540 கோடி மக்களுக்கு நபியவர்களை அழகாக அறிமுகப்படுத்தகூடிய அரிய சந்தர்ப்பம்..!
உதவி - TM
தொகுப்பு: எம்.எல்.எம். அஸ்ஹர் (இஸ்லாஹி)
கடந்த செப்டெம்பர் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு – 07 ஜாவத்தை ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற நிகாஹ் (திருமண பதிவு) நிகழ்வின் போது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பிரதி தலைவரும் பேருவளை ஜாமீயா நளீமியா கலாபீடத்தின் பிரதி பணிப்பாளருமான அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத் (நளீமி) ஆற்றிய நிகாஹ் பயானின் சுருக்கத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
தூய்மையும் ஒழுக்கமும் நிறைந்த, உலகமே போற்றுகின்ற ஒரு மாமனிதரை இன்றைய நாகரிகமான உலகில் முதலாம் உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று தம்மை பறைசாற்றிக் கொள்பவர்கள்.அநாகரிகமாக சித்திரித்துக் காட்டியிருக்கிறார்கள்.
மனித உரிமைகளை மீறாதவர்கள், பண்பாடனவர்கள், ஜனநாயகத்தை மதிப்பவர்கள், எழுத்துச் சுதந்திரத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் என்றும் எப்போதும் கட்டிக்காப்பவர்கள், பிறரைப் புண்படுத்தாதவர்கள், பயங்கரவாதத்தை அழிக்க வந்தவர்கள், தீவிரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வந்தவர்கள் என தம்மைச் சொல்லிக் கொள்பவர்கள் தான் 160 கோடி மக்களின் இதயங்களில் வாழ்கின்ற புனிதமான இறை தூதரை திரைப்படம் என்ற பெயரில் மிகக் கேவலமாக சித்தரித்து உலக அமைதிக்கு உலைவைத்துள்ளார்கள்.
நமது நாட்டின் ஒரு குக்கிராமத்தில் வாழும் எழுத்தறிவில்லாத ஒரு மனிதன் கூட இவ்வளவு மட்டரகமாக நடப்பானா? நடந்தாலும் நமது நாடோ மூன்றாம் உலக நாடுகளோ கிழக்குலகமோ அதனை அனுமதிக்குமா? நிச்சயமாக அனுமதிக்காது!
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை இலக்கு வைத்து கேவலப்படுத்துகின்ற முயற்சியை இவர்கள் நீண்டகாலமாகவே கனகச்சிதமாகச் செய்து வருகிறார்கள். இத்தொடரான வேலைகளைப் பார்க்கும்போது முஸ்லிம்களை சீண்டிவிடுவதற்கான விளையாட்டாக இவற்றை எடுத்து விட்டார்களோ என நினைக்கத் தோன்றுகிறது.
சுமார் 13 நிமிட முன்னோட்டக் காட்சிகளைக் கண்டு முழு முஸ்லிம் சமூகம் கொதித்தெழுந்திருக்கும் இச்சந்தர்ப்பத்தில், எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல பிரான்ஸ் நாட்டில் நபியவர்களை கேவலப்படுத்தி சில கேலிச் சித்திரங்களை ஒரு பத்திரிகை வெளியிட்டிருக்கிறது.
"அதிர்ச்சியில் இருப்பவர்களுக்கு மேலும் அதிர்ச்சி அளிக்க உள்ளோம்" என அப்பத்திரிகையின் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். உண்மையில் முஸ்லிம் சமூகத்தைப் பார்த்து எள்ளி நகையாடுகின்ற ஒரு நிலையை இவர்கள் உருவாக்க முயற்சிக்கின்றார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை உயிரிலும் மேலாக மதிக்கின்ற நாங்கள் இச்சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு செய்ய வேண்டிய மிகப் பெரிய சேவை எதுவாக இருக்க முடியும்?
இன்று உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் இந்த விவகாரத்தை அலச ஆரம்பித்திருக்கிறார்கள். யார் இந்த முஹம்மத்? இவருடைய குணங்கள் என்ன? இவரின் தனிப்பட்ட, அந்தரங்க, குடும்ப வாழ்க்கை எவ்வாறு இருந்தது? 160 கோடிக்கு மேற்பட்ட மக்கள் இந்த மனிதருக்காக ஏன் இவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறார்கள்? என்றெல்லாம் கேள்வி எழுப்பும் இச்சந்தர்ப்பத்தை சிறந்த வாய்ப்பாக கருதி உலகில் வாழும் எஞ்சிய 540 கோடி மக்களுக்கும் நபியவர்களை அழகாக அறிமுகப்படுத்த கூடிய அரிய சந்தர்ப்பம் நமக்குக் கிடைத்துள்ளது.
