சலுகைகளை அனுபவித்தபடியே விரிவுரையாளர்கள் போரட்டத்தில் குதித்துள்ளனர் - எஸ்.பி.
எம்.ஜே.எம். தாஜுதீன்
இலங்கையின் மொத்த தேசிய வருமானத்தில் 4.5 சதவீதம் கல்விக்காக ஒதுக்கப்படுவதாகவும் இது உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகளான அமெரிக்கா - அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா -பாகிஸ்தான் ஆகிய நாடுகள் கல்விக்காக ஒதுக்கும் நிதியை விடவும் அதிகாமனது எனவும் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு தகவல் ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு விளக்கம் அளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,
வேலை நிறுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இப்போது பாத யாத்திரை மேற்கொண்டுள்ளனர்.
இவர்களின் தொழிற்சங்க நடவடிக்கையினை அரசாங்கம் உன்னிப்பாக அவதானிக்கின்றது. அதன் பின்னணயில் அரசாங்க விரோதச் சக்திகள் செயற்படுவதை நாம் அறிவோம். 5000 பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இருந்த போதும் பாத யாத்திரையில் 147 விரிவுரையாளர்கள் மட்டுமே கலந்துகொள்கின்றனர்.
அரச ஊழியர்களில் உயர் நீதிமன்ற நீதிபதிகள்தான் அதிக சம்பளம் பெறுகின்றனர். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கேட்கும் சம்பள அதிகரிப்பு வழங்கினால் நீதிபதிகளை விட விரிவுரையாளர்களே அதிக சம்பளம் பெறுவர்.
1990 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையில் அரசாங்கம் கல்விக்காக ஒதுக்கிய நிதி வருடாந்தம் அதிகரித்தே செல்கின்றது. ஆனால் 2003 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் ஐ.தே.க. அரசு அதனைக் குறைத்தது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு அரசாங்கம் அதிக சலுகைகளை வழங்கியுள்ளது. அவர்களுக்கான மாதாந்த சம்பளம் 63 ஆயிரம் ரூபா தொடக்கம் 1 லட்சத்து 73 ஆயிரம் ரூபா வரை வழங்கப்படுகின்றது. ஒரு வருடத்தில் 3 மாதம் சம்பளத்துடன் விடுமுறை வழங்கப்படுகின்றது.
வெளிநாடு செல்வதற்காக விசேட விடுமுறையும் தமது மனைவி அல்லது கணவருக்காக பல்கலைக்கழகத்தினால் விமான டிக்கட்டுகளும் வழங்கப்படுகின்றன.
இது தவிர வருடாந்தம் 42 நாள் விடுமுறை கிடைக்கின்றது. மேலும் தமது பணி தவிர்ந்த ஏனைய நேரங்களில் நடத்தும் விரிவுரைகளுக்கு ஒரு மணி நேரத்துக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்களைச் சம்பாதிக்கும் சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் அவர்களது பிள்ளைகள் உயர் கல்லூரிகளில் படிக்கும் வசதிகளை அரசாங்கம் செய்து கொடுக்கின்றது. இவ்வாறான சலுகைகளை எல்லாம் அனுபவித்துக்கொண்டுதான் அவர்கள் நியாயமற்ற தொழிற்சங்கப் போரட்டத்தில் குதித்துள்ளனர். எனினும் 90 சதவீத பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இப்போராட்டத்தை விரும்பவில்லை.
இவர்களது கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் பொருதளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் பங்களிப்புடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். இன்றும்கூட ஜனாதிபதி இது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார். இவர்களது பாத யாத்திரை முடிந்த பின்னர் மீண்டு;ம் பேச்சுவார்த்தை நடத்தி கல்விப் பிரச்சினைக்குத் தீர்வு காணத் தயாராக இருக்கிறோம் என்றும் அமைச்சர் கூறினார்.
Post a Comment