''கருமலையூற்றுப் பள்ளிவாசலும், காற்றில் பறந்த வாக்குறுதியும்''
மூதூர் முறாசில்
'சேர்;... எங்களுக்கு கருமலையூற்றுப் பள்ளிவாசலை மீட்டுத்தந்தால்... இப்பகுதி மீனவர்களது பாஸ் பிரச்சினையைத் தீர்த்துத் தந்தால்... அரச படைகளினால் அத்து மீறிப்பிடிக்கப்பட்டுள்ள எமது உறுதிக்காணிகளை மீள ஒப்படைத்தால்... இத்தேர்தலில் நீங்கள் யாருக்கு ஓட்டுப் போடக் கூறுகிறீர்களோ அவர்களுக்கு நாங்கள் ஓட்டுப்போடுவோம்.... இது நிச்சயம்..'
இது கருமலையூற்று கிராம மக்கள் வழங்கிய வாக்கு மூலத்திலிருந்து சில வாசகங்களாகும்.
திருகோணமலை வெள்ளைமணல் கிராம உத்தியோகத்தர் பரிவிலுள்ள கருமலையூற்று கிராமத்தில் மக்கள் எதிர் நோக்கிவரும் பிரச்சினைகள் சம்பந்தமாக ஒரு அவதானிப்பை மேற்கொள்வதற்காக அங்கு சென்ற போதே அம்மக்கள் உளம் திறந்து இவ்வாறு கூறினார்கள். (அம்மக்களது பிரச்சினைகள் தேசிய ஊடகங்களில் அறிக்கையிடப்பட்டிருந்தது)
இது இரண்டு மாதங்களக்கு முன்பு நடந்த நிகழ்வாகும்...!
அதன்பின்பே பெரும்பாலும் உயர்மட்ட அரசியல் வாதிகளும் சிவில் நிறுவனங்களின் முக்கியஸ்தர்களும் கருமலையூற்று மக்களது பிரச்சினை சம்பந்தமாக கவனம் செலுத்தத் தொடங்கினர். இது பாராட்டுக்குரிய விடயமாகும். ( இருந்தபோதும் இதற்கு முன்பிருந்தே அக்கிராமத்திலுள்ள பல்வேறு பிரச்சினைகள் சம்பந்தமாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் மற்றும் வேறு மக்கள் பிரதிநிதிகளும் முயற்சி மேற்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.)
இந்தவகையில் முதன்முறையாக கைத்தொழில் வணிகத்துறை அமைச்சர் ரிஷட் பதியுத்தீன் அப்பகுதிக்கு சென்று மக்களது பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டதுடன் அதனை பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் ஜனாதிபதிக்கும் தெரிவித்து தீர்வொன்றைப் பெற்றுத்தருவதாகக் கூறியிருந்தார்.
அமைச்சரின் அந்த விஜயத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் முன்னாள் அமைச்சர்களான அமீரஅலி எம்.எஸ். சுபைர், கிண்ணியா நகர பிதா டாக்டர் எம்.ஹில்மி, மூதூர் பிரதேச சபை உறுப்பினர் அஷஷய்க் ஜவாப்தீன் ஜஸ்ரி உள்ளிட்ட பலரும் உடன் சென்றிருந்தனர்.( பள்ளிவாசலை பார்க்கும் நோக்கத்தில் அமைச்சரும் ஏனையோரும் சென்றிருந்தபோதும் அதனைப் பார்வையிடுவதற்கு பாதுகாப்புப் படையினர் அனுமதி வழங்குவதற்கு மறுத்தது வேறு கதை )
ஆனால் அமைச்சரின் முயற்சி இற்றைவரை கைகூடியதாகத் தெரியவில்லை.
இதுவொருபுறமிருக்க முன்னாள் அமைச்சரும் இந்நாள் மாகாணசபை வேட்பாளருமான நஜீப் ஏ.மஜீதின் தலைமையில் முன்னாள் அமைச்சரும் (மூத்த) பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எச்.எம்.அஸ்வர்,குருணாகல் மாவட்ட சிறிலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளரும் மாநகரசபை உறுப்பினருமான அப்துல் சத்தார், குச்சவெளி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் மாகாண சபை வேட்பாளருமான ஆதம்பாவா தௌபீக் ஆகியோர் உள்ளிட்ட ஓரு குழுவினர் குறித்த பள்ளிவாசலை நேரில் சென்று பார்வையிட்டதுடன் அதனை 'ஓரு வாரத்திற்குள்' மக்களிடம் கையளிப்பதெனவும் உறுதியளித்தனர்.
