பழக்க தோசம்..!
தம்பி
தீர்மானங்களை மேற்கொள்வது ஒரு வகையான கலையாகும். நமது வாழ்வில் எதிர்கொள்ளும் விவகாரங்களுக்கான தீர்மானங்களை நாம் இரண்டு வகையில் மேற்கொள்வதுண்டு.
முதலாவது: உணர்வுகளை அடிப்படையாகக் கொண்ட தீரமானங்கள்.
மற்றையது: அறிவுபூர்வமான தீர்மானங்கள்.
உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எடுக்கப்படும் தீர்மானங்கள் அநேகமாக வெற்றியடைவதில்லை. உதாரணமாக, கோபத்தில் எடுக்கப்படும் முடிவுகள் சரியாக இருப்பதில்லை என்பார்கள். கோபம் என்பது ஒரு வகை உணர்வாகும்!
நம்மில் அதிகமானோர் மதம், அரசியல் ஆகிய விடயங்களில் எப்போதும் உணர்வுபூர்வமான முடிவுகளை எடுத்து விடுவதுண்டு. அதனால்தான், மதங்களுக்கிடையிலான முரண்பாடுகளின் போதும், அரசியல் கட்சிகளுக்கிடையிலான மோதல்களின் போதும் அதிகபட்ச சேதாரங்களை நாம் சந்திக்க வேண்டியுள்ளது.
இந்தப் பழக்க தோசம்தான், தேர்தல்களின் போதும் நம்மை ஆட்டிப் படைக்கிறது. நம்மை உணர்சி வசப்படுத்தும் கட்சிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் கண்களை மூடிக்கொண்டு நமது வாக்குகளை வழங்கி விடுகின்றோம். பிறகு – நாம் வாக்களித்தவர்களின் சுயரூபம் வெளிப்படும் போது நமது தவறினை நினைத்து வருந்துகின்றோம். ஆனாலும், துரதிஷ்டவசமாக அடுத்த தேர்தலில் - திரும்பவும் உணர்ச்சிவசப்படத் தொடங்கி விடுகின்றோம்.
அரசியல் என்று வரும் போது, புரம்பரை பரம்பரையாக நம்மில் அதிகமானோர் இப்படித்தான் நடந்து கொள்கின்றனர். தேர்தல்களின் போது, அறிவுபூர்மாக ஆராய்ந்து எடுக்கப்பட்ட ஒரு தீர்மானத்தின் அடிப்படையில் நம்மில் எத்தனை பேர் வாக்களிக்கின்றோம் என்கிற கேள்விக்கு விடை தேடத் தொடங்கினால், வெட்கப்படும் வகையிலான பதிலொன்றே நமக்குக் கிடைக்கும்!
இது தேர்தல் காலம், மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் இடம்பெறவுள்ளன. இந்தத் தேர்தல்களில் குறிப்பாக சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தோர் வாக்களிப்பதற்கு முன்னதாக சற்றேனும் யோசிக்க வேண்டியுள்ளது. இதிலும் விசேடமாக, கிழக்கு மாகாணசபைத் தேர்தல் என்பது – தமிழ், முஸ்லிம் சமூகளின் இரட்டிப்பு கவனத்துக்குரியது.
நாம் வாக்களிக்கின்ற கட்சிகள் நமது மனச்சாட்சியாக இருக்க வேண்டியவை. நம்முடைய வாக்கினைப் பெறும் வேட்பாளர் நமது குரலாக ஒலிக்க வேண்டியவர்கள். ஆனால், கடந்த காலங்களில் நமது வாக்குகளைப் பெற்றுக் கொண்டு போன பலர் - சபைகளில் தூங்கிய நேரமே அதிகமாகும்!
கடந்த கிழக்கு மாகாணசபையில், நீங்கள் தெரிவு செய்து அனுப்பிய உறுப்பினர்களில் எத்தனை பேர், உங்கள் சமூகத்தின் பிரச்சினைகள் குறித்துப் பேசினார்கள் என்று எப்போதாவது நீங்கள் யோசித்துப் பார்த்ததுண்டா? நமது உறுப்பினர்களில் பலர் - பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் இருந்து விட்டு, பேசக் கூடாதா வேளையில் பேசித் தொலைத்ததைத் தவிர வேறு என்னதான் செய்திருக்கின்றார்கள்..?
