சிரியா மீது அமெரிக்கா தாக்குவதை அனுமதிக்கமாட்டோம் - ரஷ்யா எச்சரிக்கை
சிரியா மீது ராணுவ தாக்குதல் நடத்த நேரிடும் என்று எச்சரித்த அமெரிக்க அதிபர் ஒபாமாவை, ரஷ்யா, சீனா கண்டித்துள்ளன. சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. அவருக்கு எதிராக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மக்கள் கிளர்ச்சி வெடித்துள்ளது. டமாஸ்கஸ் உட்பட முக்கிய நகரங்களில் ராணுவத்தை கொண்டு போராட்டக்காரர்களை அதிபர் பஷார் ஒடுக்கி வருகிறார். இதுவரை ராணுவ தாக்குதலில் மக்கள் 18,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கிளர்ச்சியாளர்களை மொத்தமாக ஒழித்து கட்ட ரசாயன ஆயுதங்களை பஷார் அரசு இடமாற்றி வருவதாக தகவல் வெளியானது.
அதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நவம்பரில் பொது தேர்தலை எதிர்கொண்டு பிரசாரம் செய்து வரும் அவர், நேற்று முன்தினம் கூறுகையில், ‘‘சிரியாவில் ரசாயன குண்டுகளை இடம் மாற்றவோ, பயன்படுத்தவோ அமெரிக்கா அனுமதிக்காது. சிரியா விஷயத்தில் அமெரிக்கா அதிக கட்டுப்பாட்டை கடைபிடிக்கிறது. ஆனால், வெளியாகும் செய்திகள் உண்மையானால் எனது நடவடிக்கை மாறலாம்’’ என்றார்.
‘சிரியாவில் பாதுகாப்புக்காக அமெரிக்க படைகளை அனுப்புவீர்களா’ என்ற நிருபர்களின் கேள்விக்கு, எனது திட்டம் எப்படியும் மாறலாம் என்று ஒபாமா பதிலளித்தார்.
இந்த பேச்சுக்கு ரஷ்யா, சீனா நேற்று கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சீன தூதரை சந்தித்த பிறகு ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லாவ்ரா கூறுகையில், ‘‘சிரியா மீது தன்னிச்சையாக தாக்குதல் நடத்த அமெரிக்காவை அனுமதிக்க முடியாது. சர்வதேச சட்டத்தை அந்நாடு கடைபிடிக்கும் என்று நம்புகிறோம்’’ என்றார்.
ஈராக், அப்கானிஸ்தான் மீது படையெடுக்க அனுமதியளித்தீர்களாக்கும்!
ReplyDelete