Header Ads



எகிப்தில் ஷரிஆ சட்டம் குறித்து வாக்கெடுப்பு

TN
 
எகிப்தின் புதிய அரசியலமைப்பு வரைபில் ஷரிஆ சட்டம் குறித்து விபரிக்கும் ஷரத்து 2 இற்காக அரசியலமைப்பு குழுவில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. எகிப்தின் அரசியல் அமைப்பு குழு உறுப்பினரும் சலபிக்களின் அந்நூர் கட்சியைச் சேர்ந்தவருமான சலா அப்துல் மக்சூத் ஊடகங்களுக்கு இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
 
எகிப்தில் மக்கள் எழுச்சிக்கு பின்னர் ரத்து செய்யப்பட்ட ஹொஸ்னி முபாரக்கின் 1971 அரசியலமைப்பில், ஷரியா சட்டமே எகிப்து அரசியல் அமைப்பின் முக்கிய மூலம் என அதன் ஷரத்து 2 விபரிக்கிறது.
 
இந்நிலையில் புதிய அரசியலமைப்பு வரைபில் இந்த ஷரத்து குறித்து பல தரப்பிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்பு குழுவில் இருக்கும் சலபிக்களும் ஏனைய இஸ்லாமிய வாதிகளும் இந்த ஷரத்தில் உள்ள ‘முக்கிய மூலம்’ என்பதை மாற்றி ‘அடிப்படை மூலம்’ என பதிய வேண்டும் என கோரியுள்ளனர்.
 
ஆனால் அரசியலமைப்பு குழுவில் இருக்கும் மிதவாதிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் ஷரத்து 2 அவ்வாறே கடைப்பிடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். எனவே, இந்த சர்ச்சைக்குரிய ஷரத்து குறித்து மூன்று தெரிவுகளின் கீழ் அரசியல் அமைப்பு குழுவில் வாக்கெடுப்புக்கு விட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மக்சூத் குறிப்பிட்டுள்ளார்.
 
அதில் முதல் தெரிவாக 1971 அரசியல் அமைப்பின் படியே அந்த ஷரத்து கடைப்பிக்கப்படும். இரண்டாவது தெரிவு முக்கிய மூலம் என்பது அகற்றப்பட்டு ஷரிஆ சட்டம் அடிப்படை மூலம் என மாற்றப்படும். மூன்றாவது தேர்வு 1971 சட்ட மூலத்தின் ஷரத்து 2 அவ்வாறே கடைப்பிடிக்கப்படுவதோடு மேலதிகமாக அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் சட்டமியற்றும் மூலமாக இணைக்கப்படும் என வழங்கப்படவுள்ளது.
 
எகிப்தின் புதிய அரசியலமைப்பு வரைபு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் பூர்த்தியடையவுள்ளதோடு அதனைத் தொடர்ந்து அது மக்கள் கருத்து கணிப்பிற்கு விடப்படவுள்ளது.

1 comment:

  1. எகிப்தில் ஷரியா சட்டம் அடிப்படை மூலமாக மாற்றப் பட்டு, சவூதி அரேபியாவில் போலல்லாது, அதை விடவும் மிகச் சிறப்பாக நடை முறைப் படுத்தப் படும் நிலை உருவாக அல்லாஹ்வைப் பிராத்திப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.