ஒரு கல்யாண வீட்டுக்கு உங்கள் பிள்ளை போகிறது என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பிள்ளையை எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு அலங்கரித்து நல்ல ஆடைகளை உடுத்தித்தானே அனுப்பி வைக்கிறீர்கள். ஏன் அப்படி? அந்தக் குழந்தை – உங்கள் பிரதிநிதி. 'இந்தப் பிள்ளை அழகாக உடுத்தியிருக்கிறது' என்று அடுத்தவர் கூறுவது உங்களுக்குப் பெருமை. உங்கள் குழந்தை அழுக்குடன் சென்றால், அது உங்களுக்கு அவமானம் என்பதால்தான், உங்கள் பிள்ளையை நீங்கள் அலங்கரித்து அனுப்புகின்றீர்கள்.
ஆனால், நமது அரசியல் பிரதிநிதிகள் விடயத்தில் இந்த 'தத்துவத்தினை' நாம் மறந்து விடுகின்றோம். நமது பிரதிநிதிகளை வைத்துத்தான் - நாம் எடைபோடப்படுவோம் என்பதை நம்மில் அதிகமானோர் யோசிப்பதேயில்லை. மொழி ஆற்றல், தைரியம், புத்திசாதுரியம், கருணை மனது கொண்டவர்களாக நமது பிரதிநிதிகள் இருக்கும் போதுதான் - நாமும் மற்றவர்களால் அவ்வாறே பார்க்கப்படுவோம் என்பதை நாம் ஏன் மறந்து போனோம்! துரதிஷ்டவசமாக நாடாளுமன்றம், மாகாண சபைகள், உள்ளுராட்சி மன்றங்கள் போன்ற இடங்களுக்கு நம்மால் தெரிவு செய்யப்படும் நமது பிரதிநிதிகளில் பலர் - 'அழுக்கு' குழந்தைகளாகவே உள்ளனர்.
நமது குரலாக ஒலிப்பதற்குத் திராணியற்ற நமது பிரதிநிதிகள் கடைசியில் - வாக்களித்த நம்மைக் குழந்தைகளாக எண்ணிக் கொள்கின்றார்கள். குழந்தைகளுக்கு இனிப்புக்கள் பிடிக்கும் என்பதால், அவர்கள் நம்மிடம் பஞ்சுமிட்டாய்களோடு வருகின்றார்கள். பஞ்சுமிட்டாய் என்பதற்கு அவர்களிடத்தில் அபிவிருத்தி என்கிற இன்னுமொரு பெயருமுள்ளது. ஆனால், நம்மில் பலர் - கேள்விகள் எதுவுமற்று அந்தப் பஞ்சு மிட்டாய்களை ஏற்றுக் கொள்கின்றோம்.
கட்டிடங்கள், வீதிகள், கிணறுகள், மின்கம்பங்கள் போன்ற இத்யாதிகளை இவர்கள் அபிவிருத்தி என்கின்றார்கள். ஒரு சமூகத்தின் அபிவிருத்தி என்பதை வெறும் கொங்றீட் காடுகளால் நிறைவு செய்துவிட முடியுமா?
நமது காணிகள் களவு போய்க் கொண்டிருக்கும் போது, இவர்கள் நமக்கு வீடுகளைக் கட்டித் தருவதாகச் சொல்கின்றார்கள். நாமும் - காணிகள் களவாடப்படுவது குறித்த சுரணைகள் எதுவுமற்று வீடுகள் கட்டித் தருவதாகச் சொல்பவர்கள் குறித்து புகழ்பாடிக் கொண்டே, அவர்களை மீண்டும் நமது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றோம்.
இந்தத் தேர்தலில் நாம் தெரிவு செய்யப் போகும் வேட்பாளர்கள் ஆகக் குறைந்தது, அடிப்படை அறிவுள்ளோராகவாவது இருக்கின்றார்களா என்பதை நாம் உறுதி செய்து கொள்தல் வேண்டும். சில நாட்களுக்கு முன்னர் - கடந்த கிழக்கு மாகாணசபையில் உறுப்பினராக இருந்தவரும், தற்போது வேட்பாளராகப் போட்டியிடுகின்றவருமான ஓர் ஆசாமியிடம் தற்செயலாகப் பேசக் கிடைத்தது. நம்பினால் நம்புங்கள், அவரின் கட்சி சார்பாகக் கடந்த கிழக்கு மாகாணசபையில் எத்தனை உறுப்பினர்கள் இருந்தார்கள் என்றே அவருக்குத் தெரியாது! எட்டா? ஓன்பதா என்று என்னிடம் கேட்டார்! அதிர்ந்து போய் விட்டேன்!!
