடை, மருத்துவம், நிதி உதவி என்று பல்வேறு வகைகளில் எவ்வித பாரபட்சமும் பார்க்காது பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உதவி வந்திருக்கிறோம். இனிமேலும் தொடர்ந்து உதவுவோம் இன்ஷhஅல்லாஹ். காலத்திற்கேற்றவாறு நோய்களால் மக்கள் பாதிக்கப்படுகின்றபோது அதற்கேற்றவிதமாக மருத்துவ முகாம்களை அமைத்து சிகிச்சையளித்து வருகிறோம் சமூகப் பணியை இஸ்லாம் அம்மதத்து மக்களுக்குரிய பணியாக எப்போதும் கூறியதில்லை. பொதுவாக மனித நேயத்தைப் பற்றியும் மனிதத்துவம் பற்றியும் கூடுதலாகப் பேசுகின்ற மார்க்கம் இஸ்லாம். இதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதற்கு நல்லதொரு உதாரணம் அல்குர்ஆன் உங்களை ஒரே........ என்று சொல்கிறது.
அந்த வகையில் எமது சமூகப் பணி மதம், சாதி, இனம் ஆகியவற்றிற்கு அப்பால் சென்று அனைவரையும் ஒரே குடும்பமாகவே நோட்டமிடுகிறது.
இங்கு குறிப்பாக ஒரு விடயத்தை சுட்டிக் காட்ட வேண்டும். அதாவது புலிகளுடனான கடைசி யுத்தத்தின்போது இடம் பெயர்ந்த மக்களுக்கு அதிலும் குறிப்பாக மெனிக் பாம் முகாம் மக்களுக்கு பிரதேச செயலாளர் ஊடாக எமது சேவை வழங்கப்படிருந்தது.சுனாமியின்போது மட்டக்களப்பு ஓட்டமாவடி சலவைத் தொழிலாளர் மக்களுக்கு நாங்கள் அளித்த உதவிகளை அவர்கள் இன்றும் நினைவு கூர்வார்கள். மாவத்தகமை பிரதேச வைத்தியசாலைக்கு நீர் விநியோகத் திட்டத்தை முழுமையாக செய்து கொடுத்திருக்கிறோம். வன்னி மாவட்டம் வவுனியா காக்கையன்குளம் கிராமத்தில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு வெள்ள அனர்த்தத்தின்போது நிவரணங்கள் வழங்கப்பட்டன.
சமூக உணர்வு இல்லாதவன் மனிதம் இல்லாதவன் என்பார்கள் அந்த உணர்வு வெறுமனே வெளிப்பாடாக இன்றி உண்மையானதும் இதய சுத்தியுடனும் இருத்தல் வேண்டும் என்தற்கு ஏற்ப நாங்கள் முழு மூச்சாக நின்று செயற்பட்டு வருகின்றோம் என்றும் சொல்லலாம்
Post a Comment