Header Ads



அலிசாஹிர் மௌலானா முதலமைச்சராக வந்தால்..! - இனவாதம் கக்கும் தமிழ் எம்.பி.

 
அரசாங்கத்துக்கு தன்னுடைய கட்சியில் ஒரு தமிழனுக்கு முதலமைச்சர் பதவி கொடுக்கும் எண்ணம் இல்லாத காரணத்தினாலேயே ஆட்சிக் காலம் முடிவடைவதற்கு முன்பு அவசரமாக கிழக்கு மாகாண சபையைக் கலைத்துள்ளது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டடமைப்பு மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து செங்கலடி பிரதேசத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.  பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
 
அரசாங்கக் கட்சியைச் சேர்ந்த ஒரு தமிழன் ஆட்சி புரிகின்ற மாகாண சபையை ஏன் ஒரு வருடம் முன்பாக கலைக்க வேண்டும். அரசாங்கத்துக்குத் தன்னுடைய கட்சியில் ஒரு தமிழனுக்கு முதலமைச்சர் பதவி கொடுக்கும் நோக்கம் இல்லை. தமிழனின் முதலமைச்சர் பதவியைப் பறிக்க வேண்டும் என்பதற்காகவே அரசாங்கம் கிழக்கு மாகாண சபையைக் கலைத்துள்ளது.
 
2010ஆம் ஆண்டு வட மாகாண சபைத் தேர்தலை நடத்தி ஆட்சியை மாகாண சபையிடம் கொடுப்பேன் என்று கூறிய அரசாங்கம் 2010 கொடுக்கவில்லை. இப்போது 2013 என்று கூறிக் கொள்கிறது. காரணம் வட மாகாணத்திலே தேர்தலை நடத்தினால் ஒரு தமிழன்தான் முதலமைச்சராக வருவான்.
 
கிழக்கு மாகாணத்திலே அரசாங்கத்தோடு ஒட்டிக்கொண்டிருக்கிற தனது கட்சியைச் சார்ந்த ஒரு முஸ்லிமை முதலமைச்சராக கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் இந்த அரசாங்கதுக்கு ஏற்பட்டதன் காரணமாகத்தான் ஒரு வருடம் முன்பாகவே கிழக்கு மாகாண சபையைக் கலைத்துள்ளது.
 
அது மட்டுமன்றி எதிர்வரும் நவம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையினால் மனித உரிமைப் பேரவை கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் அரசாங்கம் தமிழ் மக்கள் சார்பாக சரியானதொரு தீர்வுத் திட்டத்தைக் கொடுக்க வேண்டிய நிலையிலுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாண சபையைக் கலைத்து தேர்தலை நடத்தி அதிலே வெற்றி பெற்று கிழக்கு மக்கள் எல்லாம் என்னுடன் தான் இருக்கிறார்கள், நான் செய்வதெல்லாம் சரி, எனக்கு வாக்களித்துள்ளார்கள். ஆகவே, தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வொன்றைக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் எதனையும் கோரவில்லை என்பதை காட்டுவதற்காக எடுக்கப்படுகின்ற ஒரு நடவடிக்கைதான் இந்தக் கிழக்கு மாகாண சபைத் தேர்தல்.
 
கிழக்கு மாகாண சபையிலே இருந்த முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் தமிழ் மக்களுக்காக என்ன செய்திருக்கிறார்? ஆரையம்பதியிலே எமது மக்களின் காணிகள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. அதை எவருக்கும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதற்காக பல அமைப்புகள் போராடின. முன்னாள் முதலமைச்சரின் 35ஆவது பிறந்தநாள் நிகழ்வை ஆரையம்பதியிலே கொண்டாடி இந்த காணி பிரச்சினைக்கு ஒரு தடையை ஏற்படுத்துமாறு ஒரு மகஜரை கொடுத்தார்கள். அதை நன்றாக படித்துவிட்டு முன்னாள் முதலமைச்சர் ஆரையம்பதியில் முஸ்லிம்கள் குடியேறுவதை எந்தவொரு தமிழனாவது தடுக்க முற்பட்டால் நான் பழைய பிள்ளையானாக மாற வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறியுள்ளார். இவருக்குத்தானா மீண்டும் முதலமைச்சர் பதவியை வழங்க வேண்டும்.
 