இவ்விடயம் தேசிய ஊடகங்களிலும் முக்கியத்துவம் பெற்றிருந்தது.
இதுபோக பள்ளிவாசலை நோக்கி சென்றதையும் அங்கு கண்டதையும்' சென்ற அக்குழுவிலிருந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த இருவர் செய்தியாகவும் அறிக்கையாகவும் ஊடகங்களில் வெளியிட்டிருந்தனர்.
அவர்கள் வெளியிட்டிருந்த விடயங்கள் இக்கிராம மக்களினது எதிர்பார்ப்புக்கு ஏமாற்றத்தை தருவதாக அமைந்திருந்தது. அதில் ஓருவர் ஊடகங்களுக்கு வழங்கிய செய்தியில் 'இவர் இவ்வாறு தன்னிடம் தெரிவித்தார்' என்று இப்பகுதியைச் சேர்ந்த ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டிருந்தனால் செய்தியைப் படித்த ஊர்மக்கள் அவரின் வீட்டை முற்றுகையிட்டு 'நீங்களா இப்பொய்ச் செய்தியை அவருக்கு வழுங்கினீர்கள்...? என்று சொற்போர் புரிந்த போது அதற்கவர் 'சத்தியமாக அப்படியொன்றும் நான் அவரிடம் கூறவில்லை!' என்று உறுதியாக மறுத்து ஒருவாறு தப்பித்துக் கொண்டார்.
சரி நடந்தது போகட்டும். நமக்கு முதலில் பள்ளிவாசலை ஒரு வாரத்திற்குள் கையளித்தால் அது மட்டும் போதும் என்ற எண்ணத்தில் இக்கிராம மக்கள் இருந்த நிலையில் ஒருவாரத்திற்குள் பள்ளிவாசலை மீட்டுத்தருவதாக இக்குழுவினர் ஒருமித்து வழங்கிய உறுதிமொழி இரு வாரங்கள் கடந்த போதும் கைகூடவில்லை.
என்றபோதும் அரசாங்கத்தின் சார்பில் தாம் பொறுப்புடன் கூறிய அவ்வாக்குறுதிக்குச் சொந்தமான நால்வரில் மூவர் அக்கறையற்றிருந்தபோதும் நஜீப் ஏ. மஜீத் மாத்திரம் அவ்வாக்குறுதியை புதுப்பித்து ஊடகத்திற்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.
அவரது புதிய கருத்து இதுதான்: 'பாதுகாப்பு தரப்பினரிடமும் அரசாங்க உயர் மட்டத்தினரிடமும் பேசி,பள்ளிவாசலை மிக விரைவில் முஸ்லிம்மக்களிடம் கையளிக்க நான் முயற்சிகளை எடுத்து வருகின்றேன். ஆனால் இதற்கான கால எல்லையை என்னால் குறிப்பிட முடியாது.'
பள்ளிவாசலை மக்களிடம் கையளிப்பதற்கென முன்பு 'ஓருவார கால எல்லையை விதித்திருந்த இவர்; இப்போது கால எல்லையை குறிப்பிட மறுப்பது மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் அமைச்சர் நஜீப் ஏ. மஜீதைப் பொருத்தவரை அவரது கூற்றில் மக்கள் சந்தேகம் கொள்வதும் நியாயமாகத்தான் தோன்றுகிறது. ஏனெனில், அண்மையில் மூதூர் ஜபல் மலை விவகாரத்தில் 'மலையில் சிலை வைப்பதற்கு ஓரு போதும் அனுமதி வழங்க மாட்டோம்' என்று ஆக்ரோஷமாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் அக்கருத்தைக்கூறி சில வாரங்களுக்குள்ளேயே அம்மலையில் சிலை வைக்கப்பட்டபோது தனக்கு எதுவும் தெரியாதது போல் இருந்து விட்டார். அப்படி இப்பள்ளிவாசலுக்கும் ஏதும் நடந்து விடுமோ என்ற அச்சம் மக்களிடம் மேலோங்கிக் காணப்படுகிறது.
