Header Ads



உரிமைப் போராட்டத்தில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை - ரவூப் ஹக்கீம்



டாக்டர் ஹபீஸ்

நிருவாக அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், நிலஅளவை திணைக்களத்தினரும் அம்பாறை மாவட்டத்தின் எல்லைகளை பென்சில்களால் தமக்கு விரும்பியவாறு கீறி, இம் மாவட்டத்தின் எல்லைகளை உருவாக்கியிருக்கிறார்கள். மிக லாவகமாக அவர்கள் எல்லைகளை வரையறுத்துக்கொண்டார்கள். அதன் பிரதிபலிப்பைத் தான் முழு மாவட்டமும் இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறது.

இவ்வாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் பொத்துவில்லில் அண்மையில் நடைபெற்ற பதர் சஹாபாக்கள் தின இப்தார் நிகழ்வையொட்டிய முஸ்லிம் காங்கிரஸின் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் பொழுது தெரிவித்தார். 

அங்கு உரையாற்றுகையில் அவர் மேலும் கூறியதாவது, 

பொத்துவில் பிரதேசத்தில் அவலங்களைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். இந்த பிரதேசத்தின் பிரச்சினைகள் எல்லாவற்றிற்கும், நாட்டின் பிரச்சினைகள் அனைத்துக்குமாக சிந்திக்க வேண்டிய ஒரு நிலைமாறு காலத்தில் நாங்கள் இருக்கிறோம். அதைப்பற்றி நாங்கள் ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். பயங்கரவாத பிரச்சினை தீர்க்கப்பட்ட பின்னர் இன்று நாட்டில் உருவாகியிருக்கும் சூழ்நிலை எத்தகையது என்பது சம்பந்தமாக ஒவ்வொருவருக்கும் பலவிதமான அபிப்பிராயங்கள் இருந்துகொண்டு இருக்கும். வரலாற்று ரீதியாக ஆரம்பத்திலிருந்து இழைக்கப்பட்ட அநீதிகளின் பிரதிபலிப்பாகத் தான் இந்த நிலை தோன்றியுள்ளது. 

நிருவாக அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், நிலஅளவை திணைக்களத்தினரும் அம்பாறை மாவட்டத்தின் எல்லைகளை பென்சில்களால் தமக்கு விரும்பியவாறு கீறி இம் மாவட்டத்தின் எல்லைகளை உருவாக்கியிருக்கிறார்கள். முன்பெல்லாம் இருந்த டி.ஆர்.ஓ. பிரிவுகள் வௌகம்பற்று, கரவாகு பற்று போன்ற பிரதேசங்களெல்லாம் வேண்டுமென்று அவ்வப்போது நிருவாக அடிப்படையில் சுலபமாக இருக்குமென்ற தோரணையில் மாற்றியமைக்கப்பட்டன. இன்றைய அம்பாறை மாவட்டத்தின் பெரும் பகுதி மட்டக்களப்பு மாவட்டத்திற்குச் சொந்தமாக இருந்த பகுதிகளெல்லாம் திட்டமிட்டு, வேண்டுமென்று அம்பாறை மாவட்டத்தோடு இணைத்து இந்த பிரதேசத்தை தற்பொழுது பெரும்பான்மை சமூகத்தினரும், நாங்களும் சரிசமமாக வாழ்கின்ற அளவிற்கு 1960 களிலே ஏற்படுத்தி விட்டார்கள். அதன் பிரதிபலிப்பாகத் தான் பெரிய நெருக்கடிகளை நாங்கள் எதிர்நோக்கி வருகின்றோம். மிக லாவகமாக அவர்கள் எல்லைகளை வரையறுத்துக்கொண்டார்கள். அதன் பிரதிபலிப்பைத் தான் முழு மாவட்டமும் இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறது.

