Header Ads



காழ்ப்புணர்ச்சி விமர்சனங்கள் குறித்து நான் அலட்டிக் கொள்ளப்போவதில்லை - ஹக்கீம்

 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் போராட்டம் இந்த தேர்தலோடு முடிவடைந்து விடாது என்றும் கட்சியின் போக்கிலும் நோக்கிலும் மிகப்பெரிய சவால்களை எதிர் நோக்கியிருப்பதாகவும் கட்சியின் தலைவரும், நிதியமைச்சருமான ரவூப்ஹக்கீம் கிண்ணியாவில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாணசபை தேர்தல் பிரசாரக்கூட்டம் கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் ஞாயிற்றுக்கிழமை (26) மாலை நடைபெற்றது. அமைச்சர் ரவூப்ஹக்கீம் அங்கு உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது,

முஸ்லிம் காங்கிரஸ் தனது மரச்சின்னத்தில் கிழக்கு மாகாணத்தில் தனித்துப் போட்டியிடுவது பொதுவாக நாடு முழுவவதிலும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள், அபிமானிகள் மத்தியில் புதிய உத்வேகத்iயும், உற்சாகத்தையும்  ஏற்படுத்தியுள்ளது முஸ்லிம்களின் உண்மையான நாடித்துடிப்பின் ஆழ, அகலம் எங்களுக்கு நன்கு புரிகின்றது.

இதே ஆர்வம் தொடர்ந்தும் நீடிக்க வேண்டும் வெற்றி பெறும் எமது உறுப்பினர்கள் விலை போகும் அபாயம் பற்றி தொடர்ந்து எச்சரித்து வருகின்றேன். அவர்களது கால்களை கட்டிப்போட்டு கடிவாளம் போடும் காரியத்தில் எமது கட்சித் தொண்டர்களும் ஒத்துழைக்க வேண்டும்.

அவர்கள் வெற்றி பெற்ற மறுகணமே எங்காவது கூட்டிக்கொண்டு சென்று விடுங்கள் என்றும் அல்லது புனித மக்காவிற்கு உம்ரா கடமைக்கு அழைத்துச்சென்று விடுங்கள் என்றும்  கட்சியின் அபிமானிகள் என்னிடம் வேண்டுகோள் விடுத்தவண்ணமுள்ளனர்.

அரசாங்கத்தில் உள்ள வயது முதிர்ந்த பிரதி அமைச்சர் ஒருவரும், அரசியல் முதிர்ச்சியற்ற சில்லரைப் பிரதியமைச்சர் ஒருவரும் தான் காழிப்புணர்ச்சியின் காரணமாக என்னைப் பற்றி காட்டமான விமரிசனங்களை தற்பொழுது செய்து வருகின்றனர். அதைப்பற்றி நான் அலட்டிக் கொள்ளப்போவதில்லை.

நாளுக்குநாள் களநிலவரங்கள் எங்களுக்குச் சாதகமாக மாறிவருகின்றன. சாரி சாரியாக மக்கள் முஸ்லிம் காங்கிரஸ் அணி திரள்கின்றனர். ஆபத்திலிருந்து கட்சியைக் காப்பாற்றுவதற்கு அவர்கள் முன்வந்துள்ளனர். இவ்வாறு அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.
 
முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் பஷீர் சேகுதாவூத் உரையாற்றும் போது,

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் அறுதிப் பெரும்பான்மையைக் கொண்ட கட்சி முஸ்லிம் காங்கிரஸ் தான். மட்டக்களப்பு மாவட்டத்தில் கணிசமான எண்ணிக்கையில் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர்.

தமிழர் தேசியம்; 1976 ஆம் ஆண்டிலிருந்தே தனது தாயகக் கோட்பாட்டிலிருந்து தனி நாட்டுக் கோரிக்கையிலிருந்து மாறாமல் இருந்து வருகின்றது. விடுதலைப் புலிகள் வான்படை, கடற்படை, காலாட்படை, வங்கி, பொலிஸ், நீதிமன்றம், என தனது ஆட்புல எல்லைக்குள் வைத்திருந்தனர் தாயகக் கோட்பாடு, சுயநிர்ணயம், என்பதை தமிழர் தரப்பு வலியுறுத்தி வருகின்றது. ஆனால் ஸ்ரீலங்கா  முஸ்லிம் காங்கிரஸ் ஆயதப் போராட்டத்தில் நம்பிக்கை கொள்ளாது மறைந்த எம்.எச.எம். அஷ்ரப் பின் காலத்திலிருந்து இன்றும் கூட ஜனநாயகரீதியாக உரிமைகளை வென்றெடுப்பதற்காக பயணிக்கின்றது.

இனப் பிரச்சினையில் தமிழ் மக்களது தீர்வு என்று வரும் பொழுது வட – கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கும் நிலத் தொடர்பற்ற நிர்வாக அலகு வழங்கப்படவேண்டு மென்பதில் முஸ்லிம் காங்கிரஸ் உறுதியாக இருக்கின்றது என்றார்.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ஏ.எல். தவம், மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் ஆசாத் சாலி, திருகோணமலை மாவட்ட வேட்பாளர் ஆர்.எம்.அன்வர், ஹசன் மௌலவி,  சட்டத்தரணி லாஹிர், சைபுல்லாஹ், ஆகியோரும் உரையாற்றினர். ஏனைய வேட்பாளர்களும் கலந்து கொண்டனர். வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாவா பாரூக்கும் இதில் கலந்து கொண்டார். ஐயாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் மைதானத்தில் குழுமி இருந்தனர்.
 
டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஊடக ஆலோசகர்





 
 

1 comment:

  1. ஹக்கீம் காக்கவைப் பற்றி ஜனாதிபதியாரே எலி எண்டு சொல்லி போட்டார்.
    தம்புல்லைல பள்ளிய உடைக்கப் போறம் எண்டு அவையள் பிரச்சின பண்ணேக்க, மனுஷன்
    கேபினட் மீட்டிங்குக்கு போனவரல்லோ, அங்கை அண்ணர் ஹக்கீம் தம்புள்ள பள்ளியப் பற்றி ஒண்டும் கதையாமல் எலி மாதிரி
    பதுங்கிக் கொண்டு இருந்த்போட்டு, பேந்து இலக்சன் வந்ததும் கிழக்கில போய் சிங்கம் மாதிரி சத்தம் போட்டு சனத்த பேக்காட்ட பாக்குறார் எண்டு ஜனாதிபதியார் நினைக்குறார்.

    பேந்து உவரைப் பாத்து எலி எண்டு சொல்லாமல், புலி எண்டே சொல்லுவினம்?

    ReplyDelete

Powered by Blogger.