Header Ads



முஸ்லிம் சமூகமும், மு.கா. தலைவரின் தகரப் பேணியும்!



தம்பி

நண்பர் ஒருவரின் மனைவியினுடைய தங்க மாலையொன்று காணமல் போய்விட்டது. எப்படித் தேடியும் கிடைக்கவில்லை. சரி, போனால் போகட்டும் என்று விட்டு விடவும் நண்பருக்கு மனசு இல்லை. காரணம், அந்த மாலை, அவர் - திருமணப் பரிசாக மனைவிக்குக் கொடுத்தது. எனவே, தொலைந்து போன மாலையைக் கண்டு பிடித்தே ஆகுவது என்று அவர் கங்கனம் கட்டினார்!

நமது நண்பருக்கு - பேய், பிசாசு, குறிபார்த்தல், மந்திரம் மற்றும் சூனியம் போன்ற இத்தியாதிகளில் அதீத நம்பிக்கை இருந்தது. எனவே, தொலைந்து போன மாலையினை 'குறி பார்த்து' கண்டு பிடிப்பது என்று முடிவு செய்தார். அதன்படி – அவ்வாறானதொரு மந்திரவாதியை அவர் சந்தித்தித்தார்.

நெடு நேரத்துக்குப் பிறகு, தொலைந்து போன மாலை இருக்குமிடத்தை - தான் கண்டு பிடித்து விட்டதாக மந்திரவாதி கூறினார். மேலும், குறித்த மாலையை மந்திர சக்தியினால் தன்னுடைய இடத்துக்கே வரவழைத்துத் தருவதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால், இதற்கெல்லாம் கொஞ்சம் செலவாகும் என்று மந்திரவாதி இழுத்தார். நண்பருக்கு – செலவைப் பற்றிப் கவலையிருக்கவில்லை. எனவே, இன்று போய் நாளை வாருங்கள் என்றார் மந்திரவாதி!

அடுத்த நாள் மந்திரவாதியைச் சந்திக்கச் சென்றார் நண்பர். மந்திரவாதி ஒரு சிறிய தகரப் பேணியைக் காட்டி, அதற்குள் தொலைந்து போன மாலையை தனது சக்தியால் கொண்டு வந்து விட்டதாகக் கூறினார். ஆனால், 'பேணிக்குள் இருக்கும் பொருளை வெளியே எடுப்பதற்கு முன்னர் சில பூசை, புனஸ்காரங்களைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்யாது விட்டால், பேணிக்குள் இருக்கும் மாலை கரியாகிவிடும்' என்று சொன்னார் மந்திரவாதி. சரி பூசைகளைச் செய்யுங்கள் என்றார் நண்பர். அதற்குக் கொஞ்சம் செலவாகுமே என்றார் மந்திரவாதி. செலவினைக் கொடுத்தார் நண்பர். மீண்டும் 'நாளை வாருங்கள்' என்றார் மந்திரவாதி! 

மறுநாள் சென்ற நண்பரிடம், மந்திரவாதி திரும்பவும் பேணியை குலுக்கிக் காட்டினார். பூசைகள் செய்ய வேண்டும் என்றார். காசு வாங்கினார். மறுநாள் வருமாறு கூறினார். 

இப்படி – பேணியைக் குலுக்கிக் காட்டியே சுமார் 10 நாட்களைக் கடத்தினார் மந்திரவாதி. ஒரு கட்டத்தில் நண்பர் பொறுமையிழந்து போனார். மந்திரவாதியுடன் முரண்பட்டார், தர்க்கித்தார். பிரச்சினை கிட்டத்தட்ட அடிபிடியளவுக்குச் சென்று விட்டது. கடைசியில் மந்திரவாதியின் கையிலிருந்த தகரப் பேணியினைப் பறித்தெடுத்துப் பார்த்தால், அதற்குள் வெறும் செங்கல் துண்டுகள் சில கிடந்தன! 

