ரஷ்ய மனித உரிமை ஆணைக்குழு தூதுவருடன் அமைச்சர் ஹக்கீம் சந்திப்பு (படங்கள்)
முஸ்லிம் காங்கிரஸ் ஊடகப் பிரிவு
ரஷ்யாவின் மனித உரிமை ஆணைக்குழுவின் தூதுவர் கொன்ஸ்ரன்ரின் டொன்கோவ் தமது தூதுக்குழுவினருடன் நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை அண்மையில் பாராளுமன்றத்தில் அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இக் கலந்துரையாடலின் போது சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பான சட்ட ரீதியான அணுகுமுறை, உள்ளக இடம்பெயர்ந்தோர் குறிப்பாக வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு மீண்டும் தமது முன்னைய வாழ்விடங்களில் மீள்குடியேறும் முஸ்லிம்களின் பிரச்சினைகள் என்பன பற்றி விரிவாக ஆராயப்பட்டது.
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மேற்கத்தேய நாடுகளின் ஒத்துழைப்புடன் அமெரிக்கா ஜெனீவாவில் முன்மொழிந்த பிரேரணைக்கு எதிரான நிலைப்பாட்டை கடைப்பிடித்த ரஷ்யாவுக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார். அத்துடன் அந்த விடயத்தில் சீனாவின் இலங்கைக்குச் சார்பான நிலைப்பாட்டையும் அவர் பாராட்டினார்.
ரஷ்யாவில் முஸ்லிம்கள் இஸ்லாத்தை பின்பற்றுவதில் காட்டும் ஆர்வம் அதிகரித்துள்ளதாக மனித உரிமைகளுக்கான ரஷ்யத் தூதுவர் கூறிய போது, அங்குள்ள பிரதம முப்தி உட்பட சமயத் தலைவர்களை சந்திப்பதில் தாம் அதிக நாட்டம் கொண்டிருப்பதாக அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார். அதற்கான தமது விருப்பத்தை இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் ஊடாக தாம் ஏற்கனவே தெரியப்படுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.
இக் கலந்துரையாடலில் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹஸன் அலி எம்.பி, எம்.எஸ்.எம். அஸ்லம் எம்.பி அகியோரும் இணைந்து கொண்டனர்.
ஹக்கிம் அவர்களே,
ReplyDeleteரஷ்ய அரசாங்கத்தால் செச்னிய முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதி பற்றி ஏதாவது கேட்டீர்களா? அல்லது ராஜபக்சாவிடம் போகும் போது குழைந்து பொவது பொலத்தான் இதுவுமா?