வடக்கில் இந்திய வீடமைப்பு திட்டம் - முஸ்லிம்களுக்கு ஏமாற்றம்
இந்திய அரசின் வீட்டுத் திட்டத்தில் வடமாகாணத்துக்கு 41 ஆயிரம் வீடுகளே ஒதுக்கப்பட்டுள்ளன. அத்துடன் புள்ளியிடல் அடிப்படையிலேயே பயனாளிகள் தெரிவு செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்திய வீட்டுத் திட்டப் பணிகள் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு வெள்ளிக்கிழமை மாலை யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
வடமாகாணத்தில் முன்னோடி வீட்டுத் திட்டத்தில் ஏற்கனவே ஆயிரம் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டத்தில் புதிய வீடுகள் 35 ஆயிரமும், வீடு திருத்தத்துக்கு 5 ஆயிரம் வீடுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில் யாழ். மாவட்டத்துக்கு 8 ஆயிரத்து 700 வீடுகளும், கிளிநொச்சி மாவட்டத்துக்கு 7ஆயிரத்து 100 வீடுகளும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கு 7 ஆயிரத்து 500 வீடுகளும், வவுனியா மாவட்டத்துக்கு 4 ஆயிரத்து 200 வீடுகளும், மன்னார் மாவட்டத்துக்கு 7 ஆயிரத்து500 வீடுகளும் என 35 ஆயிரம் வீடுகள் புதிதாகஅமைக்க ஒதுக்கப்பட்டுள்ளன.
வீட்டுத் திருத்தத்துக்கு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா 1000 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வீட்டுத் திட்டத்துக்கு தெரிவு செய்யப்படுவதற்கு பயனாளி இலங்கைப் பிரஜையாக இருக்க வேண்டும். பயனாளிகளுக்கு நிரந்தர வீடு இருந்தாலோ அல்லது குடும்ப அங்கத்தவருக்கு இலங்கையில் எப்பாகத்திலேனும் நிரந்தர வீடு இருந்தாலோ அவர்கள் தகுதியற்றவர்களாகக் கருதப்படும்.
அரை நிரந்தர வீடு வழங்கப்பட்டவர்கள் தகுதிகாண் அடிப்படையில் இந்த வீட்டுத்திட்டத்துக்கு தெரிவு செய்யப்படும் போது, ஏற்கனவே தகுதியுடைய குடும்பத்தவர்களுக்கு அடுத்ததாகவே அவர்கள் கருதப்படுவர். பயனாளி நேரடியாகவோ அல்லது தங்கி வாழ்கின்ற குடும்ப அங்கத்தவராகவோ, ஏதாவது நிரந்தர வீடமைப்புத் திட்டம் பெற்றவராக இருத்தல் ஆகாது.
நிரந்தரமாகச் சொந்தக் கிராமத்தில் மீள் குடியமர்ந்தவராக இருத்தல் வேண்டும். காணிக்குரிய உரிமை ஆவணம் இருத்தல் வேண்டும். மேற்படி நிபந்தனைக்கு அமைவாகவே தெரிவு செய்யப்படும் பயனாளிகளுக்கு அரச உத்தியோகத்தர்களும் நிறைவேற்று முகவரும் இணைந்து புள்ளியிடல் மேற்கொள்ள வேண்டும்.
புள்ளியிடல் குடும்பத் தலைமைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அதில் ஆண் தனித்துத் தலைமை தாங்கும் குடும்பத்துக்கு 10 புள்ளிகளும், முதியோர் அல்லது விதவை தலைமை தாங்கும் குடும்பத்துக்கு 20 புள்ளிகளும், குழந்தை, ஊனமுற்றோர் அல்லது தனித்து பெண் தலைமை தாங்கும் குடும்பத்துக்கு 30 புள்ளிகளும் வழங்கப்பட்டு அதன்பின்னர் அந்தப் புள்ளி 0.25 ஆல் பெருக்கப்படும்.
குடும்பத் தலைவர் மற்றும் நிரந்தர வருமானம் பெறுவோர் தவிர குடும்பத்தில் தங்கி வாழ்வோர் ஒருவர் இருந்தால் 10 புள்ளி, இரண்டு அல்லது மூன்று பேர் தங்கி வாழ்ந்தால் 20 புள்ளி, மூன்று பிள்ளைகளுக்கு மேற்பட்டவர்கள் தங்கி வாழ்ந்தால் 30 புள்ளிகளும் வழங்கப்பட்டு பெறப்படும் புள்ளியானது 0.2 ஆல் பெருக்கப்படும்.
உடல், உள ரீதியாக அங்கவீனமுற்றோர் குடும்பத் தலைவர் உட்பட ஒருவர் இருந்தால் 20 புள்ளிகள், இரண்டு பிள்ளைகளுக்கு மேற்பட்டவர்கள் இருந்தால் 30 புள்ளிகளும் வழங்கப்பட்டு பெறப்படும் புள்ளி 0.2ஆல் பெருக்கப்படும்.
குழந்தைகளின் வயது 1218 இருந்தால் 20 புள்ளியும், 12 வயதுக்குக் குறைந்த குழந்தைகள் இருந்தால் 30 புள்ளியும் வழங்கப்பட்டு பெறப்படும் புள்ளி 0.18ஆல் பெருக்கப்படும்.
2008 ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் இடம்பெயர்ந்திருப்பின் 10 புள்ளிகளும், அதற்குப் பின்னர் இடம்பெயர்ந்திருப்பின் 20 புள்ளிகளும் வழங்கப்பட்டு பெறப்படும் புள்ளி 0.12ஆல் பெருக்கப்படும்.
2008 ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் இடம்பெயர்ந்திருப்பின் 10 புள்ளிகளும், அதற்குப் பின்னர் இடம்பெயர்ந்திருப்பின் 20 புள்ளிகளும் வழங்கப்பட்டு பெறப்படும் புள்ளி 0.12ஆல் பெருக்கப்படும்.
தற்காலிகமாக இடம்பெயர்ந்து மீளக் குடியமரும் போது வழங்கப்பட்ட 20 ஆயிரம் அல்லது 25000 பெறப்பட்டு அரை நிரந்தர, தற்காலிக வீடுகளில் வாழ்ந்தால் 10 புள்ளிகளும், குடிசை மற்றும் கூடாரத்தில் வாழ்ந்தால் 20 புள்ளிகளும் வழங்கப்பட்டு பெறப்படும் புள்ளி 0.05ஆல் பெருக்கப்படும்.
இதன் அடிப்படையில் மொத்தப் புள்ளி 10 அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் மாத்திரமே இந்திய வீட்டுத் திட்டத்துக்கு தகுதியுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
மேற்குறிப்பிட்ட விதிமுறைகளின் அடிப்படையில் வடமாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு இந்திய வீடமைப்பு திட்டம் கிடைக்காமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து காணப்படுவதாகவும், இதுவிடயத்தில் உரியவர்கள் தலையிட்டு நியாயம் பெற்றுத்தர வேண்டுமெனவும் வடக்கு முஸ்லிம்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Post a Comment