இந்த விடயங்களையெல்லாம் அண்மையில் நியமிக்கப்பட்ட ஒர் எல்லை மீள் நிர்ணய ஆணைக்குழுவின் முன்னிலையில் நாங்கள் சென்று பேசி குறைந்தபட்சம் இந்த பொத்துவில் பிரதேச சபை எல்லைகளை ஏற்றுக்கொள்ளப்பட்ட புவியியல் ரீதியாக, இங்கு வாழும் மக்களுக்குரிய நிலங்கள் உள்ளடங்கக் கூடியதாக மீள் நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் சாட்சியம் அளித்தோம். அது சம்பந்தமான வரைபடங்களையும் நாங்கள் சமர்ப்பித்தோம். நாங்கள் கூறிய உண்மைகளை அவர்களால் மறுதலிக்க முடியவில்லை. ஆனால், ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை ஆணைக்குழு அறிக்கைகள் எவற்றைக் கொடுத்தாலும் இதுவரை அவை நிறைவேற்றப்பட்டதாக இல்லை. கடந்த 90 களிலிருந்து இந்த ஆணைக்குழுக்கள் முன்னிலையில் தொடர்ந்து நானும் சாட்சியமளித்துக்கொண்டு தான் வருகின்றேன். சில பிரதேச சபைகளை மட்டும் மீள் நிர்ணயம் செய்திருக்கிறோம். நாவிதன் வெளி பிரதேச சபை இறக்காமம் பிரதேச சபை, காரைதீவு பிரதேச சபை என்று நிர்ணயம் செய்திருக்கிறோம். உண்மையில் எல்லைப் பிரச்சினையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பொத்துவில் பிரதேசத்தின் எல்லையில் மீள் நிர்ணயம் செய்வதில் இதுவரை நாம் வெற்றிகாண முடியாமல் இருக்கின்றோம். 

அக்கரைப்பற்று, கருங்கொடித் தீவு, ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கும் இடையில் இருந்த ஒரு பெரிய பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் அம்பாறை மாவட்டத்தின் மூலையில் அமைந்துள்ள பொத்துவில் பிரதேசத்தை மீள் வரையறை செய்வது இதுவரையில் சாத்தியப்படவில்லை. 

இதையடியொட்டித்தான் இந்த மாகாணத்தின் ஆட்சி அதற்கான தேர்தல் போன்ற விடயங்களும் 13 ஆவது சட்டத்திருத்தமும், அதன் கீழ் வரும் காணி, பொலிஸ் அதிகாரங்களும் மிக முக்கிய விடயங்கள் என்பதை நாம் அடையாளம் காண வேண்டும். அது வெறும் ஆசனங்களுக்கான போட்டியல்ல. இந்த போட்டி இந்த சமூகத்தின் இருப்பு சம்பந்தமான ஒரு பெரிய போராட்டத்தை சரிவர நெறிப்படுத்துவதற்கான ஓர் ஆயத்தத்தை ஏற்படுத்துவது என்பதை நாங்கள் மனதில் கொள்ள வேண்டும். 

அபிவிருத்தி என்பது தானாக வரும், எங்கிருந்தோ மின்னல் வேகத்தில் வந்து பேரழிவுகளை ஏற்படுத்திய சுனாமி அபிவிருத்திகளை கொண்டு வந்து தந்துள்ளது. அந்த அபிவிருத்திகளையெல்லாம் தாங்களே செய்ததாக சொல்லிக்கொள்கிறார்கள். பொத்துவிலில் எனது பணிப்புரையின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட தபால் அலுவலகத்தையே வேறொருவர் வந்து திறந்து வைத்து கொண்டாடி விட்டுப் போயிருக்கிறார். இந்த விடயங்களை முஸ்லிம் காங்கிரஸ் பெரிதான அலட்டிக்கொள்ளப்போவதில்லை. 

முஸ்லிம்களின் உரிமைப் போராட்டத்தை பொறுத்தவரை எமது கட்சி எந்த விட்டுக்கொடுப்பையும் செய்யப் போவதில்லை. நாங்கள் அந்த விடயங்களில் தொடர்ந்தும் போராடி வருவது மட்டுமல்ல, அதற்கான அரசியல் வியூகங்களையும் வகுத்துக்கொண்டு செல்கிறோம்.

சேகு இஸ்ஸதீன் அவர்கள் அக்கரைப்பற்றில் உரையாற்றும் பொழுது அம்பாறை மாவட்டத்துக்கான முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரை நான் மரச் சின்னத்தில் பெற்றுக்கொடுத்ததாக சொன்னார். 2001 ஆம் ஆண்டுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் உடன்படிக்கை செய்து வேறு முஸ்லிம் உறுப்பினர்களை அவர்களின் வேட்பாளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள கூடாது என்று நிபந்தனையிட்டு மூன்று உறுப்பினர்களை வென்றெடுத்தாலும் பாராளுமன்றம் களையும் வரை எங்களுடன் இருந்து விட்டு, பாராளுமன்றம் களைந்தவுடனேயே மூவரும் தம்பி ஹரீஸ் உட்பட மறுபக்கம் சென்று விட்டார்கள். 

