Header Ads



நளீம் ஹாஜியார் செல்வத்தால் போராடிய முன்மாதிரி !


உஸ்தாத் எம்.ஏ.எம்.மன்சூர்  (நளீமி)

நளீம் ஹாஜியார் என்ற உயர்ந்த மனிதர் உருவாக பின்னணியாக அமைந்த காரணிகள் எவை? அப்படி ஒரு மனிதனை உருவாக்க உந்து சக்தியாக எவை இருந்தன? அவரில் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்திய ஆளுமை அல்லது ஆளுமைகள் யாவை என்று தேடினால் எதனையும் கோடிட்டு வரையறுத்துக் காட்ட முடியாத ஒரு திகைப்புக்கே உட்படுவோம்.

ஒரு மிகச் சிறிய குடும்பத்தின் அங்கத்தவர். வறுமையோடு போராடப்போய் 5ம் வகுப்போடு தமது அறிவு தேடும் வாழ்வை நிறுத்திக் கொண்டவர். பின்னர் பல வகையில் உழைத்து மாணிக்க கல் பட்டை தீட்டும் தொழிலில் சேர்ந்து படிப்படியாக முன்னேறியவர்.

மிகவும் பாரம்பரியப் போக்கும் தரீக்கா செல்வாக்கும் கொண்ட ஊரில் வளர்ந்து உருவானவர். எந்த இயக்கத்திலும் சேர்ந்து கொள்கைப் போதனை பெறாதவர்.

ஒரு பணக்காரன் சமூக சேவைகளில் ஈடுபடுவதும் பல ஆயிரங்களை செலவழிப்பதும் பெரும் ஆச்சரியத்துக்குரிய விடயமல்ல. அத்தகையவர்களை நாம் வரலாற்றிலும் காணலாம். தற்போது பல ஊர்களிலும் நாம் அவதானிக்கலாம். அதுவல்ல நளீம் ஹாஜியாரிடம் காணப்படும் விஷேசம்.

மேற்சொன்ன வகையில் எல்லாமே எதிர்மறைச் சூழ்நிலையாக இருந்தும் நளீம் ஹாஜியார் என்ற பெரும் ஆளுமை உருவானது தான் ஆச்சரியமானது.

ஒரு பணக்காரன் ஒரு பாரம் பரிய மத்ரஸாவை உருவாக்கலாம்; அதற்காக செலவிடலாம்; ஏழை மாணவர்கள் பலருக்கு உதவிகள் வழங்கி அவர்களைப் படிக்கச் செய்யலாம்; ஏழைகளின் திருமணங்களுக்கு உதவலாம்; பள்ளிகள் கட்டிக்கொடுக்கலாம்; அல்லது கட்ட உதவலாம். இவை எல்லாம் இயல்பானவை. ஆங்காங்கே நாம் அவதானிப்பவை. ஆனால் நளீம் ஹாஜியார் அப்படி சாதரணமாக எல்லோரும் சென்ற பாதையில் போகவில்லை. தமக்கொரு புதிய பாதையை அது கடினமாக இருப்பினும் அவர் அமைத்துச் கொண்டார்.

நளீம் ஹாஜியாரின் வாழ்க்கைப் போக்கை இப்போது அவதானிப்போம். வறுமையிலிருந்து கடின உழைப்பால் அவர் விடுபடுகிறார். பிறருக்காக உதவும் பண்பு அவரிடம் இயல்பாகவே ஒட்டிக்கொள்கிறது. தரீக்கா சூழ்நிலையால் நல்ல பக்தியுள்ள வராகவும் இஸ்லாமிய அனுஷ்டானங்களில் கவனமுள்ளவராவும் தன்னை வளர்த்துக்கொள்கிறார். இளமைப் பருவத்திலேயே அக்கால வழமைக்கு மாற்றமாக ஹஜ்ஜும் செய்கிறார். ஆனாலும் குருட்டு பக்தியோ பிழையான வணக்க சம்பிரதாயங்களோ அவரிடம் ஒட்டிக் கொள்ளவில்லை.

ஆரம்பத்தில் நளீம் ஹாஜியார் ஏழைகளுக்கு உதவுகிறார். பள்ளிகள் கட்ட உதவிகள் பல புரிகிறார். ஆனால் அப்போக்கு அவரைத் திருப்தியுறச் செய்யவில்லை என்பது அவர் பிற்பட்ட காலங்களில் செயற்பட்ட முறைகளிலிருந்து விளங்குகிறது. நளீம் ஹாஜியார் சமூக மாற்றமொன்றின் அவசியத்தைப் புரிந்து கொள்கிறார். அது பாரம்பரிய மத்ரஸாக்களுக்கு அப்பாற்பட்டதொரு வேலைத்திட்டத்தின் மூலமே சாத்தியம் என்பதையும் அவர் புரிந்து கொள்கிறார்.