என்றபோதும் மக்களிடம் பள்ளிவாசலானது கையளிக்கப்படாதிருப்பது அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை பெற்றுக் கொடுக்கும் விடயம் என்பதை அரசாங்கத்தின் கௌரவத்தைக் கட்டிக்காப்பதிலும் பள்ளிவாசல் சம்பந்தப்பட்ட விடயத்திலும் அதீத ஈடுபாடு காட்டிவரும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அஸ்வருக்கு (இவ்விடயமானது) அவரது 'மனசாட்சியை பேசவைக்கும்' என்றும் அதனால் அவர் இப்பள்ளிவாசலை உடன் மக்களிடம் வழங்குவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பார் என்றும் கருமலையூற்று கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அத்தோடு யுத்தம் நிலவிய காலத்தில் மீனவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மீன்பிடித்தொழிலில் ஈடுபடுவதற்கான கட்டுப்பாடு இற்றை வரை தமக்கு நீக்கப்படவில்லையென்றும் இம்மக்கள் வேதனையுறுகின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கான சகல கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுவிட்டதாக கிழக்கு மாகாண ஆளுனர் ரியர் அட்மிரல் மொஹான் விஜய விக்கிரம அண்மையில் அறிவித்திருந்த போதும் இக்கிராமத்தைச் சேர்ந்த 300ற்கும் மேற்பட்ட மீனவர்களில் மீன்பிடிப்பதற்கு 60 பேர்கள்வரையே நாளொன்றுக்கு அனுமதிக்கப்படுவதாகவும் ஏனையோர் தொழிலில் ஈடுபடாது முடக்கப்படுவதாகவும் இப்பகுதி மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும் இப்பகுதி மக்களது 50 ஏக்கருக்கு மேற்பட்ட தனியார் உறுதிக்காணிகளை படையினர் அண்மையில் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாகவும் அதனை மீட்டித்தருமாறும் மற்றுமோர் கோரிக்கையையும் முன்வைக்கின்றனர்.
கருமலையூற்றுக் கிராம மக்களது இத்தகைய உரிமை சம்பந்தப்பட்ட விடயங்களில் உதவுவது யார்? அம்மக்களுக்கு உதவ முன்வருபவர்களுக்குத்தான் இம்மாகாண சபை தேர்தலில் வாக்குககள் வழங்கப்படும் என்பதுதான் அம்மக்களது வாக்குறுதி!
எது எவ்வாறாக இருந்தபோதும் மாகாண சபைத் தேர்தலில் இப்பள்ளிவாசல் விவகாரமும் ஏனையனவும் இப்பகுதியில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வாக்கு வங்கியில் கணிசமான சரிவை ஏற்படுத்தும் என்பது இம்மக்களது வாக்கு மூலத்திலிருந்து அறிந்துகொள்ளக்டியதாக இருக்கின்றது.
கருமலையூற்று மக்களது வாக்குமூலத்தையொத்த மற்றுமோர் அங்கலாய்ப்புக் குரல் முஸ்லிம்களை அதிகமாகக் கொண்டமைந்திருக்கின்ற கிண்ணியா பிரதேசத்திலிருந்து ஓங்கி ஒலிக்கின்றது.
இப்பிரதேசத்திலிருக்கும் அனேகர் தமது வாக்குகளோடு தமது இருப்பு அல்லது கௌரவம் சம்பந்தப்பட்ட விடயத்தை இணைத்து நோக்குகின்றனர். அவ்வாறு நோக்குவதற்கு கடந்த காலத்தில் அவர்கள் கற்றுக் கொண்ட பாடங்களே வழிவகுத்திருக்கின்றன.
கடந்த பொதுத் தேர்தலில் எங்கேயோ இருந்து வந்த ஒருவருக்கு தாமும் சேர்ந்து அளித்த வாக்குகளினால் அவர் வெற்றி பெற்று பிரதி அமைச்சராகவும் மாவட்ட அபிருத்திக் குழுத் தலைவராகவும் ஆனது தமக்கு அபிவிருத்தி என்னும் மாயத் தோற்றத்தை காட்டிய போதும் உண்மையில் சமய கலாசார சமூக ரீதியில் பாதிப்பையே ஏற்படுத்தியுள்ளதென உணரத் தலைப்பட்டுள்ளனர். இதற்கு அண்மைய உதாரணமாக கிண்ணியா பாலத்தை அண்மித்து அமைக்கப்பட்ட வீதி அலங்கார வளைவு நிர்மாணப்பணி இடைநிறுத்தப்பட்டதைக் அம்மக்கள் எண்ணிப்பார்க்கின்றனர்.
