Header Ads



இலங்கையில் முஸ்லீம்களுக்கென தனித்துவமான அரசியற் தளம் இல்லையாம்..!


சிறிலங்காத் தீவில் முஸ்லீம்களுக்கென தனித்துவமான அரசியற் தளம் ஒன்று இல்லாமையே இதற்கான காரணம் என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். குறிப்பாக முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு மாகாணத்திலேனும் முஸ்லீம்களுக்கான தனித்துவமான அரசியற் சக்தி ஒன்று இல்லாததை இத் தேர்தல் பெறுபேறு வெளிப்படுத்துகிறது. 

இவ்வாறு இடதுசாரிச் சிந்தனையாளரும் அரசியல் ஆய்வாளருமான குமார் டேவிட் 'லக்பிம' ஊடகத்தில் எழுதிவரும் அரசியல் பத்தியில் குறிப்பிட்டுள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 

மனிதன் தனது வரலாற்றை தானாகவே உருவாக்கிக் கொள்கிறான் எனக் கூறப்படுகிறது. ஆனால் இதனை அவன் தனது சொந்தத் தெரிவின் கீழ் உள்ள சந்தர்ப்பங்களைக் கொண்டு உருவாக்கவில்லை. ஆனால் இந்த வரலாற்றை உருவாக்கிக் கொள்வதற்கான நிபந்தனை கடந்த காலத்தில் வழங்கப்பட்ட, மரபு வழியாய் அனுபவிக்கப்பட்ட உரிமையின் அடிப்படியில் ஏற்படுத்தப்பட்டதாகும். 

தற்போது கிழக்கு மாகாணத்திற்கான மாகாணசபைத் தேர்தலில் ஒருவரையொருவர் முட்டித்தள்ளி, போட்டியிட்ட அரசியற் கட்சிகளும், தலைவர்களும் அதில் தமது செல்வாக்கு, அதிகாரம், பதவி போன்றவற்றை நிலைநிறுத்துவதில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு தம்மை நிலைநிறுத்துவதன் மூலம் இவ் அரசியற் தலைவர்களும் கட்சிகளும் எதிர்கால வரலாற்றில் முத்திரை குத்திக் கொள்ளவேண்டும் என நினைக்கிறார்கள். 

சிறிலங்காத் தீவின் அடுத்த கட்ட அரசியல் கூட்டணியை வரையறுக்கும் சமூக முறைமைகள், சமூக வகுப்புக்கள் மற்றும் அதிகார சக்திகளின் நட்பு நிலை போன்றவற்றை தாம் உருவாக்கி வருவதை இந்த அரசியற் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் அறிந்திருக்கவில்லை என்பதே உண்மையாகும். அடுத்த கட்டம் என்பது அடுத்து நடைபெறும் நாடாளுமன்ற மற்றும் அதிபர் தேர்தல்களை மனதிற் கொண்டே நான் இங்கு குறிப்பிட்டுள்ளேன். 

அண்மையில் நடந்து முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில், சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரவூப் ஹக்கீமின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனும் மிகக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டனர். 

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஒரு ஆசனத்தைக் கூட பெறாத இறந்துபோன இடதுசாரிக் கட்சியின் DEW குணசேகராவின் செயற்பாடானது அனைத்துக் கட்சி மாகாண அரசாங்கத்தை உருவாக்குவதற்கான முன்மொழிவாக காணப்படுகிறது. இது மாகாண சபை அமைப்பதில் மிகச் சாதாரணமான பங்களிப்பை வழங்குவதாக பார்க்கப்படலாம். ஆனால் சிறிலங்காவின் அடுத்த கட்ட தேசிய அரசியலில் செல்வாக்குச் செலுத்துகின்ற காரணியாக இது மாறும். 

நாம் முதலில் சில புள்ளிவிபரங்களை இங்கு ஆராயவேண்டும். கிழக்கு மாகாணத்தின் மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதம் முஸ்லீம்களும், 35 சதவீதம் தமிழர்களும் 25 சதவீதம் சிங்களவர்களுமாவர். 

