ஈரானில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உரை
அனைத்து விதமான பயங்கரவாத செயற்பாடுகளுக்கும் எதிரான நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஆதரவளிக்கும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
சமாதானம், பாதுகாப்பு என்பவற்றை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் பல்முனை முயற்சிகளுக்கும் தொடர்ச்சியாக ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும் கூறிய ஜனாதிபதி, பயங்கரவாத அச்சுறுத்தலுள்ள நாடுகளுக்கு ஏனைய சர்வதேச நாடுகள் ஆதரவு வழங்க வேண் டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
16 ஆவது அணிசேரா நாடுகளின் மாநாடு ஈரானின் தெஹ்ரான் நகரில் ஆரம்பமானது. இங்கு உரையாற்றுகையிலே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
'சவால்களுக்கு மத்தியில் ஒன்றிணைந்த நிர்வாகத்தினூடாக நிலையான சமாதானம்' என்ற தொனிப்பொருளில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இதில் 120 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச தலைவர்கள் பங்கேற்றனர். இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி குறிப்பிட்டதாவது,
மனித சமூகத்தின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கு தடங்கலாக உள்ள எல்லை தாண்டிய பயங்கரவாதத்தினூடாக மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட குற்றச் செயல்கள் சம்பிரதாயபூர்வமற்ற அச்சுறுத்தல்கள் என்பவற்றினால் மோசமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன. உலக மயப்படுத்தப்பட்ட பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு உலகம் முகம்கொடுத்துள்ளது.
தெளிவான செயற்பாடுகளினூடாக 3 வருடங்களுக்கு முன் இலங்கை பயங்கரவாத சவாலை வெற்றி கொண்டது. இத்தகைய சவால்களை முறியடிக்க இலங்கையைப் போன்றே தாமாக தயாரித்த, மக்களை அடிப்படையாகக் கொண்ட பிரவேசம் அவசியமாகிறது.
பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுத்துள்ள நாடுகளுக்கு சர்வதேச நாடுகள் உதவ வேண்டும். இதற்கு இரட்டை நிலைப்பாடுகளோ ஒரு தரப்பினருக்கு மாத்திரம் பலன் தரக்கூடிய கொள்கையோ இருக்கக் கூடாது. ஒவ்வொரு நாட்டினதும் இறைமையை மதிக்க வேண்டும். மற்றும் சகலரும் சமமாக நடத்தப்பட வேண்டும். ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது என்பது ஐ.நா. சாசனத்திலும் அணிசேரா நாடுகள் அமைப்பினதும் அடிப்படை கொள்கைகளில் தெளிவுபட குறிப்பிடப்பட்டுள்ளது. அது எழுத்து மூலமாகவும் தத்துவார்த்த ரீதியிலும் தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்படும் கொள்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்தார்.
பலஸ்தீன மக்களின் உரிமைகளை வென்றெடுப்பது தொடர்பிலும் இங்கு உரையாற்றிய ஜனாதிபதி, 6 தசாப்தங்களுக்கு மேலாக பலஸ்தீன பிரச்சினை தீர்க்கப்படாதிருப்பது குறித்து தனது கவலையை வெளியிட்டார்.
உலக பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் 30 வருட யுத்த நெருக்கடியினூடாக ஏழுந்த தடைகளை தாண்டி இலங்கை பல இலக்குகளை தாண்டி பல வெற்றிகளை அடைந்துள்ள தாகவும் அவர் குறிப்பிட்டார்.
Post a Comment