சமூகங்களுக்கிடையே நம்பிக்கையின்மையே துர்ப்பாக்கிய சம்பவங்களுக்கு இட்டுச் சென்றது
ஸாதிக் ஷிஹான்
வடக்கில் தற்பொழுது நிலைகொண்டுள்ள பாதுகாப்புப் படைகள் குறைக்கப்பட்டு அதிலிருந்து 28 படையணிகள் கிழக்கு மற்றும் தென் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
இதற்கமைய வடக்கில் நிலை கொண்டுள்ள மொத்த படையிலிருந்து 2009ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இரத்மலானையிலுள்ள ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை பல் கலைக்கழகத்தின் 'வருடாந்த கருத் தரங்கு - 2012' இடம்பெற்றது. நல்லிணக்கம் மற்றும் ஸ்திரமான அபிவிருத்தியை தேசிய பாதுகாப்பு ஊடாக உறுதிப்படுத்தல்’ என்ற தொனிப் பொருளில் பாதுகாப்புச் செயலாளர் மேலும் உரையாற்றுகையில,
வடக்கில் ஏற்கனவே பாதுகாப்புப் படையினரின் பொறுப்பில் இருந்த சட்டத்தையும், ஒழுங்கையும், நிலைநாட்டும் பொறுப்பு தற்பொழுது பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதேவேளை தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலைகளில் மாத்திரம் தொடர்ந்தும் இராணுவ முகாம்கள் செயற்படும் என்றார்.
பலாலி விமானப் படைத்தளத்திற்குள் உள்ள காணிகளின் உரிமையாளர்களுக்கு அரசாங்கம் அந்தக் காணிக்கான நஷ்டஈட்டையும் மாற்றுக் காணிகளையும் வழங்கும்.
பலாலி விமானப் படைத் தளத்திலுள்ள மேற்படி காணிகளில் கடந்த 20, 25 வருடங்களாக எவரும் குடியிருக்கவில்லை. அத்துடன் அவை புலிகள் இயக்கத்தினரால் பலாத்காரமாக பெறப்பட்டவையாகும். தற்பொழுது பல வருடங்களுக்கு பின்னர் அக்காணிகள் சட்டபூர்வமாக சொந்தக்கார ர்களிடம ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார். வட பகுதி மக்கள் தற்பொழுது தமது ஜனநாயக உரிமைகளை அனுபவித்து வருகின்றனர். ஏனைய பகுதி மக்களுக்கு கிடைப்பதைப் போன்ற அரசாங்க சேவைகள் இந்த மக்களுக்கும் கிடைக்கின்றன.
எனினும் புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் சில சக்திகள் அந்த மக்களிடையே உள்ளனர். அவர்கள் சமாதானத்தை சீர்குலைக்கும் தகுந்த சந்தர்ப்பத்தை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறான நிலையிலும் வடக்கு மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் அல்லது புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று நினைப்பதற்கு அல்லது கருதுவதற்கு எந்தக் காரணமும் இல்லை. ஏனெனில் நாட்டின் மற்றைய பகுதியிலுள்ள மக்களுக்கு உரிய வசதிகள், உரிமைகளை அரசாங்கம் வட பகுதி மக்களுக்கும் வழங்கியுள்ளது.
இலங்கையர்கள் என்ற வகையில் நடந்ததை மறந்துவிட்டு நாட்டுக்கான புதிய சுபீட்சமான எதிர்காலத்தை கட்டியெழுப்ப வேண்டியது எமது கடமையாகும். இந்நிலையில் மக்கள் ஜனநாயகம் அற்ற பாதையில் அல்லது ஜனநாயகத்துக்கு மாற்றமான பாதையில் செல்வதை தடுத்து சரியான பாதையில் செல்லுமாறு அவர்களை ஊக்குவிக்க வேண்டியது அவசியமாகும் என்றார்.
புலிகளின் பிடியில் முன்னர் இருந்த பிரதேசங்களை அபிவிருத்தி செய்வது யுத்தத்திற்கு பின்னர் அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டிருந்த பாரிய சுமையாகும். அதனை அரசாங்கம் எந்தவித தங்கு தடையுமின்றி குறிப்பிடத்தக்க வகையில் நிறைவேற்றியுள்ளது. அதன் மூலம் நீண்ட கால சமாதானத்தையும், தேசிய பாதுகாப்பையும் நிலையாக வைத்திருக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமையை இங்கு குறிப்பிட்டு ஆகவேண்டும் என்றும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.
இதன் மூலம் உலக அரங்கில் தனக்குரிய இடத்தை ஸ்தாபிக்கும் வகையிலான தேசிய புத்தாக்கத்துடன் நாடு இன்று முன்னோக்கிச் செல்கிறது. இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு நாட்டு மக்கள் அனைவரையும் சமமாக மதிக்க வேண்டியது. அவசியமானது என்றும் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் சமூகங்களுக்கு இடையே நம்பிக்கையின்மை இருந்து வந்தது. இந்த நிலை சில துர்ப்பாக்கிய சம்பவங்களுக்கும் இட்டுச் சென்றது. அனைத்து இலங்கையர்களும் இன, மத அரசியல் பேதமின்றி கண்ணியம், சமத்துவம், பல் கலாசார சூழல் கொண்ட சமூகத்தில் வசிப்பதை இந்த அரசாங்கம் உறுதி செய்துள்ளது. இந்த நோக்கத்தை அடைவதற்கு அரசாங்கம் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது என்றும் பாதுகாப்புச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி, முப்படை களின் தளபதிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் புத்தி ஜீவிகள் கலந்துகொண்டனர். -தினகரன்
Post a Comment