Header Ads



சமூகப் பிரச்சினை என வரும்போது அரசியல்வாதிகள் இணைந்து செயற்படவேண்டும்

அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். தாஸீம் தும்புளுவாவ, ஹெம்மாதகமயை பிறப்பிடமாகக் கொண்டவர். கபூரியா அறபுக் கல்லூரியில் பயின்ற இவர் சவூதி, ரியாத் மன்னர் சஊத் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியையும் நிறைவு செய்தார். இஸ்லாமிய தஃவாப் பணி மற்றும் சமூக சேவைகளில் முனைப்புடன் ஈடுபட்டு வரும் மௌலவி தாஸீம் அவர்கள் சுனாமி அனர்த்தத்தின்போது சவூதியின் சேம்பிறைச் சங்கத்தின் இலங்கைக்கான இணைப்பாளராகவும் கடமையாற்றினார்.

சர்வமத அமைப்பின பிரதிநிதி, மல்வானை பின்பாஸ் மகளிர் கல்லூரியின் நிர்வாக சபை செயலாளர் என பல பொறுப்புக்களை வகித்து வரும் இவர், ஜம்இய்யதுஷ் ஷபாப் நிறுவனத்தின் உதவிப் பணிப்பாளராகவும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் உதவிப் பொதுச் செயலாளராகவும் கடமையாற்றிக் கொண்டிருக்கிறார். அவருடன் மீள்பார்வை மேற்கொண்ட நேர்காணலை வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.

சந்திப்பு – இன்ஸாப் ஸலாஹுதீன்


நாட்டில் முஸ்லிம்கள் அண்மைக் காலமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாகி வருகிறார்கள். இதன் பின்னணி குறித்து என்ன சொல்கிறீர்கள்?

இலங்கையில் முஸ்லிம்களுக்கு 1000 வருடங்களுக்கு மேலான ஒரு வரலாறு இருக்கின்றது. எமது மூதாதையர்கள் இந்த நாட்டிற்கு விசுவாசமானவர்களாக இருந்திருக்கிறார்கள். மரக்கலயா என்ற நாமம் கூட ஒரு முஸ்லிம் பெண்மணி சிறி விக்ரம ராஜசிங்க மன்னனைக் காப்பாற்றியதால் வந்தது எனச் சொல்லப்படுகிறது.

அறேபியர்கள் இங்கு வந்து நம்பிக்கையான முறையில் வியாபாரம் செய்திருக்கிறார்கள், பாதுகாப்புப் பணியிலே ஈடுபட்டிருக்கிறார்கள். எனவே, இங்கு நாம் வந்தான் வரத்தான்கள் அல்ல, இரண்டாம் தரப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல. நாமும் ஏனைய இனங்களைப் போன்று கௌரவமாக வாழக் கூடியவர்கள்தான். முஸ்லிம் அல்லாதவர்களும் இதனை எழுதி வைத்திருக்கிறார்கள்.

ஆனால், கவலையான விடயம்; யுத்தம் முடிந்து பயங்கரவாதம் ஒழிந்து, சமாதானம் மலர்ந்துள்ள இந்த நேரத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான இவ்வாறான பிரச்சினைகள் எழுந்துள்ளமையாகும்.

பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த 99.9 வீதமானவர்கள் நல்லவர்கள். இது முழு பௌத்த சமூகமும் மேற்கொள்ளும் ஒரு சதியல்ல. ஒரு சிறு குழுவினரே இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஏதோ ஒரு சக்தி இங்கு வேலை செய்கிறது. அதன் பின்னணியில்தான் இந்த மஸ்ஜித்களின் விவகாரம் தோற்றம் பெற்றது. இது நாட்டிலே ஒரு கசப்பான உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க எவ்வகையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன?

ரமழானுக்கு முன்னர், பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ, பொலிஸ் மா அதிபர் இலங்ககோன், கொழும்பு பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் போன்றவர்களை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் கவுன்ஸில், ஏனைய அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளடங்கிய குழுவொன்று சந்தித்தது.

முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற பள்ளிவாயல், மத்ரஸா, உழ்ஹிய்யா மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக இயங்குகின்ற இணையத் தளங்கள் என்பன குறித்த தெளிவை அவர்களுக்கு முன்வைத்தோம். பாதுகாப்புச் செயலாளருக்கோ, பொலிஸ் மா அதிபருக்கோ இவற்றில் அநேக விடயங்கள் தெரியாமல் இருந்தன. உடனடியாக இதற்குரிய தீர்வுகளை எடுப்பதாகக் கூறினார்.