அந்த விபரீதத்தை நாங்கள் மறந்து விட முடியாது. அதற்கு அவர்கள் சொல்கின்ற காரணம் சமாதான பேச்சுவார்த்தைகளில் தலைவர் சமூகத்தை காட்டிக்கொடுத்துவிட்டார் என்பதாகும். மக்களிடம் ஒரு பெரிய படத்தைக் காட்டி தனித் தரப்பு என்ற விஷயத்தை வைத்துக்கொண்டு, தனியாக கட்சி அமைத்துக்கொண்டு பெரிதாக பேச ஆரம்பித்தார். மறைந்த அன்வர் இஸ்மாயில் உயிரோடு இல்லாத காரணத்தால் அவரைப்பற்றி நாம் பேசவிரும்பவில்லை. 

இங்குள்ள அமைச்சர் வடகிழக்கை மீள இணைப்பதற்கான முயற்சியென மீண்டும் ஒரு கதை அளக்கிறார். இப்படியான வில்லங்கமான பேச்சுக்களை பேசி மக்களை வேறொரு திசையில் இட்டுச் செல்ல அவர் எத்தனிக்கிறார். அதனால் இந்த சமூகத்துக்கு எந்த விமோசனமும் கிடைக்கப்போவதில்லை. அவருக்கு போடப்படவுள்ள தொண்டு என்னவென்று அவருக்கே தெரியாது. நாங்கள் போடவிருந்த வியூகத்தை இப்பொழுது சிங்களக் கட்சியினரெல்லாம் சேர்ந்து போடுகிறார்கள். 

பொத்துவிலில் அண்மையில் கூடி, மாற்று வழிவகைகளைப் பற்றி ஆராய்ந்து, வலயங்கள் பிரிப்பது பற்றி வியூகம் வகுத்து தீவிரமாக ஆலோசித்தோம். இப்பொழுது அந்த வியூகம் அவரது கழுத்தில் போட்ட தொண்டு ஆக மாறப்போகிறது. ஏனென்றால் அதனை இப்பொழுது சிங்கள வேட்பாளர்கள் கையாளுகிறார்கள். எந்தக் காரணம் கொண்டும் தேசியக் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெல்ல முடியாது என்ற சிக்கலுக்குள் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். அந்த அமைச்சரின் தேர்தல் சாகசம் பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லை. 

சென்ற மாகாண சபைத் தேர்தலை அவர் எவ்வாறு செய்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். உண்மையில் சென்ற தேர்தல் முஸ்லிம் காங்கிரஸ் வென்ற தேர்தல். முழு மாவட்டத்திலும் வாக்களிப்பு வீதம் 60 வீதமாக இருந்தபோது அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவில் வரையான தமிழ் வாக்குச் சாவடிகளில் பெட்டிகள் எப்படி 95 வீதத்திற்கு மேலாக நிரம்பி வழிந்தன என்பது உங்களுக்கு தெரியும். ஒரு வாக்குச் சாவடியில் இரண்டு வாக்குகள் தான் போடப்படாமல் இருந்தன. வாக்குகளை அப்படியே அள்ளிப்போட்டுக்கொண்டார்கள். 

அந்த முடிவைப்போன்ற ஒரு விசித்திரமான தேர்தல் முடிவை தேர்தல் ஆணையாளரே பார்த்ததில்லை. நான் அவருக்கு கொண்டு போய் அதைக் காட்டிய போது அவரே அதிர்ந்து விட்டார். இப்பொழுது அந்த ஜம்பம் பழிக்காது. தமிழ் தேசிய கூட்டமைப்பும் போட்டியிடுகிறது. புலிகளின் அச்சுறுத்தலும் இல்லாத நிலையில் பொலிசாரையும் இலகுவாக கையாள முடியாததோடு, இப்போதைய தேர்தல் ஆணையாளரும் கண்டிப்பானவராக இருக்கிறார். 

முந்திய மோசடிகளைப் பற்றிய பூரண அறிக்கையொன்றை நாங்கள் சமர்ப்பித்து விட்டோம். 

இன்றைய சூழலில் பொத்துவில் பிரதேசம் உட்பட மாவட்டத்தின் ஏனைய இடங்களிலும் வாக்களிப்பு விகிதம் அதிகரிக்க வேண்டும். வாக்களிப்பு விகிதாசாரம் கூடினால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெற்றிபெறும் என்பதை அரசியல் விமர்சகர்களே கூற ஆரம்பித்துவிட்டார்கள். இதுவே தாரக மந்திரம். 

இக் கூட்டத்தில் கட்சியின் செயலாளர் நாயகம் ஹஸனலி, எம்.பி, பைசல் காசிம் எம்.பி, முன்னாள் பிரதியமைச்சர் சேகு இஸ்ஸதீன், வேட்பாளர்களான முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அப்துல் மஜீத், பளீல் பி.ஏ, ஏ.எல்.தவம், நபீல், நஸீர் ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  




No comments

Powered by Blogger.