புர்கான் பீ இப்திகார்..!
தினகரன் வாரமஞ்சரி
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஐந்து தசாப்தங்களுக்கு மேல் தன் ஆக்கங்களாலும் குரல்வளத்தாலும் இலங்கையிலும் கடல் கடந்த நாடுகளிலும் உள்ள வானொலி நேயர்களின் நெஞ்சோடு நெஞ்சம் கலந்தவர் புர்கான்பீ இப்திகார்.
வானலையூடே நேசமிகு நெஞ்சங்களைத் தொடுகின்ற கருவூலங்களைச் செவிமடுக்கும் ஆயிரமாயிரம் நேயர்களின் அபிமானத்தைப் பெற்றவர். நல்ல கருத்துகள் காற்றோடு போய்விடக் கூடாது என்று செயலுருவைப் பெற களம் இறங்கியவர். மாதர் மஜ்லிஸ், நெஞ்சோடு நெஞ்சம் வானலைகள் வழியாக விழிப்புணர்வைத் தந்த அந்தக் குரலின் சொந்தக்காரர் திருமதி புர்கான்பீயின் வாழ்க்கைப் பாதையைத் திரும்பிப் பார்க்கின்றேன்.
உங்களின் பிறந்தகத்தைப் பற்றி தெரிந்துகொள்வோம்........
கொழும்பு மத்தியிலுள்ள மாளிகாவத்தை ஜும்மா பள்ளிக்கருகிலேயே என் பிறப்பிடம். தந்தை மொகமட் நியாஸ். தாயார் சித்தி சுஹைரா. மூன்று பெண்களும் ஐந்து ஆண்களுமாக கொண்ட என் குடும்பத்தில் நானே குடும்பத்தில் மூத்தவர்.
என் தந்தை இராணுவத்தில் சாரதியாகவிருந்தார். அந்த காலகட்டம் ஆங்கிலேயரின் ஆதிக்கம். இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த காலம். வீட்டில் தங்குவது அரிதாக இருந்தமையால் வீட்டாரின் வேண்டுகோளுக்கமைய இராணுவத் தொழிலிலிருந்து விலகி என் தந்தையின் தகப்பனார் செய்த மீன் மொத்த வியாபாரத் தொழிலை மேற்கொண்டு வரலானார்.
என்னுடைய ஆரம்பக் கல்வி தெமட்டகொடையிலுள்ள சென் அந்தனிஸ் பெண்கள் பாடசாலை. ஆங்கில மூலமான கல்வி. வீட்டிலிருந்து என்னை ரிக்ஷாவில்தான் அனுப்புவார்கள். அப்பொழுதெல்லாம் பெண் பிள்ளைகளை வெளியில் அனுப்புவதென்பது குறைவு. ஓரிரண்டு ஆண்டுக்குப் பிறகு சுயபாஷை கல்வி அறிமுகம் செய்யப்பட்டதனால் அப்பாடசாலையிலிருந்து என்னை விலக்கி வீட்டிற்கு அருகிலேயிருந்த ‘டென்ஹம்’ பாடசாலை (இன்று அது தாருஸ்லாம் என்று அழைக்கப்படுகிறது.) யில் சேர்த்தார்கள்.
நான் படிப்பில் முதல் மாணவியாக வகுப்பில் வந்துகொண்டிருந்தேன். பெற்றோரும் குறிப்பாக தாய் கண்டிப்பானவர். வகுப்பில் முதல் மாணவியாக வராவிட்டால் வீட்டுப்பக்கமே வர வேண்டாமென்று பயம்காட்டுவார். அதன் பிரதிபலன் இன்று எம்.ஏ.பரீட்சைக்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன்.
மூன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பிற்கும், பின் ஏழாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பிற்குமாக ‘டபுள் புரோமஷன்’ பெற்று வகுப்பேற்றப்பட்டேன். மி.வி.ரி. (o/l) வரை இங்கே படித்த பிறகு (தி/ழி) உயர்தர வகுப்பிற்கு தெமடகொடை அல் கைரியாவில் சேர்ந்தேன்.