அவர்கள் குறுந்திரைப்படம் தயாரித்து நபியவர்களை கேவலப்படுத்துகிறார்களா? நாம் ஒன்றல்ல, நபியவர்கள் குறித்து சிறந்த பல படங்களை தயாரித்து வழங்க வேண்டும். சில மாதங்களுக்கு முன்னர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைப் பற்றி அற்புதமான படமொன்றைத் தயாரிக்கும் பெரு முயற்சி ஷெய்க் யூஸுப் அல் கர்ளாவியின் வழிகாட்டலுடன், இஸ்லாமிய வரையறைகளை பேணி முடுக்கி விடப்பட்டிருக்கின்ற செய்தியைக் கேள்வியுற்று நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.
நிச்சயமாக அந்த படம் வெளிவருகின்ற போது நபியவர்கள் குறித்து மனித சமுதாயம் சிறந்த தெளிவைப் பெற்றுக் கொள்ளும் என நாம் நம்பலாம். சில வருடங்களுக்கு முன் நபியவர்களைக் கேவலப்படுத்தி கார்ட்டூன் வரைந்து வெளியிட்டார்கள் பின்னர் 'பித்னா' என்ற பெயரிலே குறுந்திரைப்படம் ஒன்றை வெளியிட்டார்கள்.
இப்போது மற்றுமொரு திரைபடத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டிருக்கிறார்கள். இதே நேரத்தில் அமெரிக்காவில் வாழும் சோமாலியா நாட்டை சேர்ந்த ஒரு பெண் எழுத்தாளர் முஸ்லிம்களின் சீற்றத்தை தூண்டும் நோக்கோடு கட்டுரை ஒன்றை எழுதி வெளியிட்டிருக்கிறார். முதலாவதாக, நாம் இதன் பின்னணியிலுள்ள யதார்த்தத்தை மிகச் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு எதிராக எமது நடவடிக்கை எவ்வாறு அமைய வேண்டும் என்பது மிகச் சரியாகத் தீர்மானிக்கப்பட வேண்டும்.
எமது உணர்வுகள், கோபம், அதிருப்தியை வெளிப்படுத்தும் அதேவேளை, அவை இஸ்லாமிய வரையறைகளை மீறிவிடாது பார்த்துக் கொள்ளல் வேண்டும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கற்றுத் தந்த பண்பாடுகளை எந்நிலையிலும் மீறி விடக்கூடாது. இஸ்லாம் கூறுகின்ற ஆன்மிக, தார்மீக ஒழுக்கப் பண்பாடுகளை மீறியதாக எமது செயல்கள் அமைந்து விடுகின்றபோது அது எதிரிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும். அவர்களின் எதிர்பார்ப்பும் கைகூடி விடும்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எல்லோர் மத்தியிலும் எடுத்துச் சொல்லக்கூடிய அரியதொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆரம்பத்தில் வந்த 'பித்னா' என்ற படத்தைத் தொடர்ந்து சில மேற்குலக நாடுகளில் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு பிரதிகள் வேகமாக விற்பனையாகின. எல்லோரும் இஸ்லாத்தை பற்றி தேடிக் கற்க ஆரம்பித்தார்கள். நபியவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆராய ஆரம்பித்தார்கள். எனவே, இது நபிகளார் குறித்தும் அன்னாரின் வாழ்வு குறித்தும் நாமும் அறிந்து முழு மனித சமூகத்துக்கும் எடுத்துச் சொல்வதற்கான சிறந்த சந்தர்ப்பமாகும்.
காந்திஜி, சரோஜினி நாயுடு, தத்துவ மேதை பேர்னாட் ஷோ ஆகியோரை உள்ளிடக்கி 'த ஹன்ரட்' என்ற நூலை எழுதிய மைக்கல் எச் ஹார்ட் போன்ற நூற்றுக்கணக்கான முஸ்லிமல்லாத அறிஞர்கள் கூட நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் ஒழுக்கத்திற்கும் பண்பாட்டுக்கும் சான்று பகர்ந்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை காமுகராகவும் பெண் பித்தராகவும் இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்த இவர்கள் படாதபாடுபடுகிறார்கள். நபியவர்களின் காலத்தில் கூட இந்தளவிற்கு விமர்சிக்கப்படவில்லை. சூனியக்காரன், பைத்தியக்காரன், புரளியைக் கிளப்புகிறான் என்று கூறினார்களே தவிர, நபியவர்களின் ஒழுக்க விவகாரத்தில் கை வைக்கவில்லை. அவர்களது இளமைப் பருவம், வாலிபப் பருவம் குறித்து எவ்வித குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவும் இல்லை.
