Header Ads



'மின் குமிழ்களை அணைத்து, பேனாவை உடைத்தெறிந்த நீதிபதி'

 
முன்னாள் அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரனை சுட்டுக்கொலை செய்தவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது குறித்து கருத்து வெளியிட அவரது மனைவியான ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் மறுத்துள்ளார். “இந்தத் தீர்ப்பு பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. எல்லாவற்றையும் கடவுளே தீர்மானிப்பவன் என்று கருதுகிறேன். தீர்ப்பும் கடவுளின் முடிவே.” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
 
முன்னதாக, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நேற்று மகேஸ்வரனை சுட்டவரான வசந்தன் எனப்படும் ஜோன்சன் கொலின் வலன்ரினோவுக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கினார்.
 
2008 ஜனவரி 01ம் நாள் கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் கோவிலில் வைத்து முன்னாள் அமைச்சர் தி. மகேஸ்வரன் மற்றும் சந்திரகுமார் மகிந்தன் ஆகியோரைச் சுட்டுக்கொலை செய்ததாக இவருக்கு எதிராக எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ச நேற்று 150 பக்க தீர்ப்பை அறிவித்தார். சந்திரகுமாரை சுட்டுக் கொன்றதற்கு போதிய ஆதாரங்கள் முன்வைக்கப்படாததால் மேற்படி குற்றச்சாட்டில் இருந்து வசந்தன் விடுவிக்கப்பட்டார். எனினும் இவர் மகேஸ்வரனை சுட்டுக்கொன்றதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளதாக நீதிபதி அறிவித்தார்.
 
நேரில் கண்ட சாட்சிகளும் , விசாரணை அறிக்கைகளும் இதனை உறுதி செய்வதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். மகேஸ்வரனை சுடுவதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியில் இருந்த இரத்தமாதிரியும், சந்தேகநபரின் இரத்த மாதிரியும் ஒத்துப் போவதாக மரபணுப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார். துப்பாக்கிச் சூட்டின்போது சந்தேக நபரின் விரலில் காயம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 
இதையடுத்து தண்டனையை அறிவிப்பதற்கு முன்னர், வழக்கு தொடர்பாக ஏதும் கூறவிரும்புகிறீர்களா என்ற சந்தேக நபரிடம் நீதிபதி கேட்டார். அதற்கு சந்தேகநபர் தனக்கு இந்த சம்பவத்துடன் எந்தத் தொடர்பும் கிடையாது என்று தெரிவித்தார்.
 
இதனையடுத்து நீதிமன்றத்தில் இருந்த மின் குமிழ்கள் யாவும் அணைக்கப்பட்டன. அதன்பின்னர் குற்றவாளியை வெலிக்கடை சிறைச்சாலையில் மூச்சு அடங்கும் வரை தூக்கிலிடுமாறு உத்தரவிட்ட நீதிபதி, தீர்ப்பில் ஒப்பமிட்ட பின்னர் பேனா முனையை உடைத்தெறிந்தார்.
 
 
குறிப்பு- (மகேஸ்வரன் எம்.பி. சுட்டுக்கொல்லப்பட்ட பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலுக்கு அண்மித்த பகுதியிலேயே எமது பத்திரிகை அலுவலகம் அமைந்திருந்தது. மகேஸ்வரனுக்கு சூடுபட்ட செய்தி அறிந்ததும் எமது பத்திரிகை ஆசிரியரின் உத்தரவின்படி குறித்த கோயிலுக்கு ஓடிச்சென்றேன். மகேஸ்வரனை இரத்தம் தோய்ந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். வைத்தியசாலையில் அவருடைய குடும்பத்தினரின் கதறல் இன்னும் காதுகளில் ஒலிக்கிறது. காயத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பலத்த பாதுகாப்புடன் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். அவரை பார்வையிட எவருக்கும் அனுமதி கிடைக்காத நிலையில் ஜெயலத் ஜெயவர்த்தனா எம்,பி. சந்திரநேரு எம்.பி. ஆகிய இருவருடைய கைகளை பிடித்தபடி குறித்த சந்தேக நபரை பார்த்த குட்டி அனுபவமும் மறக்க முடியதாவை)
 
யாழ் முஸ்லிம் இணைய நிர்வாகி..!
 
 
 

No comments

Powered by Blogger.