என் பள்ளி வாழ்க்கையில் இலக்கியம் படிப்பித்த ஆசிரியர் முக்தார் ஏ.முகமது ஆசிரியரை மறக்கவே முடியாது. என்னை தமிழ் அறிவில் பட்டைதீட்டி எடுத்தவர் அவர்தான். பாடசாலையில் நடைபெறும் மாணவர் மன்றம், பேச்சுப்போட்டி, பாடல், நாடகம், இசையென்று அனைத்திலும் என் பங்களிப்பு முதலிடமாக இருக்கும்.
கைரியாவில் நான் உயர்தரம் படித்துக்கொண்டிருந்த போது, பாடசாலை கட்டட நிதிக்காக “யூசுப் சுலைகா” என்ற இசைசித்திர நாடகமொன்றில் நான் சுலைகாவாகவும், யூசுப்பாக பரிதாஹான் வஹாப் (சாகிராவின் உதவி அதிபராக இன்று கடமையாற்றுகிறார்) வும் நடித்தோம். அப்பொழுது அதிபராகவிருந்த திருமதி டெயின் தலைமையில் சாஜஹான் ஆப்தீன் ஆசிரியை நாடகத்தை தயாரிக்க சஹார்வான் சலாஹுதீன் ஆசிரியை இசைச் சித்திரத்திற்கேற்ப டப்ளா வாத்தியத்தை வாசித்ததோடு குரல் பின்னணியையும் கொடுத்தார். பலரின் பாராட்டைப்பெற்ற இந்நாடகம் பலமுறை மேடையேறியது.
தமிழிலக்கிய நாடகங்களான கண்ணகி, ஹரிச்சந்திர புராணம் மற்றும் திருக்குறள் மனனப் போட்டியென்று என் பங்களிப்புகள் வியாபித்திருந்தன. என்னுடைய பிற்கால பொதுநல சேவைக்கு உந்துகோலாகவிருந்தது பாடசாலையில் நான் இணைந்திருந்த பெண் சாரணீயம். ‘பிறருக்கு உதவ தயாராய் இரு’ என்ற சாரணீய தாரக மந்திரம் இளமையிலேயே என்னுள் பதிந்துவிட்டது.
க.பொ.த.உயர்தரம் கற்கும்போது சமஸ்கிருதத்தை ஒரு பாடமாக படித்ததினால் ஹிந்து சமயத்தை பற்றியும், தமிழில் ஆசிய ஜோதி நூல் பயிலும் போது பெளத்த தர்மத்தை தெளிவாக விளங்கிக் கொள்ள முடிந்தது.
பாடசாலைக் காலம் முடிந்ததும் நீங்கள் கால்பதித்த தொழிற்றுறை பற்றி......
நான் உயர்தர வகுப்பு படித்துக்கொண்டிருக்கையில் மாணவ ஆசிரியர் பரீட்சைக்கான நேர்முகப் பரீட்சைக்கு வருமாறு கடிதம் வந்தது. கொழும்பு கிரின்பாத் கல்வி அலுவலகத்தில் வைத்து 1970 ஆம் ஆண்டு நியமனம் வழங்கினார்கள். முதல் நியமனம் பெற்ற பாடசாலை கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை பாத்திமா கல்லூரி அங்கிருந்து ஆசிரிய பயிற்சிக்காக அளுத்கமை பயிற்சிக் கல்லூரிக்குச் சென்றிருந்தேன். பிரத்தியேகப் பாடமாக கர்நாடக சங்கீதம் பயின்றேன், வீணையும் கற்றேன். பரந்த அறிவுத்தேவை என்பதற்காக தேடிக்கற்றுக்கொண்டவை பல. பைபிள் சொசைட்டி மூலம் கிறிஸ்தவம் பற்றியும் தெரிந்துக்கொண்டேன். ஆசிரியப் பயிற்சிக்குப் பின் மாவனல்லை உயன்வத்தை நூராணியா கல்லூரி, கேகாலை தும்மலதெனிய தமிழ் வித்தியாலயம், கொழும்பு கொட்டாசேனை முஸ்லிம் வித்தியாலயம் ஆகியவற்றில் கடமையாற்றியுள்ளேன்.
