மு.கா. ந்து விலகியோர் முஸ்லிம்களுக்கு கிடைக்கவேண்டியதை தடை செய்கின்றனர்
TM
எம்.சுக்ரி
வட, கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் விரும்பவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
காத்தான்குடியில் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
இந்தப் பகுதிகளில் படுபாதகமான கருத்துக்களை பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேடைகளில் முன்வைத்துவருகின்றார். எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் இந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் பின்னர் புலிகளை களத்திற்கு கொண்டு வரவிரும்புகின்றார். வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு விரும்புகின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து ஆட்சி அமைக்க விரும்புகின்றார் என்ற கருத்துக்களை ஹிஸ்புல்லாஹ் முன்வைத்துவருகின்றார்.
இந்த நிலையில், பிரதி அமைச்சரும் எனது நண்பருமான ஹிஸ்புல்லாஹ்விடம் சிலவற்றை நான் கேட்க விரும்புகின்றேன். அதாவது தலைவர் ரவூப் ஹக்கீம் தமிழீழ விடுதலைப்புலிகளை எவ்வாறு விரும்பிக் கொண்டு வரமுடியும் என நீங்கள் நம்புகிறீர்கள்? அல்லது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்துவிட்டேன் என்று பிரகடனப்படுத்தியது பொய்யா? இவற்றையே பிரதி அமைச்சரும் எனது நண்பருமான ஹிஸ்புல்லாஹ்விடம் கேட்க விரும்புகின்றேன்.
வட, கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் விரும்பியது இல்லை. வட, கிழக்கில் முஸ்லிம்களுக்கு தனி மாகாணம் வேண்டும் என்பதே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அடிப்படைக் கொள்கை ஆகும். தமிழர்களுக்கு ஒரு தனிமாகாணம் இருக்கக்கூடாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூறியதும் இல்லை. வட, கிழக்கை இணைக்க வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூறியதும் இல்லை. வட, கிழக்கை பிரிக்க வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூறியதும் இல்லை. தமிழர்களுக்கு கிடைப்பதை கிடைக்காமல் செய்வதும் முஸ்லிம்களுக்கு கிடைப்பதை கிடைக்காமல் செய்வதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொள்கை இல்லை.
முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகிச் சென்றவர்கள் எல்லாம் முஸ்லிம் சமுதாயத்திற்கு கிடைக்கவேண்டியதை கிடைக்காமல் செய்துகொண்டிருக்கின்ற பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பது முஸ்லிம்களுக்கு கிடைக்கவேண்டியதை பெறுவதற்காக போராடுகின்ற கட்சியாக இருக்கின்றது.
பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வை போன்றவர்கள் தேர்தல் காலங்களில் முஸ்லிம் காங்கிரஸை அழித்துவிடலாமா? அல்லது தேர்தலின் பின்னர் ஏற்படும் புதிய சூழ்நிலையில் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களைக் கொண்டு இதை அழித்துவிடலாமா? என நினைக்கின்றார்கள். வட, கிழக்கு இணைப்பது என்பது தொடர்பில் முஸ்லிம்களுக்கு தனி மாகாணம் என்பது தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொள்கை ஆகும்.
மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் உயிருடன் இருந்த வேளையில் முஸ்லிம்களுக்காக ஒரு கட்சி உருவாக்கப்பட வேண்டும் என சிந்தித்தபோதும் 1987ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின்போதும் முஸ்லிம்களுக்கான குரல் அந்த பேச்சுவார்த்தை மேசையில் மாத்திரம் அல்ல, அந்த ஒப்பந்தத்திலும் கூறப்படவில்லை. இந்தக் காரணத்திற்காக முஸ்லிம்களின் சரியான குரலாக முஸ்லிம் சமூகத்தின் குரலாக உண்மையான அரசியல் அந்தஸ்தை பேணிக்கொள்வதற்கு அடிப்படையான அலகு ஒன்றை தோற்றுவித்து முஸ்லிம்களின் தலைவிதியை முஸ்லிம்களே தீர்மானிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு எந்தவிதமான ஒப்பந்தமும் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ச்சியாக பேசிவந்துள்ளது. எந்தவொரு தருணத்திலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு கிழக்கு மாகாணசபைத் தேர்தல் பற்றி பேசவில்லை. கிழக்கு மாகாணசபைத் தேர்தல் என்பது தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இடையில் வரும் ஒற்றுமையை ஒரு தேர்தல் கூட்டாக பார்க்கவேண்டிய அவசியம் எந்த வகையிலும் இல்லை.
ஆட்சி அமைக்கும்போது முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து ஆட்சி அமைக்கும் என்று கூறுகின்றார்கள். ஆட்சி அமைப்பது என்பது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரை, கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரை இலங்கை முழுவதிலும் வாழ்கின்ற முஸ்லிம் சமுதாயத்தின் அந்தஸ்தை கிழக்கு மாகாணசபையில் நிறுவுவதற்காகத்தான் என்பதையே பார்க்கவேண்டுமே. தவிர, யாருக்கும் கூலியாக நின்று ஆட்சி அமைப்பதற்கு முட்டுக்கொடுக்கின்ற கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் இருக்காது' என்றார்.
Post a Comment