"நீங்கள் மிக உயர்ந்த பண்பாடுள்ளவராக இருக்கிறீர்" என நபிகளாரைப் பார்த்து குர்ஆன் குறிப்பிட்ட போது இஸ்லாத்தின் எதிரிகள் கூட மௌனம் சாதித்தார்கள். சபா குன்றின் மீது ஏறி, "இந்த மலைக்குப் பின்னால் இந்த மக்கமா நகரை தாக்குவதற்கு ஒரு படை வருகிறது என நான் கூறினால் நீங்கள் நம்புவீர்களா?" எனக் கேட்டபோது அனைவரும் ஒத்த குரலில், "நிச்சயமாக நாம் நம்புவோம். ஏனெனில், எந்தக் கட்டத்திலும் நீங்கள் உண்மைக்குப் புறம்பாக பேசியதை நாம் கண்டதில்லை. நீங்கள் அல் அமீன் - நம்பிக்கைக்குரியவர், அஸ் ஸாதிக் - உண்மை பேசுபவர்" என்று சாட்சி சொன்னார்கள்.
அதற்குப் பின்னர் "நான் அல்லாஹ்வின் தூதராக வந்திருக்கிறேன், நம்புவீர்களா?" எனக் கேட்டபோது தான் அதனை பலரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இன்று உலகத்திலிருக்கின்ற ஒரு தலைவராவது மனித சமூகத்திற்கு முன்னால் துணிச்சலோடு எழுந்து நின்று, "நான் எப்போதாவது பொய் சொல்லியிருக்கிறேனா?" என கேட்க முடியுமா?
ஒழுக்க சீர்கேட்டின் உறைவிடங்களாக இருப்பவர்கள் தான் நபியவர்களின் ஒழுக்கத்தை பற்றி விமர்சிக்கிறார்கள். ஓரினத் திருமணத்தையும் விபசாரத்தையும் ஆகுமாக்குபவர்கள் 1,400 வருடங்களுக்கு முன்னால் மிகச் சிறந்த ஒழுக்கசீலராக வாழ்ந்த நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை ஒழுக்கம் கெட்டவர் எனக் கூறுவது எவ்வளவு வினோதமாக உள்ளது.
அந்தப் 13 நிமிடத் திரைப்படத்தில் நடித்திருப்பவர்களுள் பலர் ஆபாசத் திரைப்பட நடிகர்கள். இவர்களுக்கு ஏன் ஒழுக்க வாழ்க்கை தேவைப்பட்டது? இஸ்லாம் உலகில் வேகமாகப் பரவி ஒரு சக்தியாக வளர்ந்து வருவதைத் தடுக்க வேண்டும் என்ற பகையுணர்வும் காழ்ப்புணர்ச்சியுமே இதன் பின்னணியில் தொழிற்படுகின்றன.
வரலாறு நெடுகிலும் கீழைத்தேயவாதிகள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைப் பற்றி அசிங்கமாகப் பேசியிருக்கிறார்கள் .ஆனால் இந்தளவு கேவலமாக, ஆதாரமற்ற விதத்தில் நபிகளார் மீது சேறு பூசப்படவில்லை. ஆர்ப்பாட்டம், ஊர்வலம், பேரணிகள், கண்டனங்கள் போன்றவற்றுக்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டு. ஆனால் இவற்றினூடாக இஸ்லாத்தின் தூதையும் தூதரையும் அழகிய விதத்தில் அறிமுகப்படுத்த வேண்டும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பெயரை வைத்து அரசியல் நடத்தக் கூடாது.
நபி மீதுள்ள எமது அன்பையும் பாசத்தையும் யதார்த்தபூர்வமாக நிரூபிப்பதாக இருந்தால் நபிகளார் பற்றிய நூல்களை வெளியிடுவது, கட்டுரைகளை எழுதுவது, மாநாடுகளை நடத்துவது, ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளை நடத்துவது, நாம் தொழில் புரிகின்ற காரியாலயங்களில் நபிகளாரின் வாழ்க்கையை பற்றி அழகாக அறிமுகப்படுத்துவது போன்ற காத்திரமான பணிகளில் நாம் ஈடுபட வேண்டும். அந்தக் கடப்பாடு எமக்கு இருக்கிறது.