ஆசிரியைத் தொழிலை நாடியிருந்த உங்களின் குரல் வானொலியில் எப்படி வானலையுடன் கலந்தது?
எதையுமே நான் நாடி சென்றதில்லை. ஆசிரியைத் தொழிலும் ஏதோ சந்தர்ப்பவசத்தால் எழுதிய மாணவ ஆசிரிய பரீட்சையிலும் தேர்வு கிடைத்தது. அதேபோன்று வானொலியிலும் சிறுபராயம் முதல் பங்களிக்கும் வாய்ப்பு கிட்டியது. பாடசாலை காலமும் வானொலி நிலைய நிகழ்ச்சிகளுக்கான பங்களிப்பும் சமகால அனுபவங்கள். வானொலி இஸ்லாமிய சேவையில் பாடசாலை மாணவர்கள் கலந்துகொள்ளக்கூடிய 15 நிமிட நேர நிகழ்ச்சியொன்று இடம்பெறும். எனது வகுப்பாசிரியர் தயாரித்த நிகழ்ச்சியொன்றில் பங்குபற்றிய மாணவர்களில் நானும் ஒருவராக பங்குபற்றியிருந்தேன். நேரடி ஒலிபரப்புதான் அந்தக் காலத்தில். ஒரே ஒரு வசனம் எனக்குத் தந்தார்கள். 1958 ஆம் ஆண்டு ஒரே ஒரு வசனம் பேசக்கிடைத்த சந்தர்ப்பம் ஐம்பது ஆண்டுகளையும் கடந்து இன்றும் வானொலியில் என் குரல் ஒலித்துக்கொண்டிருக்கிறது என்றால் எல்லாப் புகழும் இறைவனுக்கே!
அவ்வாறு கலந்துகொண்ட நாள் முதல் என் குரல் வளம் விரும்பிய அவர்கள் இஸ்லாமிய சேவையில் தேவைப்படும்போதெல்லாம் சிறுவர் சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைப்பார்கள். காலையில் பாடசாலை மாலையில் வானொலி நிலைய கலையகத்தில் இப்படியே வளர்ச்சியிருந்தது. தமிழிலும் சிங்களத்தில் உஃவதுல் இஸ்லாம் நிகழ்ச்சியிலும் ஏக காலத்தில் குரல் கொடுத்து வந்தேன். சிங்கள நிகழ்ச்சிக்கு என்னை அறிமுகப்படுத்தியவர் சகோதரர் அன்வர் இஸ்மாயில். திக்குவலை எம்.ஏ.மொகமட் மாஸ்டர் சிங்கள சேவைக்காக வழங்கிய நிகழ்ச்சிகளில் எனக்கு பெரும் வாய்ப்பை அளித்திருந்தார். பாலர் பிரிவில் பங்கு பற்றிய நிகழ்ச்சி முதல் பருவ வயதுவரை வானொலி நிகழ்ச்சிகளில் குறிப்பாக இஸ்லாமிய சேவையில் என் பங்களிப்பு காத்திரமாக இருந்தது.
நாடகம், இசைச்சித்திரம், மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்றி வந்த வேளை 1970களில் கிழமையில் ஐந்து நாள் நிகழ்ச்சியான நெஞ்சோடு நெஞ்சம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டேன். ஆர்வத்தோடு பெற்றுக்கொண்டேன். சுமார் நாலரை ஆண்டுகள் எவ்விதமான வேதனமும் இல்லாமல் நிகழ்ச்சிகளை தொகுத்து அளித்தேன். காலையில் ஆசிரியத் தொழில்விட்டு வந்ததும் வானொலி கலையகமுமாகத்தான் இருந்தேன்.
