Header Ads



ரவூப் ஹக்கீமை திட்டித் தீர்க்கும் இடதுசாரிகள்...!


உதயன்

சுகபோக அரசியலுக்காகத் தனது இனத்தைக் காட்டிக்கொடுத்தது மட்டுமல்லாது, இனத்தின் தனித்துவத்தையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இனவாத  கொடுங்கோல் மஹிந்த அரசின் காலடியில் அடகுவைத்துள்ளது  என்று இடதுசாரிக் கட்சிகள் குமுறி சீறிப்பாய்ந்துள்ளன.

அத்துடன், இலங்கை வரலாற்றில் இனத்துரோகிகளின் பட்டியலில் கருணா, பிள்ளையான் ஆகியோருக்கு அடுத்தபடியாக சலுகைகளுக்கு அடிபணிந்து தற்போது அமைச்சர் ஹக்கீமும் இணைந்துகொண்டுள்ளார் என்றும் இடதுசாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

இதேவேளை, புனித குர்ஆனில் போதிக்கப்பட்டுள்ள சிந்தனைகளைப் புறந்தள்ளிவிட்டு, மஹிந்த சிந்தனையில் போதிக்கப்பட்டுள்ள மோசடிகளைக் கட்டிப்பிடித்துக்கொண்டு கொள்கையிழந்த கட்சியாகத் தற்போது அரசியல் களத்தில் மு.கா. வலம் வருகின்றது எனவும் அந்தக் கட்சிகள் மேலும் தெரிவித்தன.

கடந்த எட்டாம் திகதி நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இரண்டு போனஸ் ஆசனங்கள் அடங்கலாக 14 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தாலும், ஆட்சியமைப்பதற்குத் தேவையான அறுதிப்பெரும்பான்மையை அது கொண்டிருக்கவில்லை.

அதேவேளை, கிழக்குத் தேர்தலில் 11 ஆசனங்களைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஐ.தே.கவும் தனது நான்கு ஆசனங்களைஎதுவித நிபந்தனையுமின்றி வழங்குவதற்கு முன்வந்ததால் கிழக்கில் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் காங்கிரஸ் உருவெடுத்தது. 

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மு.கா. ஏழு ஆசனங்களைப் பெற்றிருந்தமை தெரிந்ததே. இந்நிலையில், ஆட்சியைத் தீர்மானிக்கும் அஸ்திரம் மு.காவிடம் இருந்ததால், அக்கட்சியின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கு  அரசும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டன. இரு தரப்புகளும் மாறி மாறி மு.காவுடன் பேச்சு நடத்தின.

இச்சந்திப்புகளின்போது முதலமைச்சர் பதவி உட்பட தாராள விட்டுக்கொடுப்புக்கு தமது தரப்பு தயார் என்று கூட்டமைப்பு மு.காவிடம் உறுதியளித்தது. அதுமட்டுமன்றி, அதற்கு ஒரு படி மேலே சென்று வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெறுகையில் அங்கு ஒரு போனஸ் ஆசனத்தைத் தருவதாகவும் அது மு.காவிடம் கூறியது. 

எனினும், மு.கா. தலைமை, கூட்டமைப்பின் கோரிக்கைகளை ஏற்று சாதகமானதொரு பதிலை வழங்காமல் காலத்தை இழுத்தடித்துவந்தது. இந்நிலையில், திடீரென அந்தக் கட்சி தமது ஆதரவை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு வழங்கியது. 

 இதனையடுத்து, கிழக்கு மாகாணத்தில் அரசு மீண்டும் தமது ஆட்சியை அமைத்தது. 

எனினும், முஸ்லிம் காங்கிரஸுக்கு அரசு முதலமைச்சர் பதவியை வழங்காமல், தனது கட்சியின் உறுப்பினர் நஜீப் அப்துல் மஜீத்துக்கு அந்தப் பதவியை வழங்கியது.  பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்த மு.கா. ஏமாற்றமடைந்ததுடன், இரண்டு அமைச்சுப் பதவிகளையும் மன்றாடிப் பெற்றது. 

எந்தவித விட்டுக்கொடுப்பையும் செய்வதற்குத் தயார் எனக் கூட்டமைப்பு பகிரங்கமாக அறிவித்தபோதிலும், அவர்களுடன் இணையாமல் மு.கா. ஏன் அரசுடன் இணைந்தது என்ற கேள்விக்கு அக்கட்சி பணத்திற்காக சோரம் போய்விட்டது என்றே அநேகமானோர் பதிலளிக்கின்றனர்.

அத்துடன், மு.காவின் இந்த முடிவு வரலாற்றுத் துரோகம் என விமர்சனங்கள் எழுந்துள்ள அதேவேளை,  கிழக்குவாழ் முஸ்லிம் மக்களும் அவர்களின் முடிவை அங்கீகரிக்கவில்லை என்றே கூறப்படுகின்றது. 