நளீம் ஹாஜியார் ஒரு புரட்சியாளரல்ல: ஸைய்யித் குதுப், மௌலானா மௌதூதி போன்ற புரட்சிகர சிந்தனையாளர்களின் கருத்துக்களையும் சிந்தனைகளையும் படித்து அப்பின்னணியில் சமூக மாற்றம் குறித்து அவர் சிந்திக்கத் தெரிந்தவரல்ல. ஆனால் படிக்காத மேதைகள் பலரை உலகு கண்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை. தனது சமூகத் தையும் பாரம்பரிய மத்ரஸாக்களையும், மேற்கத்தியக் கல்வி பயின்றோரையும் நளீம் ஹாஜியார் கூர்ந்து அவதானித்தார். தனது சமூகம் ஒரு பாரிய மாற்றத்தை வேண்டி நிற்கிறது என்பதை அவர் புரிந்து கொள்கிறார்.

இப்பின்னணியில்தான் ஏ.எம்.ஏ. அஸீஸ், நீதிபதி மர்ஹூம் ஏ.எம். அமீன் போன்ற மேற்கத்தைய அறிவுப் பின்னணியைக் கொண்டவர்களோடும் தொடர்பு வைக்கிறார். மௌலவி தாஸீன் நத்வி, மௌலவி ஏ.எல்.எம் இப்றாஹீம் போன்ற சமூகத்தில் அப்போது வித்தியாசமான போக்குக் கொண்டவர்கள் என்று கணிக்கப்பட்டவர்களோடும் தொடர்பு வைக்கிறார்.

இந்தப் பின்னணியில் ஒரு பணக்காரன் பெரிய எந்த சிந்தனைப் பின்னணியும் இல்லாமல் புரட்சிகரமான இஸ்லாமியக் கல்வி நிறுவனமொன்றை உரு வாக்கியமை உண்மையில் ஒரு ஆச்சரியப்படத்தக்க விடயம் என்பதில் சந்தேகமில்லை.

வித்தியாசமான கல்வித்திட்டம், வித்தியாசமான உடையும் நடைமுறையும் இலங்கை பாரம் பரிய சிந்தனை ஏற்காத அறபுலக அறிஞர்களின் நூல்கள் கொண்ட வாசிகசாலை, இலங்கையின் பாரம்பரிய போக்கால் ஏற்க முடியாத முதலாவது அதிபர், அஷ் ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி, யூஸுப் அல் கர்ளாவி போன்ற சிந்தனையாளரக்ளின் வருகை இவை போனற்றவற்றை நளீம் ஹாஜியார் மிகவும் இலகுவாக ஏற்றுக்கொள்கிறார்.

நளீமிய்யா ஆரம்பித்தாயிற்று. ஆனால் அது இந்த வித்தியாசமான சூழ்நிலையில் உடனே பயன் கொடுக்கும் என ஒரு போதும் நம்ப முடியாத, துவங்கி மிக ஆரம்ப காலத்திலேயே நீதிபதி அமீன், அறிஞர் ஏ.எம்.ஏ அஸீஸ் இருவரும் மரணித்து விடுகிறார்கள். இப்போது மிகப் பாரிய தளம்பலுக்கும் பல குழப்ப நிலைகளுக்கும் நளீமிய்யா உட்படுகிறது. நளீம் ஹாஜியாரைத் தவிர வேறொருவராக இருந்திருந்தால் இது நடைமுறைச் சாத்தியமல்ல என்று கண்டு நளீமிய்யா மூடப்பட்டிருக்கும் அல்லது பாரம்பரிய மத்ரஸாவாக மாறி இருக்கும். அப்படியொரு நிலைமை நிகழவிருந்ததை நளீமிய்யாவோடு நெருங்கிய தொடர்புள்ள வர்களும், நளீமிய்யாவின் ஆரம்ப கால மாணவர்களும் அறிவர்.

ஆனால் நளீம் ஹாஜியார் விடாப்பிடியாக நின்றார். வீசிய எல்லாப் புயல்களையும் எதிர் கொண்டார். ஈற்றில் நளீமிய்யா- சமூகம் எதிர்பார்க்கும் உயர் கல்வி நிறுவனமே என்பதை முஸ்லிம் சமூகம் ஒப்புக்கொண்டது.