நான் தொகுத்து வழங்கிய நெஞ்சோடு நெஞ்சம், மாதர் மஜ்லிஸ் இலங்கையைக் கடந்து தமிழக நேயர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிகழ்ச்சிகள் மூலம் இஸ்லாமியப் பெண்களின் கல்வி, சுகாதார விழிப்புணர்வுகளை பெரிதும் கொண்டுவர முடிந்தது. கல்வியில் எனக்கு ஏற்படட அனுபவங்களைக் கூட பகிர்ந்துகொண்டுள்ளேன்.
மாதர் மஜ்லிஸில் வழங்கிய ‘ஆரோக்கிய சந்திப்பு’ நிகழ்வில் நேயர்களின் நோய் சம்பந்தமான குறைபாடுகளை கேட்டு அதற்கான வைத்தியர்களிடம் தொடர்கொண்டு நிவாரணம் பெற்றுக்கொடுத்து வந்தேன். இந்நிகழ்ச்சியில் ஒரு நேயர் தனக்குரிய நோயைக் கூறி இதற்கான நிவாரணத்தை ஒரு இஸ்லாமிய பெண் வைத்தியரிடமே பெற்றுக்கொள்ள விரும்புவதாகவும் கூறினார்.
இந்த நேயரின் மடலை வானொலியில் வாசித்த நான், இஸ்லாமிய பெண்கள் கல்வி கற்காமல் வீட்டுக்குள்ளேயே வைத்தால் எப்படி ஒரு இஸ்லாமிய பெண் வைத்தியர் கிடைப்பார். ஆகவே இஸ்லாமிய சமுதாயம் பெண் கல்விக்கு முட்டுக்கட்டை போடக்கூடாது என்ற செய்தியையும் கொடுத்தேன். ‘ஆரோக்கிய சந்திப்பு’ அது ஒரு சேவையாகவே ஆற்றி வந்தேன். நிகழ்ச்சி இல்லாத நேரங்களிலும் தொலைபேசியில் தொடர்பு கொண்டவர்களுக்கு வைத்திய நிபுணர்களின் அறிமுக சேவையை வழங்கினேன்.
சில வேளைகளில் நிகழ்ச்சியில் இடம்பெறும் விழிப்புணர்ச்சி கருத்துகளுக்கு வெளியிலிருந்து கடுமையான எதிர்ப்புகளும் வரும். விமர்சனங்களை ஆரோக்கியமாக எடுத்துக்கொள்ள வேண்டுமென ஊக்கமூட்டினர்.
நெஞ்சோடு நெஞ்சம் நேயர்களின் நெஞ்சைத் தொட்ட நிகழ்ச்சி. குடும்ப விவகாரம், வாழ்வாதார பிரச்சினை, வாழும் சூழல் குறைபாடு போன்றவைக்கு நேரடி அஞ்சல் மூலம் தீர்வுபெற்றுக்கொடுக்கப்பட்டது. இலங்கையின் மூலம் முடுக்குகள் என்று பாராது அங்கே நேரடியாகச் சென்று சம்பந்தப்பட்டவர்களைச் சந்தித்து அவர்களுடன் உரையாடி அதற்கான தீர்வை அவர்கள் மூலமே பெற்றுக்கொடுக்கும் வாய்ப்பை இந்நிகழ்ச்சியின் மூலம் ஏற்படுத்தி வந்தேன்.
பிரயாணங்களின் போது பெண்களுக்கான தொழுகைக்கு பிரத்தியேக வசதி செய்து கொடுத்தல், வசதியற்ற இடங்களில் தனி நபரின் வீட்டிலோ அல்லது பள்ளியிலோ வாசிகசாலை அமைத்து இளம் பராயத்தினரை வாசிக்கத் தூண்டுதல், இரத்த தானத்தின் அவசியம், சுயத்தொழில் கற்கை என அறிமுகம் செய்யப்பட்ட விடயங்கள் ஏராளம்.
