Header Ads



ஹஜ் செய்வதில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு அநீதி - இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம்

 
புனித ஹஜ் யாத்திரைக் காலத்தை விசேட விடுமுறையாக்க, தாபனக் கோவையில் திருத்தம் கொண்டு வரப்படல் வேண்டுமென இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
 
புனித ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கென இலங்கைக்கு வெளியே சம்பளமற்ற விடுமுறையில் செல்ல அனுமதி பெற்றுக் கொள்வதில் கடந்த வருடத்தைப் போன்று இம்முறையும் கிழக்கு மாகாண அதிபர், ஆசிரியர்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருவதாகவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் சார்பில் அதன் தலைவர் எம். அனஸ் ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இந்த ஊடக அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,
 
"புனித ஹஜ் யாத்திரைக் காலத்தை விசேட விடுமுறையாக்க தாபனக் கோவையில் திருத்தம் கொண்டு வரல் வேண்டும் என இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுக்கின்றது. இதற்கான பிரேரணையை முன் வைத்து, அதனை நிறைவேற்றி, அமுல்படுத்த முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். தற்போது நடைபெற்று வரும் தேர்தல் பிரசாரங்களில் இனம், மதம் பற்றிப் பேசும் முஸ்லிம் அரசியல் தலைவர்களின் கவனத்துக்கும் இதனைச் சமர்ப்பிக்கின்றோம்.
 
போதிய பண வசதியும், தேகாரோக்கியமும் உள்ள போது முஸ்லிம்கள் நிறைவேற்ற வேண்டிய கட்டாயக் கடமைகளுள் ஒன்றான புனித ஹஜ்ஜுக்காக மக்கா நோக்கிப் பயணிக்கும் யாத்திரிகர்கள், அங்கு சுமார் 40 நாட்கள் வரை தங்க வேண்டி ஏற்படும். இந்த ஹஜ்ஜை நிறைவேற்ற இலங்கைக்கு வெளியே சம்பளமற்ற விடுமுறையில் செல்ல அனுமதி பெற்றுக் கொள்வதில் கடந்த வருடத்தைப் போன்று இம்முறையும் கிழக்கு மாகாண அதிபர், ஆசிரியர்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றார்கள்.
 
சவூதி அரசின் கட்டுப்பாட்டால், ஆண்டு தோறும் விசா பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கும் ஹஜ் யாத்திரிகர்கள், கடந்த வருடம் முதல் கிழக்கு மாகாண ஆளுநரின் கட்டுப்பாட்டால் கிடைக்கும் விசாவில் பயணிக்க, சம்பளமற்ற விடுமுறை பெற்றுக் கொள்வதில் அதை விட அதிக சிரமங்களை அனுபவிக்க வேண்டியுள்ளது.
 
போதிய பண வசதி உள்ள போது மேற்கொள்ளும் புனித ஹஜ் யாத்திரைக்கான வெளிநாட்டுப் பயணத்துக்கு, சம்பளமற்ற விடுமுறை பெற, குறித்த ஆண்டுக்கு முன்னைய ஆண்டுகளில் போதிய சேமித்த பிணி விடுமுறை இல்லை என்ற காரணத்துக்காக இவர்களது பயண அனுமதி, கடந்த ஆண்டைப் போன்று இம்முறையும் எவ்வித மனிதாபிமானமுமற்ற முறையில் மறுக்கப்பட்டு வருகின்றது.
 
போதிய பண வசதி வரும் போது போதிய பிணி விடுமுறை சேமிப்பில் இருப்பதென்பது சாத்தியமற்ற விடயமாகும். இதனால், உரிய காலத்திற்கான அனுமதியின்றி ஹஜ் கடமையா? தொழிலா? என்ற திண்டாட்டத்துக்கு மத்தியில் கடந்த வருடம் ஹஜ்ஜுக்குச் சென்று வந்த முஸ்லிம் அதிபர், ஆசிரியர்கள் தாம் பணி நீக்கம் செய்யப்பட்டு விடுவோமா? என்ற அச்சத்தில் இன்றும் உள்ளனர்.
 