"உங்களில் சிறந்தவர் தன்னுடைய மனைவி மக்களுக்கு, குடும்பத்தாருக்கு சிறந்தவர். உங்கள் அனைவரிலும் நான் குடும்பத்திற்கு சிறந்தவராக இருக்கின்றேன்" என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
நபியவர்களின் இந்த வாக்கை உண்மைப்படுத்த வேண்டுமெனில் அவர்களின் வாழ்வைக் கற்க வேண்டும். அவர்கள் ஏன் கதீஜா நாயகியைத் திருமணம் முடித்தார்கள்? ஹப்ஸா, மைமூனா, உம்மு ஹபீபா, ஜுவைரியா போன்றவர்கள் எந்தப் பின்புலத்தில் திருமணம் முடிக்கப்பட்டார்கள்? இஸ்லாம் கூறும் பலதார திருமணத்தின் தாற்பரியம் என்ன? என்பவற்றையெல்லாம் ஒரு முஸ்லிம் தெரிந்திருக்க வேண்டும். உணர்ச்சிபூர்வமான கோஷங்களை எழுப்புவதற்கு அப்பால் அறிவுபூர்வமாக ஒரு முஸ்லிம் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்
அச்சு ஊடகம், இலத்திரனியல் ஊடகம், பேஸ்புக், டுவிட்டர் முதலான சமூக வலைத்தளங்கள் அனைத்தையும் பயன்படுத்தி பிறருக்கு தெளிவை வழங்க வேண்டிய தார்மீகக் கடப்பாடு ஊடகவியலாளர்கள், ஊடக அமைப்புக்கள், இஸ்லாமிய அமைப்புக்கள் அனைவர் மீதும் உண்டு.
நபிகளார் மீது தொடராக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த அடாவடித்தனங்களுக்கு எதிராக தக்க பாடம் கற்பிக்காமல் தன்னை ஒரு முஸ்லிம் ஊடகவியலாளன், முஸ்லிம் துறைசார் நிபுணர் என அழைத்துக் கொள்வதில் எவ்வித அர்த்தமுமில்லை. நாம் கருத்துக்கு கருத்தால் தான் பதில் சொல்வோம்; கல்லாலோ கத்தியாலோ அல்ல.
"அல்லாஹ்வின் பாதையின் பக்கம் மக்களை ஞானத்தைக் கொண்டும் அழகிய உபதேசங்களைக் கொண்டும் அழையுங்கள். (அவர்களுடன் விவாதிக்க நேர்ந்தால்) சிறந்த முறையில் அவர்களுடன் விவாதியுங்கள்" என்ற அல்குர்ஆனின் வழிகாட்டலுக்கமைய தர்க்கபூர்வமாக, அறிவு ரீதியாக, வரலாற்று ரீதியாக என எல்லாக்கோணங்களிலும் எமது வாதங்களை முன்வைக்கின்ற அளவுக்கு எம்மை நாம் பலப்படுத்திக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்.
இதுதான் இப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். முஸ்லிம்களுடைய எதிர்வினையை உலகமே அவதானித்துக் கொண்டிருக்கின்றது. இந்த அருமையான சந்தர்ப்பத்தில் எம்மிடம் கட்டுக்கோப்பும் திட்டமிட்ட நகர்வுகளின் அடிப்படையிலான அறிவூட்டலும் இருக்குமாயின் எமக்கு மிகச் சாதகமான சந்தர்ப்பமாக இது மாறும் என்பதில் சந்தேகமில்லை.
இத்திரைப்படத்தில் நபியவர்களை பெண் பித்தனாக வர்ணிக்கும் அதேவேளை, இரத்த வெறியராகவும் வர்ணிக்கிறார்கள். உண்மையில் நபிகளார் கல நெஞ்சம் படைத்தவரா? தயவு தாட்சண்யமற்றவரா? இல்லை. ஏன் நாம் இந்த உண்மையை உலகிற்கு எடுத்துச் சொல்லாமல் ஊமைகளாகியிருக்கிறோம்? ஊடகம் எம்மிடம் இல்லை என்பதுதான் இதற்கு முக்கிய காரணம்.
நபிகளார் உண்மையின் உறைவிடமாக இருந்தார்கள்; பண்பாட்டின் சிகரமாகத் திகழ்ந்தார்கள். தாயிபுக்குச் சென்ற நபிகளாரை சிறுவர்களைத் தூண்டி கல்லெறிந்து காயப்படுத்தினார்கள் ஓட ஓட விரட்டினார்கள். ஆனால் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அவர்களை சபிக்கவில்லை. இவர்களை ஒரு நாள் நான் பழிவாங்குவேன் என்று சூளுரைக்கவில்லை.