இவ்விடயத்தில் அவர்கள் எமக்கு உதவியாக இருக்கின்றார்கள். அண்மையில் குருணாகல் மஸ்ஜித் விவகாரத்தின்போது நான் நேரடியாக பொலிஸ் மா அதிபரோடு தொடர்பு கொண்டேன். உங்களுடன் இது விடயமாக அவசரமாகத் தொடர்பு கொள்வேன் எனக் கூறிவிட்டு ஒரு மணித்தியாலத்தில் அழைப்பை ஏற்படுத்தி இப்பொழுது தொழுகையை பூரணமாக நிறைவேற்ற அங்கு, பாதுகாப்பு இருக்கின்றது எனக் கூறினார். இந்த இடத்தில் அவர்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், அரச மட்டத்திலும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சி அரசியல் வாதிகளின் ஒத்துழைப்பைப் பெற்று ஜம்இய்யதுல் உலமா சபை இதர அமைப்புக்கள் சங்கங்களின் ஆலோசனைகளையும் பெற்றுத்தான் நாங்கள் தீர்வு காண வேண்டும். அந்த அடிப்படையில்தான் நாங்கள் செயற்பட்டு வருகிறோம்.

நடக்கின்ற எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஜம்இய்யதுல் உலமாவின் மூலம் மாத்திரம் தீர்வு வழங்க முடியாது. சமூகப் பிரச்சினை என வரும்போது உலமாக்கள், புத்திஜீவிகள், துறைசார்ந்தவர்கள், குறிப்பாக அரசியல்வாதிகள் என பலரும் இணைந்து செயற்பட வேண்டும்.

இதில் முஸ்லிம் அரசியல்வாதிகளது பங்களிப்புப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

எமது அரசியல்வாதிகளுக்கும் இதில் கூடுதல் பொறுப்பு இருக்கின்றது. மக்கள் வாக்களித்து அவர்களை பாராளுமன்றம் அனுப்புவது, வாய் மூடி மௌனமாக இருப்பதற்கல்ல. அவர்கள் மக்களது பிரச்சினைகள் தொடர்பாக குரல் கொடுக்க வேண்டும். தீர்வுகளை வென்றெடுக்க வேண்டும் என்பதற்காகவே தெரிவு செய்கிறார்கள். மக்களுக்காக குரல் கொடுப்பது அவர்களது கடமையாகும்.

இது குறித்து மறுமையில் அவர்கள் விசாரிக்கப்படுவார்கள். சமயப் பிரச்சினைகளை அவர்கள் அரசியலோடு கலக்காமல் சமூகப் பிரச்சினையாக நோக்கி தீர்வுகளைக் காண முயல வேண்டும். அநேகமான முஸ்லிம் அரசியல்வாதிகள் இவ்விடயத்தை உணர்வு பூர்வமாக அணுகி எம்முடன் ஒத்துழைத்து வருகிறார்கள்.

உண்மையில், எமது பலம் ஒற்றுமையில் தங்கி இருக்கிறது. அல்குர்ஆன் சொல்வதுபோல “எப்போது நாம் கருத்து வேறுபட்டுப் பிரிந்து விடுகிறோமோ அப்போது நாம் எமது சக்திகளை இழந்து விடுவோம். அல்லாஹ் அதனைப் போக்கிவிடுவான்.”

தம்புள்ளை மற்றும் பிரச்சினைக்குள்ளான ஏனைய பள்ளிவாயல்களின் எதிர்கால நிலமை குறித்து என்ன சொல்கிறீர்கள்?

நாளொன்றுக்கு ஒரு தடவையாவது தம்புள்ளை பள்ளிவாசல் நிருவாகத்தில் யாராவது எம்மோடு தொடர்பில் இருப்பார்கள். அண்மையில் பத்திரிகையில் பள்ளிவாயல் உடைக்கப்படும், நகர அபிவிருத்திக்காக அது உடைக்கப்படும் என்ற செய்திகள் வெளியாகின.

எது எப்படி இருப்பினும், நாங்கள் அரச மட்டத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தி இருக்கிறோம். அதுபோன்றுதான், ராஜகிரிய, ஒபேசேகரபுர மஸ்ஜிதாக இருந்தாலும் ஏனைய மஸ்ஜித்களாக இருந்தாலும் மேல்மட்ட நடவடிக்கைகளோடு அரசின் உதவியைப் பெற்றுத்தான் நாங்கள் தீர்வு காண முயற்சிக்கின்றோம். முடிவுகள் நல்ல முடிவுகளாக அமைய வேண்டும் என நாங்கள் எதிர் பார்க்கிறோம். மீண்டும் இனங்களுக்கு மத்தியில் முறுகல் நிலை தோன்றக் கூடாது. அரசாங்கமும் இவ்விடயத்தில் பூரண கவனம் செலுத்துகின்றது.