அரசாங்கத்தின் சார்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள அமீர் அலி இவர் ஓட்டமாவடி பிரதேசத்தை நகர சபையாக மாற்ற வேண்டும் என்பதற்காக வாகரைப் பிரதேசத்தில் 17 தமிழ்க் கிராமங்களையும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 5 தமிழ் கிராமத்தையும் தங்களோடு இணைப்பதற்கு பல முயற்சிகள் எடுத்துள்ளார். இதற்கு முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானும் துணை போயுள்ளார். இந்த விடயம் அமைச்சரவைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதி பெறப்பட்டிருந்தது. ஆனால், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்புக் காரணமாக இந்த முயற்சி கைவிடப்பட்டது. அரசாங்கத்துக்கு வாக்களித்தால் அமீர் அலி முதலமைச்சராக வருவார். எமது தமிழ் கிராமங்களை அநியாயமாக தாரை வார்த்துக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
 
மாவட்ட செயலகத்திலே எல்லை நிர்ணயம் தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இதிலே அரச தரப்பு இன்னுமொரு முதலமைச்சர் வேட்பாளரும் ஏறாவூர் நகர சபையின் தவிசாளருமான அலிசாஹிர் மௌலானா ஏறாவூர் நகரை மாநகர சபையாக மாற்ற வேண்டும் என்பதற்காக பெரிய ஒரு வரைபடத்துடன் வந்திருந்தார். அதிலே தமிழ் பிரதேசங்களான ஆயித்தியமலை தொடக்கம் தன்னாமுனை மற்றும் தளவ????? சவுக்கடி போன்ற பாரிய நிலப்பரப்பை ஏறாவூருடன் இணைக்க வேண்டும் என்று பாரிய திட்டத்துடன் வந்திருந்தார். இதனைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்த்தோம். எமது மண்ணை எவரும் கொண்டு போக அனுமதிக்கமாட்டோம் எனக் கூறினோம். அரசாங்கத்துக்கு வாக்களித்து அவர் முதலமைச்சராக வந்தால் என்ன நடக்கும் என்பதைப் பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள்.
 
சந்தனமடு ஆற்றிலே பெரும்பான்மை இனத்தவர் மண்ணை ஏற்றிச் செல்வதற்கு அனுமதி பெற்றுக் கொடுத்தவர் பிரதியமைச்சர் கருணா அம்மான் அவர்கள். அதை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தடுத்து நடவடிக்கை எடுத்த போது ஆற்றிலே எல்லோரும் மண்ணை ஏற்றலாம் என்று பெரும்பான்மையினருக்கு வழியமைத்துக் கொடுத்தவர் முதலமைச்சர் பிள்ளையான். எதிர்வரும் காலங்களிலே மழை பெய்யுமாகவிருந்தால் சித்தாண்டி, வந்தாறுமூலை, கொம்மாதுறை, முறக்கொட்டாஞ்சேனை, சந்திவெளி போன்ற பிரதேசங்கள் நீரில் மூழ்குவதை எவராலும் தடுக்க முடியாது.
 
கால்நடைகளுக்காக மேய்ச்சல் தரை என எமது மக்களுக்காக ஒதுக்கப்பட்ட காணிகளை பெரும்பான்மை இனத்துக்கு தாரை வார்த்துக் கொடுத்தவர்கள் இவர்கள் இருவரும்.
 
சிறுபான்மை இனத்தைப் பாதிக்கக்கூடிய வகையிலும் எமது காணிகளை மத்திய அரசாங்கத்துக்கு தாரைவார்த்துக் கொடுக்கக்கூடிய வகையிலும் அமையும். நாடு நகர அபிவிருத்தி திருத்த சட்ட மூலம் கிழக்கு மாகாணத்திலே கொண்டுவரப்பட்ட போது முன்னாள் முதலமைச்சர் எதிர்க்காமல் பின்போட்டுக் கொண்டு வந்தார். ஏன் அதை எதிர்த்து பிரேரணையைக் கொண்டு வரவில்லை. ஆனால், ஒரு சிங்கள மாகாண சபை அதை எதிர்த்து பிரேரணையைக் கொண்டு வந்த காரணத்தினால் அந்த சட்டம் அமுல்படுத்தப்படவில்லை. அதன் பின்னர் தாங்களும் எதிர்ப்பதாகக் கூறினார்கள். இப்படிப்பட்டவர்களுக்கா நீங்கள் வாக்களிக்கப் போகிறீர்கள்?
 
எமது மக்கள் உரிமையுடன் வாழ வேண்டும் என்று ஒரு விடுதலையைப் பெற்றுத் தருவதற்காக மடிந்த எமது தியாகிகளுக்காக எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்'' என்றார்.

1 comment:

  1. ஐயா யோகேஸ்வரன் அவர்களே, நிலப் பிரதேசங்களை இணைத்துத்தான் மாநகர சபையை உருவாக்க வேண்டுமென்பதில்லை. இருப்பதைப் பிய்த்துப் போட்டு பிரித்துக் கொடுத்தும் மாநகர சபையை உருவாக்கலாம்.
    என்ன நான் சொல்வது புரிகிறதா?
    புரியவில்லை என்றால் அமைச்சர் அதாஉல்லாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அக்கரைப்பற்றை இரண்டாகப் பிளந்து போட்ட வித்தையைச் சொல்லித் தருவார்.

    ReplyDelete

Powered by Blogger.