"யா அல்லாஹ் இந்த சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவாயாக! இவர்கள் அறியாமையின் காரணமாக இப்படி என்னைக் காயப்படுத்துகிறார்கள், இவர்கள்தான் சத்தியத்தைப் புரிந்துகொள்ளா விட்டலும், இவர்களின் சந்ததியாவது சத்தியத்தைப் புரிந்து கொள்வார்கள்" என்று சொன்ன நபிகளாரை இவர்கள் இரத்த வெறியராக, சகிப்பு தன்மையற்றவராக சித்திரிப்பது எவ்வளவு கேவலமானது என்பதை நாம் உரத்துக் கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
தான் பிறந்து வளர்ந்த மண்ணிலிருந்து தன்னைத் துரத்திய, தன்னைக் கொலை செய்வதற்கு எல்லா சதி முயற்சிகளையும் செய்தவர்கள் மக்கா வெற்றியின்போது நபிகளாரின் கண்முன்னே நிற்கிறார்கள். சொந்த மண்ணை விட்டு விரட்டியவர்கள், நபிகளாரை இம்சைப்படுத்தியவர்கள், தொல்லைப்படுத்தியவர்கள் யாவரும் தமக்கு என்ன நடந்துவிமோ என்ற பயத்தில் நின்றபோது நபிகளார் கேட்கிறார்கள்:
"குறைஷிகளே! உங்களை நான் என்ன செய்வேன் என்று நினைக்கிறீர்கள்?" அநியாயம் செய்த குறைஷிகளுக்கும் நபிகளாரின் நற்குணத்தின் மீதும் கருணையின் மீதும் நம்பிக்கை இருந்தது. குறைஷிகள் கூறினார்கள் "நீங்கள் நற்குணமுள்ள, கௌரவமான, தாராளத் தன்மையுடைய ஒரு சகோதரர். அத்தகைய சகோதரனின் மகன். நிச்சயமாக உங்களிடமிருந்து நன்மையை தான் எதிர்பார்க்கிறோம்".
கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிய இவர்களைப் பார்த்து நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் "யூஸூப் தன் சமூகத்தாரைப் பார்த்து என்ன சொன்னார்களோ அதைத்தான் நானும் உங்களுக்குச் சொல்கிறேன். இன்று எந்தத் தண்டனையும் உங்களுக்குக் கிடையாது. நீங்கள் சுதந்திரமாகச் செல்லுங்கள்" எனக் கூறி அனைவரையும் மன்னித்து விடுதலை செய்கிறார்கள்.
புனைந்துரைக்கப்பட்ட, இட்டுக்கட்டப்பட்ட, வரலாற்றாசிரியர்கள் ஏற்க மறுத்த, நாம் பக்கச் சார்போடு கூறுகின்ற வரலாறல்ல இது. இந்த வரலாற்றை மீண்டும் ஒரு முறை உலகத்திற்கு ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது. அசத்தியம் ஓங்கி ஒலிக்கிறது என்பதற்காக அது சத்தியமாகி விடாது. சத்தியம் மௌனியாக இருப்பதற்காக அது தோல்வி கண்டதாகக் கருத முடியாது.
எனவே, உலமாக்கள், புத்திஜீவிகள், துறைசார் நிபுணர்கள், அரசியல் தலைவர்கள், இச்சந்தர்ப்பத்தில் தமது பங்களிப்புக்களை வழங்க முன்வர வேண்டும். குறிப்பாக ஊடகவியலாளர்கள்தான் இவ்வுலகின் உண்மையான போராளிகள். ஊடகமும் பேனாவும் தான் உலகின் முதன்மையான ஆயுதங்கள். கத்தியில்லாத இரத்தமில்லாத யுத்தத்தில் நாம் வெல்ல வேண்டுமா?
சமுதாய அங்கத்தவர்களான நாம் அனைவரும் அண்டை அயலவர் முதல் முழு உலகத்திற்கும் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது முழு வாழ்வை, அதன் சரியான பக்கத்தை எடுத்துச் சொல்ல வேண்டும். அது ஒன்றே இத்தகைய துர்ப்பிரசாரங்களை முறியடிப்பதற்கான ஓரே வழி.
Hi to all
ReplyDeleteThe accepted Movements in Sri LAnka, they should open Facebook and twitter accounts to conduct a mass projects to voice again Islamic enemies around the World
Hebban Arraze.