நளீமிய்யாவின் விளைவுகள் என்ன?

இஸ்லாமிய அறிவுப் பகுதியில் காத்திரமான பல பங்களிப்புகளை அதன் மாணவர்கள் செய்தார்கள்; செய்கிறார்கள். நவீன இஸ்லாமிய சிந்தனையை இந்த நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவர்களும், அறிமுகப்படுத்திக் கொண் டிருப்பவர்களும் அவர்களே. இலங்கையின் பல்வேறு பகுதிகளில் உருவாகிய ஸகாத் நிறுவனங்களுக்கு வழிகாட்டும் நூலொன்றை அவர்கள் தயாரித்து வெளியிட்டார்கள். இஸ்லாமிய பத்திரிகை, சஞ்சிகைகள் ஆரம்பித்து நடாத்துகிறார்கள்.

இலங்கையின் இஸ்லாமிய இயக்கங்களின் உந்து சக்தியாவும், பல ஊர்களில் இஸ்லாமிய விழிப்புணர்ச்சியை உண்டாக்கும் சக்தியாகவும் அவர்கள் திகழ்கி றார்கள்.

வேறு பல துறைகளில் நுழைந்து, படித்து அரச நிறுவனங்களில் அமர்ந்து தன் சுயத்தை இழக்காது சமூக உணர்வோடு பணி புரியும் பல நளீமீக்களை நாம் காணமுடியும்

ஆசிரியர்களாவும் அதிபர்களா கவும் இருந்து இஸ்லாமிய உணர்வோடும், சமூகப்பற்றோடும் உழைக்கும் நளீமிக்களையும் பரவலாக நாம் காண முடியும்.

அல்லாஹ்வின் பேரருளால் இந்த நாட்டின் இஸ்லாமிய மாற்றத்திற்கு நளீமிக்களின் பங்களிப்பு மகத்தானது என்பதனை எதிர்கால வரலாறு இன்ஷா அல்லாஹ் நிச்சயம் பறைசாற்றும்.

நளீம் ஹாஜியாரின் வரலாற்றுப் பங்களிப்பைக் காட்ட இது ஒன்றே போதும். ஆனால் இத்தோடு நிற்க முயலவில்லை. அவர் முஸ்லிம் சமூகமெங்கும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் படித்து விட்டு, தொடர்ந்து படிக்க முடியாது நிற்கும் மாணவர்கள் பற்றி சிந்தித்தார். தொழில் நுட்பத் துறையில் எத்தைகைய ஈடுபாடுமற்ற தன் சமூகம் அப்பகுதியல் நுழைவது காலத்தின் தேவை என்றுணர்ந்தார். இக்ரஃ தொழில் நுட்பக் கல்லூரியை ஆரம்பித்தார்.

அறிவில் சிறியவர் போல் வாழ்ந்து இவ்வளவு பெரும் உண்மைகளை தன் வாழ்வில் காட்டிய அந்த மனிதர், வரலாறு மிக அருமையாகவே காணும் மனிதன் என்பதில் சந்தேமில்லை.

தான் சம்பாதிக்கத் துவங்கியது முதல், பணத்தாலேயே இறைபாதையில் போராடி வாழ்ந்த அந்த முஜாஹித்துக்கு அல்லாஹ் அருள் பாலிப்பானாக! சிறுபான்மை சமூகத்தின் முதல் முக்கிய அடிப்படை ஜிஹாத் பணத்தின் மூலமான ஜிஹாத் தான் என உணர்த்திய அம் மனிதர் எம் செல்வந்தர்களுக்கு முன்மாதிரியாக அமைவாராக..!



3 comments:

  1. நளீமியாவின் முதல் திறப்பு விழாவில் எல்லாவற்றிலும் பாசாகி, ஓதலில் பிழை விட்டதினால் அங்கெ மார்க்க கல்வியை தொடர முடியாமல் போய் விட்டது.இன்று நினைத்தாலும் கவலைதான்.என்னை ஓதலில் இன்டர்வியு
    செய்தது மர்ஹும் A M A Azeez அவர்கள்.எனக்கு அவரைத் தெரியும் ஆனால் அவருக்கு என்னை ஞாபகம் வைத்திருக்கும் அளவு நான் எதுவும் சாதிக்கவில்லையே.நளீமியா ஆரம்பித்து ஒரு சில மாதங்களுக்கு பின் என்னை என் தாயுடன்
    கண்டதும் இன்னாருடைய மகன் என்று சொல்லியிருக்கலாமே என்று கவலைப்பட்டார்.எல்லாவற்றுக்கும் அல்லாஹ்வின் நாட்டம் வேண்டுமே.நளீம் ஹஜியாருக்கும் அதனுடன் சம்பதப்பட்டவர்களுக்கு கூலி அல்லாஹ்விடத்தில் இருக்கிறது