அப்படியென்றால், கிட்டத்தட்ட 4 வருடங்கள் அந்த சபையில் இருந்து கொண்டு இந்த மனிதர் எதைத்தான் கிழித்திருப்பார் என்று - இந்தத் தேர்தலின் போதாவது நீங்கள் கேடகப் போவதில்லையா?
மிகச் சரியாகச் சொன்னால், அறிவுபூர்வமாகச் சிந்திக்காமல் - எடுத்தேன் கவிழ்த்தேன் எனும் பாணியில் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்பவர்களுக்குக் கிடைக்கும் தண்டனையாகவே இதைப் பார்க்க முடிகிறது! நமது பிரதிநிதி என்பவர் - அடிப்படை அறிவற்ற ஒருவராக இருப்பதென்பது எத்தனை வெட்கக் கேடானதொரு விடயம்!
மாகாண சபைக்கு நாம் தெரிவு செய்து அனுப்புகின்றவர்கள் மேற்படி 'ஆசாமி' போல் இருந்து தொலைத்து விடுகின்றார்கள் என்பதற்காக – நாமும் அவ்வாறு இருந்து விட முடியாது! நமது பிரதிநிதிகள் குறித்தும், அவர்களுக்கான வரப்பிரசாதங்கள் குறித்தும் நாம் அறியாமலிருக்க முடியாது!
உதாரணமாக, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஒருவரின் மாதாந்தச் சம்பளம் சுமார் 26 ஆயிரம் ரூபாவாகும். இவருக்கு சம்பளத்துடனான 03 கடமையாளர்களும் பதவிக் காலம் முழுக்க வழங்கப்படுகின்றார்கள். சபை அமர்வில் கலந்து கொள்வதற்காகச் செல்லும் மாகாணசபை உறுப்பினர் ஒருவருக்கு தங்குமிடச் செலவாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இவைபோக – சுமார் 75 லட்சம் ரூபாய் பெறுமதியான வாகனமொன்றினை இறக்குமதித் தீர்வையின்றிப் பெற்றுக் கொள்வதற்கான அனுமதிப் பத்திரமும் இவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இப்படி, மாகாணசபை உறுப்பினர் ஒருவருக்கான வரப்பிரசாதங்கள் இன்னுமுள்ளன. 'அப்படியென்றால், நமது பிரதிநிதிகளுக்கு 'நட்டமில்லை' என்கிறீர்கிறீர்களா?' என்று என்னிடம் நீங்கள் கேட்டால்ள எனது பதில் 'ஆம் நட்டமேயில்லை'!
ஆனால், இந்த வரப்பிரசாதங்களை ஒரு உழைப்பாகக் கருதாமல், எடுப்பதை விடவும், மக்களுக்குக் கொடுக்கின்ற குணங் கொண்டவர்களும் இருக்கின்றார்கள். அவர்கள் யார் என அடையாளம் காண்பதற்கு முதலில் நீங்கள் உணர்வுபூர்வமான தீர்மானம் எடுப்பதிலிருந்தும் விலக வேண்டும்!
ஒரு மாகாணசபையின் ஆயுட்காலம் 5 வருடங்களாகும். தப்பித் தவறி நமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதில் நாம் விடுகின்ற தவறுகளைத், திருத்திக் கொள்வதற்கு மேலும் 5 வருடங்கள் காத்திருத்தல் வேண்டும்!
அந்த ஐந்து வருடங்களிலும், கிட்டத்தட்ட நாம் அரசியல் அநாதைகள்தான்!
நமக்கும், நமது சமூகத்துக்கும் இன்னல்கள் நேர்கின்றபோது நமது பிரதிநிதிகள் பேச்சற்றவர்களாக இருப்பது மிகப் பெருங் கொடுமையாகும்!
எனவே, இந்தத் தேர்தலிலாவது - ஆண்டாண்டு காலமாக உணர்ச்சிவசப்பட்டு வாக்களிக்கும் நமது பழக்க தோசத்திலிருந்து நாம் விடுபடுதல் வேண்டும்? தோசங்கள் நீங்குவதற்கு பரிகாரங்கள் செய்வதுண்டு! ஆனால், இந்தத் தோசத்துக்கு மட்டும் - பரிகாரம் நாமாகவே இருக்கின்றோம்!
·
so
Post a Comment