கிழக்குத் தேர்தல் முடிந்த பிறகு மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமும் இப்படியொரு 'தகரப் பேணி'யினை வைத்துக் கொண்டு – பத்து நாட்கள் வரை குலுக்கிக் காட்டிக் கொண்டிருந்தார். அந்தப் பேணிக்குள்தான் முஸ்லிம் சமூகத்தின் உரிமை, விடுதலை, மீட்சி என்று அனைத்தும் இருப்பதாகச் சொன்னார். அவைகளை எவ்வாறு பெற்றெடுக்கலாம் என்பது குறித்து - தான் மந்திராலோசனைகள் நடத்துவதாகவும், பேரம் பேசலில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார். கடைசியில் பார்த்தால், அந்தப் பேணிக்குள் - மாகாணசபை அமைச்சுப் பதவிகள் என்கிற இரண்டு செங்கல் துண்டுகளைத் தவிர – வேறு ஒன்றுமே இருக்கவில்லை! 

கிழக்கு மாகாணசபையில் வெற்றிலைக் கட்சியுடன் இணைந்தே மு.காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்று ஏற்கனவே நமது கட்டுரைகளில் நாம் கூறியிருந்தோம். அப்படி நாம் கூறியதற்கு நிறைக் காரணங்கள் இருந்தன. 'கிழக்கில் எந்தக் கட்சியும் தனித்து ஆட்சியமைக்க முடியாததொரு நிலை உருவாகும். அவ்வாறானதொரு வேளையில் கூட்டாட்சியொன்றே சாத்தியமாகும். அப்போது வெற்றிலைக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கே மு.கா. முன்னுரிமை கொடுக்கும்' என்று தேர்தல் மேடைகளில் மு.கா. தலைவர் ஹக்கீமும் பல முறை தெரிவித்திருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே, எந்தக் கட்சிக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து மு.கா. ஆராய்ந்து வருவதாக அந்தக் கட்சியினர் சொல்லிச் சொல்லி, பத்துக்கும் மேற்பட்ட நாட்களைக் கடத்தியமையானது, வெறும் 'பேய்க்காட்டல்' ஆகும்!

இது ஒருபுறமிருக்க, கிழக்கில் ஆட்சியொன்றை அமைப்பது தொடர்பில், த.தே.கூட்டமைப்புடன் மு.காங்கிரஸ் இணைவதற்கான சாத்தியங்கள் இல்லை என்பதையும் கணிசமானோர் அனுமானித்திருந்தார்கள். த.தே.கூட்டமைப்புக்கும் இது நன்றாகவே தெரியும். தவிரவும், முஸ்லிம் மக்களில் அதிகமானோரிடையே தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியொன்றினை அமைப்பதற்கு ஆதரவான மனநிலையும் இல்லை என்பதுதான் உண்மையாகும். காரணம், புலிகளால் முஸ்லிம்கள் வஞ்சிக்கப்பட்ட போதெல்லாம், த.தே.கூட்டமைப்பின் இதே தலைமைகள் புலிகளின் செயலைச் சரியென்று வாதிட்டார்கள். அல்லது, அவற்றினை எதிர்த்துப் பேசாமல் மௌனமாக இருந்தார்கள் என்கிற கோபம் முஸ்லிம்களிடம் இன்னும் இருக்கிறது. 

மட்டுமன்றி, ஒரு கூட்டாட்சியை அமைக்கும் அளவுக்கு கிழக்கில், தமிழ் - முஸ்லிம் அரசியல் உறவு அத்துணை ஆரோக்கியமானதாகவும் இல்லை. கிழக்கு மாகாணசபைத் தேர்தலை முன்னிறுத்தியே த.தே.கூட்டமைப்பினர் முஸ்லிம் சமூகத்துடன் நெருக்கமானதொரு அரசியல் உறவு கொள்ள முயற்சித்தார்கள். கிழக்கில் அரசுக்கு எதிரானதொரு ஆட்சியொன்றை அமைக்க வேண்டும் என்கிற தமது தேவையினை நிறைவு செய்து கொள்வதற்காகவே, த.தே.கூட்டமைப்பினர் இந்தத் தேர்தலில் முஸ்லிம்களின் அரசியலில் அளவுக்கதிகமாக மூக்கு நுழைக்கத் தொடங்கினார்கள் என்பதெல்லாம் - மறைக்க முடியாத உண்மையாகும். 