    ReplyDelete
  2. நலீம் ஹாஜியாரின் மாணிக்க கல் பட்டை தீட்டும் தொழிலும் மாணிக்கக் கல் வியாபாரமும் அவர் வாழ்வில் எதிர்கொண்ட கஷ்டங்களும் இறை அருளால் அவருக்கு சமூக முன்னேற்றத்திற்கான காய்களை சரியாக இனங்காண உதவியுள்ளது என்பது எனது அபிப்பிராயம்.

    ஒரு கைதேர்ந்த விய
    ாபாரி தனது வியாபார்தைக் கச்சிதமாக முடிப்பதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வார். அந்த வகையில் மர்ஹும் நலீம் ஹாஜியாரும் அல்லாவின் பொருத்தத்திற்காக தான் முன்னெடுத்த சமூக முன்னேற்றம் எனும் அல்லாவுடனான வியாபாரத்தில் அவசியமான பத்தி ஜீவிகள் பல இஸ்லாமிய இயக்கங்களைச் சேர்ந்த ஆலிம்கள் என பொருத்தமான அனைத்துத் தரப்பினரையும் அவரது செயற்பாட்டுத் தளம் உள்வாங்கியிருந்தமை புலப்படுத்துகின்றது.

    இதனை எதிர்மறையாகக் குறிப்பிடுவதாயின் "சமூகம் மாறினால்தான் நான் உதவுவேன்" என்ற நிலைப்-பாட்டில் அவர் இருக்கவில்லை. மாறாக எனது பங்களிப்பு சமூகத்திற்கு அவசியம் என்பதில் அவருக்கு மிக உறுதியான நம்பிக்கை இருந்தது.

    ஒரு கைதேர்ந்த வியாபாரி தனது வியாபாரத்தை பன்மடங்கு பெருக்குவது குறித்து திட்டமிடுவதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதிலும் பின்னிற்க மாட்டான். இன்று மர்ஹும் நலீம் ஹாஜியார் அவர்கள் எம்முடன் இருந்தால் அவரால் முன்னெடுக்கப்படும் அல்லாவுடனான சமூகப்பங்களிப்பு எனும் உன்னதமான வியாபாரம் இன்னும் இந்ந நாட்டில் வியாபிக்க வேண்டும்; அதன் விளைவாக அபிவிருத்தி எனும் இலாபத்தை எமது சமூகமும் நாடும் மேலும் மேலும் அனுபவிக்க வேண்டும் என்பதனை நிச்சயம் வலியுறுத்தியிருப்பார் என்பதனை மிக உறுதியாகக் குறிப்பிடலாம்.

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அழைக்கும்!
    மர்ஹூம் நளீம் ஹாஜியார் அவர்கள் பற்றிய கட்டுரயை படிக்கும் போது யாழ்ப்பணத்தில் இருந்து 1986இல் ஒரு குழுவாக
    சென்று சந்திததுதான் நினைவுக்கு வருகிறது மிகப் பெரிய மனிதர் அவர் அல்லாஹ்அவருக்கு சகல பாக்கியத்தையும் இன்மையில் கொடுத்தது போல் மறுமையிலும் கொடுப்பானாக!அவரின் கை படாத பள்ளிவாசல்களும்,மார்க்க கல்வி நிலையங்களும் இல்லை என்று சொல்வார்கள்.தரீக்கத்துகளுக்கு மத்தியில் ஒரு மாறுபட்ட மனிதராக அவர் விளங்கினார்..உஸ்தாத் மன்சூர் (நலீமி)அவர்கள் எங்களுக்கு யாழ்பாணத்தில் மார்க்கவிளக்கவுரை நடத்திய ஆரம்ப உஸ்தாத் ஆவார் அவருக்கும் எங்கள் சலாத்தை தெரிவிக்க கிடைத்த சந்தர்ப்பமாக இதை கருதுகிறோம்...சலீம்..அப்துர் ரவூப்,..அப்துல் ரஹீம்ஆசிரியர்....

    ReplyDelete

Powered by Blogger.