மூதூர் பிரதேசத்தை எடுத்துக் கொண்டபோதும் முஸ்லிம் மக்களது உரிமை மற்றும் இருப்பு முதலானவற்றைக் கொண்டே வாக்கு வங்கி நிலை கொண்டிருப்பதை உணர முடிகின்றது. மூதூர் ஜபல் மலை விவகாரம், சுனாமியினால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கு மேற்பட்டகுடும்பங்களின் வீடற்ற அவல நிலை, மீள்குடியேற்றப்பட்டவர்களுக்கு அடிபடை வசதிகள் கூட வழங்கபடாத இழிநிலை,படுகாட்டுவெட்டை முதலான சொந்தக் காணிகளில் கூட விவசாயம் செய்யமுடியாத கொடுமை, அபிவிருத்தி நடவடிக்கைகளில் திட்டமிட்ட புறக்கணிப்பு உள்ளிட்ட பல விடயங்கள் இம்மாகாண சபைத் தேர்தலில் எந்தக்கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் மக்களுக்கு ஓரு பாடத்தைப்புகட்டியுள்ளதாகத் தெரிகிறது.
இவ்வாறு நோக்குகின்ற போது திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்மக்களின் உரிமை சம்பந்தப்பட்ட எதிர்பார்புக்களையும் அபிலாiஷகளையும் பிரதிபலிக்கின்ற கட்சியொன்றே முஸ்லிம்களின் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆசனங்களை தக்கவைத்துக்கொள்வதற்கான வாய்ப்பு இருக்கின்றது. பெரும்பாலும் திருகோணமலை மாவட்டத்தை ஓத்த எதிர்பர்ப்புக்களை சுமந்து இருக்கின்ற ஏனைய இரு மாவட்டங்களிலும் அதே கட்சியே அதிகரித்த ஆசனங்களை பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பம் இருக்கின்றது.
இச்சந்தர்ப்பம் முஸ்லிம்களின் வாக்களிப்பு வீதம் உச்சநிலையில் இருக்கும் போதும் தேர்தல் நடவடிக்கைகள் நேர்மையாக இடம்பெறும்போதுமே சாத்தியமாகும்.
அவ்வாறு இல்லையேல் சாத்தியம் என்பது அசாத்தியமே!
முஸ்லிம் காங்கிரசை நம்பி மூதூர் முஸ்லிம்கள் ஏமாந்து விட்டனர். போன கிழக்கு மாகான சபை தேர்தலில் எங்கிருந்தோ வந்த ஹக்கீமுக்கு ஓட்டு போட்டனர். அதனால் இம்முறை அரசுக்கும் அரசின் போக்கட்டுக்குள் இருக்கும் மரத்துக்கும் ஓட்டு போடாமல் எதி கட்சிக்கு போட்டால்தான் அரசாங்கம் அவர்களை திரும்பி பார்க்கும். மு காவுக்கு போட்டால் கிண்ணியா சந்திக்கும் புத்தர் சிலை வரும்
ReplyDeleteDear Murasil SLMC is a coaliation partner of this government. So far they have done nothing to address the grievences of these people. But you indirectly say these people should vote for SLMC (Surely you are a strong SLMC supporter) to solve their problems. Can Hakeem or SLMC solve the problems of these problems?
ReplyDeleteI am sorry to blame you perhaps you have been employed by Hakeem to write aricles to impress the people that theirs is the only party that speak for these innocent people.
WHERE IS THE MP CADER? PAUFSI? AZWAR? FAIS MUSTAFA? ALL ARE SLEEPING? OR ARE THEY DON,T KNOW ABOUT THIS MATTER? INSA ALLAH THEY ARE ALL ONE DAY HAVE TO ANSER NOT HERE, IN AAHIRA...... IT IS TRUE? CHEATING POLTICIANS
ReplyDeleteRIMZAN
GAMPOLA