எவ்வாறிருந்தபோதும், தமிழ் - முஸ்லிம் அரசியல் உறவு என்பது மீள் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது. இந்த இரண்டு சமூகங்களும் அரசியல் ரீதியாகக் கைகோர்க்கும் போதுதான் சிங்களப் பேரினவாதத்தினை துணிச்சலோடு முகம் கொள்ள முடியும். இரண்டு சமூகங்களுக்குமான உரிமைகளை ஓரளவாவது வென்றெடுப்பதும் சாத்தியமாகும்.

ஆனால், நாம் அவாவி நிற்கின்ற தமிழ் - முஸ்லிம் அரசியல் உறவினை ஓரிரு இரவுகளுக்குள்ளோ அல்லது ஒரு தேர்தலை முன்வைத்தோ கட்டமைத்து விட முடியாது. அதற்கு கணிசமானதொரு காலம் தேவைப்படும். மனம் திறந்த பேச்சுக்கள் இடம்பெறுதல் வேண்டும். விட்டுக் கொடுப்புகள் நிகழ வேண்டும். ஆனால், துரதிஷ்டவசமாக தமிழ் - முஸ்லிம் சமூகங்களின் அரசியல் தலைமைகள் இதற்கான ஆரம்பப் புள்ளிகளைக் கூட, கடந்த காலங்களில் போட்டு வைக்கவில்லை என்பது கசப்பான உண்மையாகும்!

இவற்றையெல்லாம் த.தே.கூட்டமைப்பினரும் அறிவார்கள். ஆனாலும், கிழக்கில் தம்முடன் இணைந்து ஆட்சியமைக்க வருமாறு மு.காங்கிரசை கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் திரும்பத் திரும்ப அழைத்துக் கொண்டேயிருந்தார். ஆனால், அந்த அழைப்புக்குப் பின்னால் ஓர் அரசியல் தந்திரம் ஒளிந்திருந்தமையை அரசியல் தெரிந்தோர் மட்டும் புரிந்து கொள்ள முடியும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸானது வெற்றிலைக் கட்சியோடு இணைந்து ஆட்சியமைப்பதென முடிவெடுப்பதிலும் தவறுகள் இல்லை. அரசியல் என்பது சாத்தியமானவற்றின் கலை என்பார்கள். வெற்றிலைக் கட்சியுடன் இணைவதுதன் மூலம்தான் முஸ்லிம் சமூகத்துக்கான தேவைகளில் அதிகமானவற்றைப் பெற்றுக் கொள்ளலாம் என்றிருந்தால் - அந்தக் கட்சியுடன் இணைவதுதான் சாணக்கியமான முடிவாகும்.  

ஆனால், கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைக்கும் பொருட்டு, வெற்றிலைக் கட்சியுடன் மு.காங்கிரஸ் இணைந்து கொண்ட போதும், முஸ்லிம் சமூகத்தின் தேவைகள் எதுவும் நிறைவு செய்யப்படவேயில்லை என்பதுதான் இங்கு வெஞ்சினத்துக்குரிய விடயமாகும். 

ஆனாலும், அரசாங்கத்துக்கும் - மு.கா.வுக்கும் இடையில் இடம்பெற்ற பேரம் பேசுதலின் போது, முஸ்லிம்களின் நலன்கள் மற்றும் தேவைகள் குறித்துப் பேசப்பட்டதாகவும், அவற்றில் சில விடயங்களுக்கு சாதகமானதொரு முடிவினை அரச தரப்பு வழங்கியுள்ளதாகவும் மு.கா. தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், பேசப்பட்ட விடயங்கள் என்ன என்று மு.கா. இதுவரை வெளிப்படுத்தவில்லை. அதுதவிர, முஸ்லிம் சமூகம் தொடர்பில் மு.கா. பேசியதாகக் கூறப்படும் விடயங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கைகளாக மட்டும் முன்வைக்கப்பட்டனவா அல்லது எழுத்து மூலம் ஒப்பந்தம் செய்யப்பட்டனவா என்றும் தெரியவில்லை. ஜனாதிபதி ராஜபக்ஷ அநேகமாக கட்சிகளுடன் எழுத்து மூல ஒப்பந்தங்களைச் செய்து கொள்வதில் நாட்டமில்லாதவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது!

எனவே, யார் ஏற்றுக் கொண்டாலும், கொள்ளாது விட்டாலும் - கிழக்கு மாகாணம் தொடர்பில் மு.காங்கிரஸ் எடுத்த முடிவானது முஸ்லிம் சமூகம் சார்ந்த அரசியலை முன்னிறுத்தவில்லை என்பதே உண்மையாகும். அதாவது, மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பது இதன் மறு பொருளாகும்.

