மட்டக்களப்பில் பிள்ளையான் வெற்றி பெற்றது சந்தேகத்திற்குரியது - சம்பந்தன்
"மாகாண மட்டத்தில் அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குவது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுத்து முடிவு அதற்கு வாக்காளர்கள் வழங்கிய ஆணையை மீறுவதாகவும் கொள்கையற்றதாகவும் சந்தர்ப்பவாதமாகவும் அமைகின்றது. தாங்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வருகின்ற பிரதேசங்களில் குறுகிய கால பாதுகாப்பு ஒழுங்குகளையும் நீண்ட கால நலன்கள் பேணப்படுவதையும் வேண்டி நிற்கும் தமிழ் பேசும் மக்களாகிய தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் பாரிய தீங்கை ஏற்படுத்துவதாக இது அமைகின்றது" என தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுவின் தலைவருமான இரா.சம்பந்தன் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
வவனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்குழுக்கூட்டத்தில் கிழக்கு மாகாண சபைத்தேர்தல் பற்றியும் அதன் பெறுபேறுகள் பற்றியும் பரிசீலனை செய்யப்பட்டன. அக்கூட்டத்தின் பின்னர் வெளியிட்ட அறிக்கையிலேயே சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேற்படி ஊடக அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பும் அதன் பங்காளிக்கட்சியுமான தேசிய சுதந்திர முன்னணியும் 15 ஆசனங்களையே பெற்றன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்ட இலங்கை தமிழரசுக் கட்சி 11 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக்கட்சி 4 ஆசனங்களையும் பெற்றன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு எதிராக செயற்படுவதற்கு வாக்காளர்கள் இக்கட்சிகளுக்கு மிகப்பெரும்பான்மையுடன் கூடிய தெளிவான ஆணையை வழங்கியிருக்கின்றார்கள்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை கடுமையாக விமர்சித்தும் எதிர்ப்பதாகக் கூறியும் ஸ்ரீலங்கா காங்கிரஸ் வாக்குகளைப் பெற்றது. இலங்கை தமிழரசுக்கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் தலைமைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் ஆட்சி அமைப்பதற்காக முதலமைச்சர் பதவியையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கவும் முன்வந்தது.
மாகாண மட்டத்தில் அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குவது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுத்து முடிவு அதற்கு வாக்காளர்கள் வழங்கிய ஆணையை மீறுவதாகவும் கொள்கையற்றதாகவும் சந்தர்ப்பவாதமாகவும் அமைகின்றது. தாங்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வருகின்ற பிரதேசங்களில் குறுகிய கால பாதுகாப்பு ஒழுங்குகளையும் நீண்ட கால நலன்கள் பேணப்படுவதையும் வேண்டி நிற்கும் தமிழ் பேசும் மக்களாகிய தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் பாரிய தீங்கை ஏற்படுத்துவதாக இது அமைகின்றது.
வாக்காளர்களின் ஜனநாயகத் தீர்ப்பை வலுவற்றதாக்கியதும் துரோகத்தனமானதுமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முடிவை இலங்கை தமிழரசுக்கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது. எவ்வாறாயினும் முஸ்லிம் மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடியதும் கௌரவமானதுமான அரசியல் தீர்வு ஒன்றை காணும் உறுதிப்பாட்டில் இலங்கை தமிழரசுக்கட்சி இன்னும் திடமாக இருக்கின்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்தது போன்று, இலங்கை தமிழரசுக்கட்சி தமிழ் பேசும் மக்களாகிய தமிழ் மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் எதிர்கால நலன்களை கைவிடமாட்டாது.
மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட 12 தமிழ் உறுப்பினர்களில் 11 பேர் இலங்கைத் தமிழரசுக்கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பில் தெரிவு செய்யப்பட்ட 12 ஆவது தமிழ் உறுப்பினரான முன்னாள் முதலமைச்சரின் தெரிவு மிகவும் கேள்விக்குரியது ஒன்றாகும். ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு பட்டியலில் ஆகக்கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார். அப்பட்டியலில் வேறு ஒரு தமிழ் வேட்பாளரும் அவ்வெற்றிக்கு அருகில் வரவில்லை
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியலில் இருந்து குறைந்தது ஒரு தமிழ் வேட்பாளராவது வெற்றி பெற்றுள்ளார் என்பதைக் காட்டுவதற்காகவே முன்னாள் முதலமைச்சருக்கு சாதகமாக திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையே அவரின் வெற்றியாகும் என்று மட்டக்களப்பு மாவட்ட வாக்காளர்கள் நம்புகின்றனர். அரசமைப்புச் சட்டத்தின் 17 ஆவது திருத்தத்தை ரத்துச் செய்தமையே இந்த நேர்மையற்ற செயலுக்கு உதவியுள்ளது.
Post a Comment