Header Ads



ரத்த அழுத்த நோய்க்கு புதிய சிகிச்சை முறை - ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

ரத்த அழுத்த நோயை நிரந்தரமாகக் குணப்படுத்த புதிய சிகிச்சை முறையை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

உயர் ரத்த அழுத்த நோய்க்கும் சிறுநீரகத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. மேலும் ரத்த சர்க்கரை அளவு தொடர்ந்து கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால் சிறுநீரகம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இந்த நிலையில் மெல்போர்னில் உள்ள போகர் ஐடிஐ இதயம் மற்றும் சர்க்கரை நோய் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், இது தொடர்பாக மேற்கொண்டனர். அதாவது, சிறுநீரக ரத்தக் குழாய் சுவரில் உள்ள நரம்புகளில் ரேடியோ அதிர்வலைகளைச் செலுத்தி அதிக ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று ஆராய்ச்சி மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதன் மூலம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த மாத்திரைகளை மட்டுமே நம்பி வாழும் லட்சக்கணக்கானவர்களுக்கு இது மிகப் பெரும் நிவாரணமாக அமையும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.

உயர் ரத்த அழுத்தம் காரணமாக மாரடைப்பு, சிறுநீரகச் செயலிழப்பு, பக்கவாதம் உள்ளிட்டவை ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. உணவில் உப்பு அளவைக் குறைத்தல், புகை பிடிப்பதைத் தவிர்த்தல், மது அருந்துவதைத் தவிர்த்தல், உடற்பயிற்சி ஆகியன மூலம்தான் ரத்த அழுத்த அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும்.

இது தவிர, தொடர்ந்து மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலமும் ரத்த அழுத்தம் அதிகரிப்பதை ஓரளவு கட்டுப்பாட்டுகள் வைத்திருக்க முடியும். தியானப் பயிற்சி மூலமும் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க முடியும். ஆனால் இவையெல்லாம் கடினமானவையாகக் கருதப்படுகின்றன. நவீன சிகிச்சை கண்டுபிடிப்பு முறையில், ரேடியோ அதிர்வலையை சிறுநீரகச் சுவர் ரத்தக் குழாய் நரம்பினுள் செலுத்துவதன் மூலம் அதிக ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் மியூனிச்சில் நடைபெற்ற ஐரோப்பிய இதய மருத்துவர்கள் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய சிகிச்சை முறை நடைமுறைக்கு வந்தால் உயர் ரத்த அழுத்த நோயாளிகள், இனி மாத்திரைகளை நம்பி வாழ வேண்டிய அவசியம் இருக்காது. மற்றவர்களைப் போல உற்சாகமாக தங்களது வாழ்நாளைக் கழிக்கலாம்

No comments

Powered by Blogger.