சரி, மு.கா.வின் முடிவில் முஸ்லிம் சமூகம் சார்ந்த விடயங்கள்தான் முன்னிறுத்தப்படாமல் போயிற்று. கட்சி நலனாவது முதன்மைப் படுத்தப்பட்டுள்ளதா என்றால் அதுவும் இல்லை. கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சராக மு.காங்கிரசைச் சேர்ந்த ஒருவரே வரவேண்டும் என்பது மு.காங்கிரஸ் ஆதரவாளர்களின் ஒட்டுமொத்த விருப்பமாகும். ஆனால், அந்த விருப்பமும் மு.கா. தலைவரால் பலி கொடுக்கப்பட்டுள்ளது. 

'மு.காங்கிரசைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வந்தால், ரஊப் ஹக்கீமுடைய தலைமைத்துவத்துக்கு அது – அச்சுறுத்தலாக அமைந்து விடும். எனவே, ஹக்கீம் அதை ஒருபோதும் விரும்பமாட்டார். அதனால், மு.காங்கிரஸ் கட்சியை சாராத ஒருவரே கிழக்கின் முதலமைச்சராக வருவார்' என்று தேர்தல் மேடைகளில் எதிர்க்கட்சியினர் ஏற்கனவே கூறிவந்தனர். இவ் விடயத்தினை நமது கட்டுரைகளிலும் பதிவு செய்திருந்தோம். ஆச்சரியமாக, அதுவே நடந்தேறியிருக்கிறது. மு.காங்கிரஸ் தலைவரின் பூரண சம்மதத்துடன் கிழக்கு முதலமைச்சராக நஜீப் ஏ மஜீத் பதவியேற்றிருக்கின்றார். 

அதாவது, கிழக்கின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சரைப் பெற்றுக் கொள்வதற்கு முஸ்லிம் காங்கிரசுக்கு இருந்த வாய்ப்பினை மு.கா. தலைவர் ஹக்கீம் கைகழுவி விட்டுள்ளார். மு.காங்கிரஸ் - கிழக்கு மாகாணத்தின் ஆட்சியினைத் தீர்மானிக்கும் சக்தியாக இருந்து கொண்டே, தனக்குக் கிடைக்க வேண்டிய முதலமைச்சர் பதவியினை தாரை வார்த்திருக்கிறது. 

இதேவேளை, கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவியானது சுழற்சி முறை அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளதாக மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்து வருகின்றார். அதாவது, மாகாணசபையின் அரைவாசிக் காலம் நஜீப் ஏ. மஜீத் முதலமைச்சராக இருப்பார். அடுத்த அரைவாசிக் காலத்துக்குக்கான முதலமைச்சர் பதவியானது மு.காங்கிரசைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்படும் என்பது ஹக்கீமுடைய கூற்றாகும். ஆனால், இந்தச் சுழற்சிமுறைச் சமாச்சாரம் பற்றியெல்லாம் தனக்கு எதுவும் தெரியாது என்கிறார் முதலமைச்சர் நஜீப்! 

கிழக்கு மாகாண முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நஜீப் ஏ. மஜீத் - ஜனாதிபதியின் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர். அவர் அரசியலுக்குள் பிரவேசித்ததே சுதந்திரக் கட்சியூடாகத்தான். இடையில் இரண்டு தடவை மு.காங்கிரசில் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினரானார். ஆனாலும், அவர் மு.கா.வுக்கு விசுவாசமாக இருக்கவில்லை. தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை எடுத்துக் கொண்டு – ஆளும் தரப்போடு இணைந்து  கொண்டார். 