நிகழ்ச்சிக்கு அப்பாலும் வானொலி வட்டம் மூலம் இதன் சேவை விஸ்தரிக்கப்பட்டிருந்தது பெருமை தந்த விடயம். தலிசிமியா நோயைப் பற்றிய விளக்கத்தால் பயன்பெற்ற நேயர்கள் அநேகம். மற்றும் 1983 இனக்கலவரத்தின் பின்னர் பாதுகாப்பு காரணங்கள் நிமித்தம் இலங்கை வானொலியில் தொழில் புரிந்த தமிழ் உத்தியோகத்தர்கள் வரவு குறைந்திருந்தது. அச்சமயம் ஹிந்தி நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பாக இருந்த திரு. ஜமால்டீன் தமிழ் ஒலிபரப்பினை பொறுப்பேற்றிருந்தார். அவர் என்னை அழைத்து உடனடியாக அறிவிப்பாளர் நியமனத்தை பெற்றுக்கொடுத்தார்.
‘பாராளுமன்றத்தில் இன்று’ நிகழ்ச்சியினை அப்போது தயாரித்து வந்த அன்ரனி ராசையா நான் ஆசிய சேவையில் பணி புரிந்து முடிக்கும் வேளையில் பாராளுமன்றத்தில் இருந்து இரவு 7.15 மணி போல வருவார். அவரது பிரதியை உடனடியாக வாசித்துக் கொடுப்பேன். அக்காலத்தில் “பாராளுமன்றத் தில் இன்று” நிகழ்ச்சி பிரபலமாக இருந்தது.
செய்தி வாசிப்பாளராக தெரிவு செய்யப்பட்ட நான் ஆசிய சேவையிலேயே செய்தி வாசிப்பில் ஈடுபடுத்தப்பட்டேன். இதனால் தென்னிந்திய நேயர்களை மத்திய கிழக்காசிய நேயர்களின் அபிமானத்தையும் பெற்றுள்ளேன்.
சுகததாச ஸ்டேடியத்தில் 20ஆவது வருடங்களுக்கு மேல் மேல்மாகாண விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து அறிவிப்பாளராக பணிபுரிந்துள்ளேன்.
ஏக காலத்தில் ஆசிரியையாக இருந்துகொண்டே வானொலி அறிவிப்பாளராக, தயாரிப்பாளராகவிருக்கும் உங்களுக்குக் கிடைத்த கெளரவங்கள் பற்றி அறிந்துகொள்வோம்.
இரண்டு முறை சுகாதாரக் கல்விப் பணியகம் சிறப்பான முறையில் ஆரோக்கிய சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தியமைக்காக விருது வழங்கி கெளரவித்தது. 1993இல் இஸ்லாமிய கலாசார அமைச்சு வழங்கிய நஜ்முல் உம்மா, 99ல் சாமஸ்ரீ வழங்கி. கலையரசி விருது, 2004 ஆம் ஆண்டு ஆரோக்கிய சந்திப்பு நிகழ்ச்சிக்கான சிறப்பு விருது. 2005 இல் ஸ்ரீலங்கா கலைஞர் முன்னணி வழங்கிய ஊடக நாயகி, 2009 இல் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு முதல்பெண்மணி சிராந்தி ராஜபக்ஷவினால் கெளரவ விருது மற்றும் 2008ல் இந்தியா தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் தென்பொதிகை தமிழ்ச்சங்கத்தின் விருது, சேலம் ஆத்தூரில் 1977 ல் சர்வதேச வானொலி நேயர் மன்றத்தின் விருது. 1995 திருநெல்வேலி தென்பொதிகை சங்கத்தின் விருதும் கிடைக்கப்பெற்றேன்.