இங்கு அண்மையில் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலின் பெறுபேற்றை நோக்கில், மாகாண சபைக்கான 37 ஆசனங்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 12 ஆசனங்களும் [வெகுமதி ஆசனங்கள் - 02], தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 ஆசனங்களும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 07 ஆசனங்களையும் வெற்றி கொண்டுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி நான்கு ஆசனங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது. விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி ஒரு ஆசனத்தையும் பெற்றது. 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தெரிவுசெய்யப்பட்ட 12 மாகாண சபை உறுப்பினர்களில் ஏழு பேர் முஸ்லீம் இனத்தைச் சேர்ந்தவர்கள். இதேபோன்று ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி கொண்டவர்களில் ஒருவர் முஸ்லீமாவார். இதனுடன் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் பெற்றுக் கொண்ட ஏழு ஆசனங்களையும் சேர்த்தால் நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மொத்தம் 15 முஸ்லீம்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் இவர்கள் மூன்று வெவ்வேறு அரசியற் கட்சிகள் சார்பாகப் போட்டியிட்டனர். இவர்கள் ஒன்றிணைந்து ஒரு கட்சியின் கீழ் போட்டியிட்டிருந்தால் பெரும்பான்மை வெற்றியைப் பெற்றிருப்பார்கள். 

சிறிலங்காத் தீவில் முஸ்லீம்களுக்கென தனித்துவமான அரசியற் தளம் ஒன்று இல்லாமையே இதற்கான காரணம் என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். குறிப்பாக முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு மாகாணத்திலேனும் முஸ்லீம்களுக்கான தனித்துவமான அரசியற் சக்தி ஒன்று இல்லாததை இத் தேர்தல் பெறுபேறு வெளிப்படுத்துகிறது. 

ஹக்கீமைப் பொறுத்தளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே தனது ஆதரவை வழங்கவேண்டும். கூட்டமைப்புக்கு முஸ்லீம் காங்கிரஸ் தனது ஆதரவை வழங்கி கிழக்கு மாகாணசபைக்கான ஆட்சியை அமைத்திருந்தால் முதல் இரண்டு ஆண்டுகளும் முஸ்லீம் காங்கிரசைச் சேர்ந்த ஒருவர் மாகாண முதல்வராகவும் அடுத்த இரு ஆண்டுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒருவர் முதல்வராகவும் பதவியேற்றிருக்கலாம். இதன் மூலம் முஸ்லீம் கட்சியானது முதன் முதலாக முதல்வர் பதவியைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கும். இதன் மூலம் முஸ்லீம் தலைவர்கள் ஒன்று கூடி பாதிக்கப்பட்ட தமது சமூகத்தை முன்னேற்றுவதற்கான திட்டமொன்றை வரைந்து அதனை அமுல்படுத்துவதற்கான சிறந்த சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கும். 

முஸ்லீம் காங்கிரஸ் கட்சி சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து மாகாண சபைக்கான ஆட்சியை அமைத்ததன் மூலம், தொடர்ந்தும் ஹக்கீம் தனது சட்டசபை அமைச்சுப் பதவியைத் தக்கவைக்க முடிவதுடன், பணம், வெகுமதி, சட்ட ரீதியான மற்றும் சட்ட ரீதியற்ற வகையில் சலுகைகளைப் பெற்றுக் கொள்ளும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பாதுகாக்க முடியும். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தட்டிக்கழித்து, ராஜபக்சவிற்கு தலைவணங்குவதன் மூலம், தனது சமூகத்தின் அடையாளங்களைத் தக்கவைப்பதற்கான சந்தர்ப்பத்தை ஹக்கீம் உதறித் தள்ளுகின்றார் என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய உண்மையாகும். 