அந்தவகையில், கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள நஜீப் ஏ. மஜீத் ஜனாதிபதிக்கும், ஆளுநருக்கும் மட்டுமே விசுவாசமானவராக இருப்பார். ஜனாதிபதியின் விருப்பத்துக்கு மாறாக நஜீப் - ஒரு துரும்பைக் கூடத் தூக்கிப் போட மாட்டார். இன்னும் சொன்னால், ஜனாதிபதியின் சங்கீதத்துக்கு நடனமாடும் ஒரு பொம்மையாகவே முதலமைச்சர் நஜீப் இருக்கப் போகிறார். ஆனால், கிழக்கு மாகாணத்தில் ஒரு பொம்மை ஆட்சி அமைவதற்கு மு.கா. இடமளிக்கப் போவதில்லை என்று மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் தேர்தல் பிரசார மேடைகளில் அடிக்கடி கூறி வந்தமை இங்கு நினைவு கொள்ளத்தக்கது.

'இப்படி, சமூகத்துக்கு எதுவுமில்லாமல் அரச கட்சிக்கு ஆதரவு கொடுத்ததை விடவும்,  எதிர்த்தரப்பில் போய் மு.கா. அமர்ந்திருக்கலாம்' என்கின்றார் மு.காங்கிரசின் உயர்பீட உறுப்பினரொருவர். 'அப்போது என்ன நடக்கும்? அதிக ஆசனத்தைப் பெற்றுக் கொண்ட வெற்றிலைத் தரப்பு பெரும்பான்மையின்றி ஆட்சியமைத்திருப்பார்கள். அது நமக்குப் பிரச்சினையில்லை. ஆட்சியாளர்கள் மேற்கொள்ளும் நல்லவற்றினை ஆதரித்தும், பிழைகளை எதிர்த்தும் தனது தீர்மானிக்கும் பாத்திரத்தினை மு.காங்கிரஸ் - எதிரணியில் இருந்து கொண்டு நிறைவேற்ற முடிந்திருக்கும்' என்று தனது கருத்தை விபரித்தார் மேற்சொன்ன உயர் மட்ட உறுப்பினர்.

மு.கா. தலைவரின் இந்தத் தீர்மானம் குறித்து - கட்சியின் கிழக்கு மாகாண ஆதரவாளர்களிடையே கடுமையான அதிருப்தி நிலவுகிறது. தொண்டர்கள் கொதித்துப் போயுள்ளனர். ஆனால், தேர்தல்களின் பிறகு மு.கா. தலைவரைக் கொஞ்சக் காலத்துக்கு காண முடியாது என்பதால், குறித்த கால இடைவெளியில் மக்களின் கோபம் ஆறிப் போகும்! 

பிறகு தலைவர் வருவார் - மேடையேறுவார் - அப்போது, 'ஆயிரம் விளக்குடன் ஆதவன் எழுந்து வந்தான்...' என்கிற கட்சிக் பாடல் மிகச் சத்தமாக ஒலிக்க விடப்படும். அப்போது எழுந்து நின்றுவாறே ஆதரவாளர்களைப் பார்த்து கரகோசிப்பார்!

ஆதரவாளர்களும் - எல்லாவற்றையும் மறந்து தலைவரின் கரகோசத்துக்கு பக்கபலம் சேர்ப்பார்கள்.  ஆம், அவர்களும் கரகோசிக்கத் தொடங்குவார்கள். அந்தக் கரகோசத்துக்குள் இந்தக் கட்டுரையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கோபம், கவலை, வெப்புசாரங்கள் அனைத்தும் அமுங்கிப் போய்விடும். 

துரதிஷ்டவசமாக, எல்லாத் திசைகளிலும் நமது அரசியல் இப்படித்தான் இருக்கின்றது!!
·


3 comments:

  1. தம்பி சொன்ன உதாரணததுடனான நகைச்சுவை, வாசிக்கும போதே சிரிக்கக் கூடியதாக இருந்தது. நன்றி......

    நன்றாக நகைச்சுவையாக பேசக் கூடியவர். ஆனால் அவரது கட்டுரையில் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் சேர்ந்ததால் எது சாதிக்க வில்லை எனத் தெரிவித்திருந்தார். அது முற்றிலும் தவறானது.
    கடந்த முறை (2008) அம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அரச தரப்பில் போட்டியிட்ட அதாவுல்லா, மற்றும் றிசாட் தரப்பினருக்கு தேர்தலின் முன்னர் வாக்குறுதியளிக்கப்பட்டது. எந்த உறுப்பினர் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொள்கிறோறோ அவருக்கே, முதலமைச்சர் என்று சொல்லப்பட்டு. அது தான் தேர்தல் பிரச்சாரமாகவும் இருந்தது. ஆனால் நடந்நது என்ன? கூடுதலான விருப்பு வாக்குகள் ஹிஸ்புள்ளா வெற்றிருந்தார். ஆனால் அவருக்கு அது வழங்கப்பட்டதா? அது தொடர்பாக தட்டிக் கேட்கவும் முடிந்தா? இல்லை இல்லை,

    அது மட்டுமல்லாமல் கடந்த மாகாண சபைத் தேர்தலில் கிட்டத்தட்ட 20 முஸ்லிம் உறுப்பினர்கள் இருந்தார்கள்.