1998 ஆம் ஆண்டு இலங்கை அரச வர்த்தமானியில், நான் தயாரித்து அளிக்கும் மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சி இலங்கை இந்திய நேயர்களின் அபிமானத்தைப் பெற்றிருக்கிறது என அதன் சிறப்பை பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் ஆற்றிய உரை பதிவாகியிருக்கிறது. அதனை ஓர் அங்கீகாரமாகக் கருதுகிறேன்.
இவ்வாண்டு 2012- சிரேஷ்ட ஊடகவியலாளர் விருதை ஜனாதிபதி வழங்கினார். மலேசியாவில் நடந்த இஸ்லாமிய ஆய்வரங்கில் அறிவிப்பாளராகவும், 15ஆவது இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில், முன்னேற்ற பாதையில் முஸ்லிம் பெண்கள் என்ற தொனிப்பொருளிலான ஆய்வரங்கில் பங்குபற்றியமை. 2002இல் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டிற்கு மகளிர் அரங்கிற்கு பொறுப்பாகவிருக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்த பெருமைகள் உண்டு.
தொலைக்காட்சி, எழுத்துத்துறை அனுபவங்கள் பற்றி கூற முடியுமா?
ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது மேல்மாகாண தமிழ் ஆசிரியர் கட்டுரைப் போட்டியில் முதலாம் இடம் கிடைத்தது. நாளேடுகளிலும் சஞ்சிகைகளிலும் வெளியான என்னுடைய சிறுகதை ஆக்கங்களைத் தொகுத்து ‘பிறந்த மண்’ என்ற நூலாக வெளியிட்டேன். தொலைக்காட்சியில் முஸ்லிம் நாடகம், பேட்டி, கலந்துரையாடல் என்ற பங்களிப்புகளும் நிறைய உண்டு.
திருமண வாழ்க்கைப்பற்றி.....
என்னிடைய கணவர் இப்திகார். வர்த்தகத்துறையைச் சார்ந்தவர். இரண்டு ஆணும் ஒரு பெண் பிள்ளையும். இரு ஆண் மக்களுக்கும் திருமணமாகிவிட்டது.
ஆசிரியைத் தொழில், வானொலி கலைஞர், எழுத்தாற்றல், நல்ல பேச்சாற்றல் நிறைந்த உங்களுடைய ஐந்து தசாப்தகால அனுபவ வாழ்க்கைப் பற்றி என்ன நினைக்கின்aர்கள்?
ஐம்பதாண்டு காலமாக என் குரல் வானலையில் சங்கமித்துக்கொண்டி ருக்கிறது. ஆனால் சங்கடமான கசப்பான விடயமொன்று என் நெஞ்சை உறுத்துகின்றது. அர்ப்பணிப்போடு செய்த வானொலி நிகழ்ச்சியை நம்பி என்னுடைய ஆசிரியைத் தொழிலை இராஜினாமா செய்தது. வாக்குறுதியும் காற்றில் பறந்துவிட்டது. கடைசியில் ஓய்வூதியமுள்ள நிரந்தர தொழில் போய் இன்னும் பகுதிநேர அறிவிப்பாளராகவே இருக்கின்றேன்.
ஓர் ஆத்ம திருப்தி மாதர் மஜ்லிஸ், நெஞ்சோடு நெஞ்சம் நிகழ்ச்சிகளில் மத நிகழ்வோடு சமகால அறிவையும் விழிப்புணர்வையும் அறிமுகப்படுத்தியது இன்று நல்ல அறுவடையைத் தந்து கொண்டிருக்கிறது.
வானொலித் தமிழுக்கு வசீகரம் வழங்கிய குரல்..
ReplyDeleteவாழ்த்துகள்! தொடரட்டும் உங்கள் சாதனை!
Assalamualikkum
ReplyDeleteMam we are proud of you. Allah bless you
mum think is it correcte to the way of grand allah, may allah forgive our sins
ReplyDelete