அனைத்துக் கட்சி மாகாண சபை ஒன்றை அமைப்பதென்பது நடைமுறையில் பகற்கனவாக காணப்படுகிறது. எந்தக் கட்சி எவ்வளவு காலம் ஆட்சியிலிருக்கும் என வரையறுப்பது நடைமுறைச் சாத்தியமற்றதாகும். ஆனைத்துக் கட்சி மாகாண சபை உருவாக்கப்பட வேண்டுமாயின் இதில் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்ற முதல் மூன்று கட்சிகளும் தலா ஒன்றொடு மூன்றிலொரு ஆண்டுகள் முதல்வர் பதவியை வகிக்க வேண்டும். இதன் மூலம் முஸ்லீம்கள் ஓரங்கட்டப்படுவர். இது முஸ்லீம் மக்களுக்கு துரோகம் இழைக்கும் செயலாகக் காணப்படும். 

கிழக்கு மாகாண சபையை ஆளும் அதிகாரம் முஸ்லீம் - தமிழ் சக்திகளின் கைகளின் மாறிவிடக்கூடாது என்பதில் மகிந்த ராஜபக்ச உறுதியாக உள்ளார். ராஜபக்ச அரசாங்கம் மாகாண சபைகளின் அதிகாரத்தை தான் வைத்திருக்க வேண்டும் என நினைக்கிறது. இதனாலேயே வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கு அரசாங்கம் தனது எதிர்ப்பைக் காட்டிவருகிறது. 

ஹக்கீம் தனது அமைச்சரவைப் பதவியை தக்கவைத்திருப்பதுடன், தனக்குக் கீழ் பணியாற்றுபவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க வேண்டும் என்பதிலும் குறிக்கோளாக உள்ளார். இவரது கட்சியைச் சார்ந்த நேர்மையற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஊழல் மோசடிகளில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் ஹக்கீம், சிறிலங்கா அதிபரை எரிச்சலடைய வைப்பதன் மூலம் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவது தடைசெய்யப்படலாம். 

ஹக்கீம் தனிப்பட்ட சில சலுகைகளை கருத்திலெடுக்காது, முஸ்லீம் சமூகத்தவர்களின் எதிர்கால சுபீட்சத்தை மட்டும் கருத்திலெடுத்து செயற்பட்டால் இவர் முஸ்லீம் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக முடியும். ஹக்கீம் நல்ல மனிதர். இவர் கடுமையான மனிதனர் அல்லர். இவர் ஹக்கீம். லெனின் அல்ல. தனிப்பட்டவர்கள் ஒருபக்கமிருக்க, ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகத்தின் எதிர்காலம் என்பது அதிகார சக்திகளின் கைகளில் சிக்குண்டுள்ளது என்பதே உண்மையாகும். 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கில் ஆட்சியமைத்தால் ஹக்கீமின் கட்சி பின்தள்ளப்பட்டுவிடும். தற்போது கூட்டமைப்பு தமிழ் மக்களின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு செயற்படுகிறது. ஆனால் எதிர்காலத்தில் சம்பந்தன் ராஜபக்சவுடன் மத்தியில் இணைய அழைக்கப்படுவாரா? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டு அதிகாரப் பகிர்வு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டால் இதன் மூலம் அனைத்துலக சமூகத்தையும் மகிழ்விக்கலாம். இதில் எது ராஜபக்சவுக்கான வெகுமதியாக இருக்கும்? 

கிழக்கில் தமிழ்-முஸ்லீம் சக்திகள் ஆட்சி புரிவதற்கு தடைவிதிக்கப்பட்டால் ஆளும் முன்னணியின் சார்பாக கிழக்கு மாகாண சபையில் போட்டியிட்டு வென்ற ஏழு முஸ்லீம்களும் கட்சி தாவினால் சிறிலங்காவின் அரசியல் எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்களவு மாற்றம் ஏற்படும். இது நடக்குமா? எனக்குத் தெரியாது. ஆனால் உங்களுக்குத் தெரியும். காலம் கடக்கும் போது இதனை நீங்கள் அறிவீர்கள். 

வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றால், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தோல்வியுறும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் வடக்கு மாகாண சபை உருவாக்கப்படும். இதன் மூலம் சிறிலங்காவின் தேசியக் கொள்கையில் பல்வேறு மாற்றம் ஏற்படும்.

No comments

Powered by Blogger.