    அவ்வாறு இருந்தும். இன்றை நிலையில் எந்தக் கட்சியைச் சேர்ந்தவன் என்று எமக்குத் தேவையில்லை. ஒரு முஸ்லிம் முதலமைச்சர் கிடைத்தது எதனால், இந்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சியால் மாத்திரம் தான் இந்த பெரிய விடயத்தை மறைத்து வாசகர்களை மடையர்ளாக்க கட்டுரை எழுதுவது எந்த வகையில் நியாயம் என நான் கேட்கிறேன்.

    இந்தத் தேர்தலின் கடைசிப் பிரச்சாரம் முடியும் வரையும் முன்னல் முதலமைச்சர் பிள்ளையான் தான் முதலமைச்சர் என சொல்லிக் கொண்டே இருந்தான். அது தொடர்பான ஆதாரமாக பேச்சியினை இங்கே பார்க்கவும்.
    http://www.youtube.com/watch?v=SXce8q682-o&feature=player_embedded&noredirect=1


    அது மட்டுமல்ல ஜனாதிபதியும் அவருக்கு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் இருந்தார் என்பதற்கும் போதுமான ஆதாரங்கள் உள்ளது.

    மற்றும் அவர் BBC க்கு பேட்டி வழங்கும் போது அதிலிம் கூட முஸ்லிம்காங்கிரஸோடு கூட்டுச் சேர்ந்தால் எனது முதலமைச்சர் கனவு தகர்ந்து போனதாக அவர் தெரியப்படுத்தியுள்ளார்.

    இவ்வாறான சந்தர்ப்பத்தில் முழுப் புசனிக்காயை மறைத்த விடயமாக இந்த உண்மையை தெளிவாக இருக்கும் போது சும்மா எழுதத் தெரியும் என்பதற்காக மக்களை குழப்பக் கூடாது.

    அடுத்த ஒரு விடயம். நடுநிலை வகிப்பது. இந்த விடயத்தை தற்போது மகிந்த மன்னின் ஆட்சியில் எடுப்பதைப் போல பாரிய தவறு ஒன்றுமில்லை.

    அப்பம் சுட்டு அதில் மண்ணை அல்லிப் போடுவதற்கு சமனாகும். எனெனில் ஓர் இரு மாதாத்தில் ஜனாதிபதி அவர்கள் எல்லா உறுப்பினர்களையும் விலைக்கு வாங்கி நடுநிலமை வகிக்க யாரும் இருக்க மாட்டார்கள். கடைசியில் வெறும் கதிரைகள் மட்டுமே மிஞ்சி இருக்கும். இந்த முடியாவனது. ஒரு யதாத்தம் தெரியாத அரசியல் வாதியின் சிறுபிள்ளைத் தனமான விடயமாகும்.

    ReplyDelete
  2. சகோதரரே! இந்தக் கட்டுரை முற்றிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியது. காரணம் அரசு எப்படித்தான் இருந்தாலும். முஸ்லிம்களின் கட்சி என்ற அடிப்படையில் முஸ்லிம்களின் கோரிக்கைகளை வெளிப்படையாக முன்வைக்கும் தார்மீகப் பொறுப்பு முஸ்லிம் காங்கிரஸுக்கு உண்டு, இதைத்தான் மக்களும் எதிர்பார்த்தார்கள். ஆனால் நடந்தது என்ன....?
    அபு மர்வான்
    அக்கரைப்பற்று

    ReplyDelete
  3. Hello Fun cell,
    Even Sampanthan was also crying in each and every meeting that TNA will capture the eastern PC. Was it happend?
    Better to say that SLMC supporters like " Ilavi kaaththa Kili".

    ReplyDelete

Powered by Blogger.