இந்நிலையில், அரசுக்கு மு.கா.  தமது ஆதரவை வழங்கியதைக் கடுமையாக விமர்சித்துள்ள இடதுசாரித் தலைவர்கள் வரலாற்றுச் சந்தர்ப்பத்தை மு.கா. வரலாற்றுத் துரோகமாக மாற்றியுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மு.காவின் இறுதிநேர முடிவு குறித்து கருத்து வெளியிட்ட இடதுசாரிக் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கூறியவை வருமாறு:

சிறிதுங்க ஜயசூரிய

சலுகைகளுக்காகவும், வெறும் பணத்துக்காகவும் மு.கா. தனது இனத்தைக் காட்டிக்கொடுத்துள்ளது. அத்துடன், முஸ்லிம்களின் தனித்துவத்தை அது இனவாத அரசின் காலடியில் அடகுவைத்துள்ளது.மரச்சின்னத்தையும், மறைந்த தலைவர் அஷ்ரப்பின் நாமத்தையும் வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் ஹக்கீமுக்கு இனத்தின் மீது எந்தப் பற்றுமில்லை என்பதுடன், பதவி, பட்டம் ஆகியனவே அவரின் முதல் இலக்காகும்.

தமிழ் பேசும் மக்களின் விடியலுக்காகத் தமக்கு கிடைக்கப்பெற்ற சக்தியை மு.கா. பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், பணம் அவர்களின் கண்களை மறைத்துவிட்டது. மு.காவின் செயல் வரலாற்றுத் துரோகமாகும்; இதை மன்னிக்கமுடியாது; இதற்கு மன்னிப்பும் கிடையாது என்று குறிப்பிட்டார் ஐக்கிய சோஷலிஸக் கட்சியின் பொதுச் செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய.

கலாநிதி விக்கிரமபாகுகருணாரட்ன

முஸ்லிம் மக்களின் வாக்குகளைத் தம்மால் பெறமுடியாது என்பது மஹிந்த அரசுக்கு நன்கு தெரியும். இதனால், சிறுபான்மையின மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காகவே அமைச்சர் ஹக்கீமை ஜனாதிபதி ஒப்பந்தத் தரகராக  கைக்கூலியாகப் பயன்படுத்தினார். இது தற்போது அம்பலமாகியுள்ளது.

குறிப்பாக, முஸ்லிம் மக்கள் குர்ஆனை புனித நூலாக மதிக்கின்றனர். ஆனால், அந்த மதத்தைச் சார்ந்த அமைச்சர் ஹக்கீம், புனித குர்ஆனைப் புறந்தள்ளிவிட்டு மஹிந்த சிந்தனையிலுள்ள மோசடி  திருட்டுத்தனமான சிந்தனைகளைப் பின்பற்றி வருகின்றார். இது வெட்கக்கேடான செயலாகும்.

இலங்கை வரலாற்றில் தமது இனத்தைக் காட்டிக்கொடுத்தவர்கள் சிலர் உள்ளனர். கருணா, பிள்ளையான் ஆகியோரின் பட்டியலில் தற்போது அமைச்சர் ஹக்கீமும் இணைந்துகொண்டுள்ளார். இது வரலாற்றுத் துரோகமாகும்.தமிழ் பேசும் சமூகத்தின் அந்தஸ்தை உயர்த்துவதற்குக் கிடைக்கப்பெற்ற அருமையான சந்தர்ப்பத்தை ஹக்கீம் தனது அந்தஸ்தைப் பணரீதியில் உயர்த்துவதற்குப் பயன்படுத்திக்கொண்டுள்ளார். 

அவரை வரலாறுகூட மன்னிக்காது. ஏன், முஸ்லிம் மக்களும்கூட மன்னிக்கமாட்டார்கள். இனிமேல் மு.காவுக்கு அரசியல் களம் அக்கினிப் பரீட்சையாகவே அமையும்   என்று கூறினார் நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன.

மஹிந்த கமகே

ஹக்கீம் மு.காவின் தலைமைப் பொறுப்பையேற்றபின்னர் முஸ்லிம் மக்களைத் தொடர்ந்தும் காட்டிக்கொடுப்பதையே அவர் தனது தொழிலாகக் கொண்டுள்ளார். மஹிந்த அரசின் ஏகாதிபத்திய பொறிக்குள் அவர் தனது இனத்தைச் சிக்கவைத்துள்ளார்  என்றார் சோஷலிஸக் கட்சியின் செயலாளர் மஹிந்த கமகே

2 comments:

  1. ஹக்கீம் அவர்களது முடிவு சரியானது என நான் கூற வில்லை. ஆனால் நீங்கள் அனைவரும் முஸ்லிம்களின் பாதுகாப்புக்கும் அவர்களது பள்ளிவாசல்களுக்கும் அச்சுறுத்தல் விட்டுகப்பட்ட போது எங்கே உங்களது அறிக்கைகளையும் கண்டனங்களையும் காண முடியவில்லையே..!!!!!..???????

    ReplyDelete

Powered by Blogger.