பள்ளிவாயல்களின் பதிவு குறித்து என்ன சொல்கிறீர்கள்?

ஆரம்பத்தில் பள்ளிவாயல்களை அமைக்கும்போது இத்தகைய பிரச்சினைகள் இருக்க வில்லை. முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் நாளாந்தம் ஐந்து வேளை தொழுவது அவர்களது மார்க்கக் கடமையாகும்.

முஸ்லிம்கள் எப்போதும் பள்ளிவாயலோடு தொடர்புபட்டவர்கள். முஸ்லிம்களுக்கு பள்ளி என்பது மத அனுஷ்டானத்தில் ஒரு முக்கிய அம்சம். அதற்கமைய அவர்களது குடியேற்ற இடங்களில் அதனை நிர்மாணித்துக் கொண்டார்கள். சிலர் பதிந்துள்ளார்கள், சிலர் பதியவில்லை.

பள்ளிவாயல்களில் யாரும் பயங்கரவாதத்தைப் போதிக்கவில்லை. மத்ரஸாக்களிலும் அப்படி இல்லை. அண்மைய சந்திப்பில் பாதுகாப்புச் செயலாளரும் கூட இதனைச் சொன்னார்.

எமது பள்ளிவாசல்கள் சிங்களப் பகுதிகளில் ஒருபோதும் திட்டமிட்டு உருவாக்கப்படுவதில்லை. முஸ்லிம்கள் தமது ஆன்மீகத் தேவைக்காகவே இதனை நிர்மாணிக்கிறார்கள். தமது உடலையும் உள்ளத்தையும் அங்கு சுத்தம் செய்கிறார்கள். வளமான வாழ்வுக்கும் சுபிட்சமான நாட்டுக்கும் அவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள் அவ்வளவுதான்.

ஆனால், பதிவு என்பது சட்டரீதியான ஒன்றாக இருக்கின்றது. இதுவரை பதியப்படாத மஸ்ஜித்களை அவசரமாகப் பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறோம். அரசு யாருக்கு அனுமதி கொடுத்திருக்கிறதோ அவர்கள்தான் இந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும். நினைத்தவர்கள் இதில் தலையிடக் கூடாது.

இப்படியான பிரச்சினைகளின்போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதில் ஜம்இய்யதுல் உலமா எத்தகைய ஆலோசனைகளை சமூகத்திற்கு முன்வைக்கிறது?

உலகளாவிய மட்டத்தில் முஸ்லிம் உம்மத் பல்வேறு சோதனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றது. எனவே, இதனைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் மிகவும் நிதானத்துடனும் தூர நோக்குடனும் நடந்து கொள்ள வேண்டும். வேகமாகச் செயயற்படுவதைவிட விவேகமாக நாங்கள் நடந்து கொள்ள வேண்டிய ஒரு காலமிது.

எதையும் சட்டரீதியாக அணுகுவதே ஆரோக்கியமான வழிமுறையாகும். யாரும் சட்டத்தை கையில் எடுக்க முயலக் கூடாது. அப்படி யாரும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடாது என முஸ்லிம்களை நாம் வினயமாக வேண்டிக் கொள்கிறோம்.

அடுத்தவர்களுக்குத் தொந்தரவு இல்லாமல் இருக்க வேண்டும். முஸ்லிம்கள் தாக்கப்படும்போது எமது தலைவர்களின் குரல்கள் சர்வதேச மட்டத்தில் சத்தமில்லாமல்தால் ஒலிக்கின்றன.

அல்லாஹ் அல்குர்ஆனில் சொல்வதுபோல “நீங்கள் பயப்பட வேண்டாம், சஞ்சலப்பட வேண்டாம். நீங்கள்தான் உயர்ந்தவர்கள். ஆனால், ஒரு நிபந்தனை, உண்மையான முஃமின்களாக இருக்க வேண்டும்.” ஈமான், தவக்குல், தக்வா என்பன முஸ்லிம்களின் ஆயுதங்களாம். இப்பண்புகளோடு வாழும்போது அல்லாஹ்வின் உதவி நிச்சயம் கிடைக்கும்.

மேலும், இனங்களுக்கு மத்தியில் பரஸ்பர புரிந்துணர்வு, நல்லெண்ணத்தை வளர்ப்பதற்கான நிகழ்ச்சித் திட்டங்களை சகல மட்டங்களிலும் ஏற்பாடு செய்ய வேண்டும். இதனால் ஒருவர் மற்றவரை புரிவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

Meelparvai

No comments

Powered by Blogger.