Header Ads



குஜராத் முஸ்லிம்கள் படுகொலையும், நீதிமன்றத் தீர்ப்பும்

 
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த மதக்கலவரத்தில் குற்றவாளிகள் என்று தீர்மானிக்கப்பட்ட 32 பேருக்கான தண்டனை விவரங்களை ஆமதாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் இன்று அறிவித்தது.
அதன்படி, ஆளும் பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான மாயாபென் கொட்நானிக்கு 28 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, கிரிமினல் சதித்திட்டம், கொலை உள்பட பல்வேறு குற்றங்களுக்காக, முதலில் 10 ஆண்டுகளும், அதையடுத்து 18 ஆண்டுகளும் அவர் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.

முதல் முறையாக, குஜராத் கலவரத்தில், பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் தண்டிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஹிந்து இயக்கமான பஜ்ரங் தளத்தின் முன்னாள் தலைவர் பாபு பஜ்ரங்கி., தனது ஆயுட்காலம் முழுவதையும் சிறையில் கழிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
 
இந்த வழக்கில் 32 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், ஒருவர் தலைமறைவாக இருக்கிறார். மாயாபென், பஜ்ரங்கி தவிர மீதமுள்ள 29 பேருக்கு 10 ஆண்டுகள், அதன்பிறகு 21 ஆண்டுகள் என மொத்தம் 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
வழக்கமாக, பல தண்டனைகள் விதிக்கப்பட்டாலும், அந்த தண்டனைகளை ஒரே காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றுதான் தீரப்புகள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த வழக்கில் தண்டனைகளை ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டிருப்பது, நீதிமன்றம் இந்த வழக்கை எவ்வளவு கடுமையாக எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதைக் குறிப்புணர்த்துவதாக நோக்கர்கள் கருதுகிறார்கள்.
 
மரண தண்டனை இல்லாதது ஏன்?
 
இவர்களுக்கு மரண தண்டனை விதிக்காமல் இருந்ததற்கு நீதிபதி பல்வேறு காரணங்களைத் தெரிவித்திருக்கிறார். ஏற்கெனவே 139 நாடுகள் மரண தண்டனையை ரத்து செய்துவிட்டதாகக் கூறிய நீதிபதி, மரண தண்டனை ஒரு தீர்வாக இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.
 
இனக்கலவரத்தைப் பொருத்தவரை, இனிமேல் நாட்டில் அப்படியொரு குற்றம் நடக்கக் கூடாது என்ற அடிப்படையில்தான் இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
 
ஆமதாபாத் நகரில் உள்ள நரோதா பாடியா பகுதியில் கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி நடந்த கலவரத்தில், 97 பேர் கொல்லப்பட்டார்கள்.
 
மாயா கொட்நானி, பாபு பஜ்ரங்கி உள்பட குற்றவாளிகள் என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட அனைவரும் கொலை மற்றும் கிரிமினல் சதித்திட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.
 
அந்தக் கலவரத்தில், பல்வேறு நபர்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண் ஒருவருக்கு குஜராத் அரசு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
இந்த வழக்கு விசாரணை கடந்த 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கியது. 62 பேருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. விசாரணையின்போது ஒருவர் உயிரிழந்துவிட்டார்.
 
நரேந்திர மோடி அமைச்சரவையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த மாயா கொட்நானி, கடந்த 2009-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
 
இந்த வழக்கில், உச்சநீதிமன்றத்தால் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்ட பிறகே, பெருமளவு முன்னேற்றம் ஏற்பட்டதாக ஆர்வர்கள் கூறுகின்றனர். முன்னாள் சிபிஐ இயக்குநர் ராகவன் தலைமையிலான அந்தக் குழுவினிரின் செயல்பாடுகளுக்குப் பிறகே, மாயாபென் கொட்நானி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டிருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றநர். bbc
 

 

No comments

Powered by Blogger.