நாட்டில் எந்த ஒரு மாகாணத்திலும் இல்லாத, தாபனக் கோவையை மீறிய கிழக்கு மாகாண ஆளுநரின் இந்தப் பொருத்தமற்ற நடைமுறைகளைத் தளர்த்தக் கோரி, ஜனாதிபதிக்கும் முஸ்லிம் கட்சித் தலைவர்களுக்கும் தமது சங்கம் 2011.09.12இல் விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி, கல்வி அமைச்சின் செயலாளருக்கு பொருத்தமான நடவடிக்கைக்குப் பணிப்புரை விடுத்திருந்தும் இற்றைவரை எந்த நடவடிக்கையும், யாராலும் எடுக்கப்படவில்லை.
 
குறித்த நடவடிக்கை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக நகர அலுவல்களுக்கான சிரேஷ்ட அமைச்சர் எம்.எச்.எம். பௌசி அறிவித்திருந்தார். கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிசாட் பதியுதீன், கோரிக்கைக்குப் பொருத்தமான நடவடிக்கை எடுக்கக் கோரி சங்கத்தின் கடிதப் பிரதியுடன் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு 2012.01.06ஆம் திகதி அனுப்பிய கடிதத்துக்கு "கல்வி அமைச்சின் செயலாளரிடம் தகவல் கோரப்பட்டுள்ளது. தகவல் கிடைத்ததும் இறுதி முடிவு எடுக்கப்படும்'' என 2012.06.13ஆம் திகதிய கடிதம் மூலம் தாபனப் பணிப்பாளர் நாயகம் அமைச்சருக்கு பதில் அளித்துள்ளார்.
 
கல்வி அமைச்சானது எந்தவொரு விடயத்துக்கும் துரிதமாக தீர்வு காணும் நிலை இல்லாமையினால், இவ்விடயத்துக்கும் தீர்வு கிட்டும் என்ற நம்பிக்கை சங்கத்திற்கு இல்லை. அது மாத்திரமன்றி விடுமுறை தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டிய பொது நிர்வாக அமைச்சே, அதனைக் கல்வி அமைச்சுக்கு அனுப்பியிருப்பதானது காலம் தாழ்த்தி, தட்டிக் கழிப்பதற்கேயன்றி வேறில்லை என்றே சங்கம் எண்ணுகின்றது.
 
இதேவேளை, இது தொடர்பில் கிழக்கு மாகாண அமைச்சரவை வாரியம் எடுத்த தீர்மானம் கூட கிடப்பிலேயே உள்ளது. அந்த வாரியம் வைத்தியத் தேவைகளுக்காகவும் சமயக் கடமைகளுக்காகவும் வெளிநாட்டு விடுமுறை பெற இவ்வருடம் முதல், மூன்று மாதங்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம் இல்லை என்றும், சேமித்த பிணி விடுமுறை அவசியம் இல்லை என்றும் தீர்மானித்திருந்தது. இதனை கிழக்கு மாகாண அமைச்சு அதிகாரிகள் அமுல்படுத்தாமையினால் முன்னைய நிலைமையே இன்று தொடர்கின்றது.
 
ஆதலால், தாபனக்கோவையின்  அத்தியாயம் 23:1, 23:2 ஆம் பிரிவுக்குத் திருத்தம் கொண்டு வந்து, ""முஸ்லிம் அதிபர், ஆசிரியர்கள் ஆயுளில் தனக்காக ஒரு முறையில், மரணித்த தாய், தந்தையருக்காக ஒரு முறையும் செய்யும் புனித ஹஜ் பயணத்திற்கான யாத்திரைக்காலம் முழுவதும் விசேட விடுமுறையாக்கப்படல் வேண்டும்'' என்ற சங்கத்தின் கோரிக்கைக்கு முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அவசரமாக முன்வர வேண்டும் என்பதே எமது இன்றைய கோரிக்கையாகும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

1 comment:

  1. If Muslim Ministers are not capable enough to make amendments to the Establishment Code in this regard, what is the use of them? If they can not win atleast a privilege, how can they win rights for Muslims?

    ReplyDelete

Powered by Blogger.