யாரைத்தான் நம்புவதோ..?
(இன்று 30-08-2012 வெளியாகியுள்ள விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் இது)
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பிரசார மேடைகளில் ஏட்டிக்குப் போட்டியான பிரசாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் அவற்றுக்கு வலுச்சேர்க்கும் வகையில் தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் களத்திலிறங்கியிருக்கிறார்.
சில தினங்களுக்கு முன்னர் அம்பாறை மற்றும் கல்முனை பகுதிகளில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்தர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு ஜனாதிபதி உரைநிகழ்த்தியிருந்தார். அதில் அவர் சுட்டிக்காட்டிய ஒருவிடயம் அனைவரதும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. பள்ளிவாசல்கள் உடைக்கப்படுவதாக இன்று முஸ்லிம் அமைச்சர்கள் கூறுகிறார்கள். தேர்தல் பிரசார மேடைகளில் முழங்குகிறார்கள். ஆனால் எந்தவொரு முஸ்லிம் அமைச்சரும் இதுவரை என்னிடம் இதுபற்றிப் பேசவில்லை. அமைச்சரவையில் கூட இதுபற்றிப் பிரஸ்தாபிக்கவில்லை. என்னிடம் வந்தால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்றுதான் சொல்வார்கள். ஆனால் உங்களிடம் வந்து பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டதாக கதை விடுகிறார்கள்" என ஜனாதிபதி பகிரங்கமாகக் குறிப்பிட்டிருந்தார்.
ஜனாதிபதி இந்த விடயத்தைச் சொன்னபோது அதே மேடையில் அமைச்சர் பௌசியும் இருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் தம்புள்ளை பள்ளிவாசல் பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினரால் தாக்கப்பட்ட பிற்பாடு ஜனாதிபதி அதுதொடர்பில் வாய்திறந்துள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவேயாகும்.
ஆகக் குறைந்ததது ஒரு கண்டன அறிக்கையையோ அல்லது பொலிஸ் விசாரணைக்கான உத்தரவையோ கடந்த 4 மாத காலப்பகுதியில் விடுக்காது மௌனம் காத்த ஜனாதிபதி தற்போதுதான் இந்த விடயம் பற்றிப் பேச முற்பட்டிருக்கிறார். சில வாரங்களுக்கு முன்னர் தம்புள்ளை ரங்கிரி விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதல் சம்பவத்துக்கு தலைமை தாங்கிய இனாமலுவே சுமங்கல தேரரைச் சந்தித்து ஆசி பெற்றிருந்தார். அச்சமயம் கூட குறித்த தேரரின் நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி தனது கண்டனத்தையோ கவலையையோ வெளியிட்டிருக்கவில்லை.
ஆனால் தற்போது தேர்தல் பிரசார மேடையில்தான் ஜனாதிபதி இந்த விவகாரம் தொடர்பில் பிரஸ்தாபிப்பதன் நோக்கம் முஸ்லிம் மக்களின் வாக்குகளை மையப்படுத்தியதே அன்றி வேறில்லை என்பது தெளிவான விடயமாகும். ஜனாதிபதியின் நிலைப்பாடு இவ்வாறிருக்க, கிழக்கின் தேர்தல் பிரசார மேடைகளில் பள்ளிவாசல் விவகாரங்கள் தொடர்பில் ஆக்ரோஷமாக உரைநிகழ்த்துகின்ற முஸ்லிம் காங்கிரஸ் தலைவரோ அல்லது ஏனைய முஸ்லிம் பிரதிநிதிகளோ கூட இதுவரை ஜனாதிபதியிடம் இந்த விவகாரம் பற்றிப் பேசியிருக்கவில்லை என்பதற்கும் அமைச்சரவையில் இதுபற்றி கதைக்கவில்லை என்பதற்கும் ஜனாதிபதியின் கல்முனை உரையே தக்க ஆதாரமாகும்.
தம்புள்ளை விவகாரம் நடந்தவுடனும் ஏனைய பிரச்சினைகள் மேலெழுந்தவுடனும் தாம் ஜனாதிபதியிடம் பேசியுள்ளதாக முஸ்லிம் அமைச்சர்கள் அறிக்கைவிட்டனர். ஆனால் அவ்வாறு எவருமே ஜனாதிபதியை அணுகியிருக்கவில்லை என்பது இப்போது தெளிவாகியுள்ளது.மக்களின் பிரச்சினைகளை உரிய இடங்களில் உரிய தருணங்களில் பேசுவதற்காகவே நாம் மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்து அனுப்பியிருக்கிறோம். ஆனால் அவர்கள் பேச வேண்டிய இடத்தில் பேசாது மௌனமாக இருநதுவிட்டு இப்போது மக்கள் முன்னிலையில் வந்து நின்று தேர்தல் பிரசார மேடைகளில் முழங்குவதால் எந்தவித பயனும் ஏற்பட்டுவிடாது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் கவனத்திற் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
பள்ளிவாசல் விவகாரங்கள் இன்று கிழக்கின் தேர்தல் மேடைகளில் சூடுபிடித்திருப்பதற்கான காரணம் வெறுமனே மக்களை உணர்வூட்டி அவர்களது வாக்குகளைக் கொள்ளையடிப்பதே அன்றி இந்த நாட்டு மக்களின் மத உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அல்ல என்பதை தற்போதைய தேர்தல் கள நிலைவரங்கள் தெளிவுபடுத்தி நிற்கின்றன.தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் முதல் மூதூர் ஜபல் மலை விவகாரம் வரை இதுவரை எந்தவொரு தீர்வும் முஸ்லிம்களுக்குப் பெற்றுக் கொடுக்கப்படவில்லை. அவ்வாறான நிலையில் முஸ்லிம் அமைச்சர்களும் ஜனாதிபதியும் இன்று முஸ்லிம்கள் முன்னிலையில் வந்துநின்று அதுபற்றிப் பிரஸ்தாபிக்கிறார்கள்.
இந்த நாட்டின் தலைவர் என்ற வகையில் நாட்டில் நடக்கும் எந்தவொரு விவகாரம் தொடர்பிலும் அவர் அறியாதிருக்க வாய்ப்பில்லை. அமைச்சரவைக்கு வந்து அமைச்சர்கள் சொல்லித்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எந்தவிதமான அதிகார வரம்பும் ஜனாதிபதிக்கு கிடையாது. அவ்வாறான நிலையில் இன்று மக்கள் முன்னிலையில் வந்து நின்று யாருமே என்னிடம் சொல்லவில்லை என்று கூறுவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு அழகல்ல.
அதேபோன்றுதான் மக்களின் வாக்குகளால் அமைச்சுப் பதவியையும் பெற்றுவிட்டு மக்களின் பிரச்சினைகளை உரிய இடங்களில் பேசாது மௌனம் காப்பதும் நமது அமைச்சர்களுக்கு அழகல்ல. இந்த விடயத்தில் நாம் ஜனாதிபதியை நம்புவதா? நமது அமைச்சர்களை நம்புவதா?
why we wants to believe President speach....
ReplyDeletehe can say lie also.
யாரையும் நம்ப முடியாத நிலைதான், எல்லோருமே (அரசியல் வாதிகள்) மக்களை ஏமாற்றுகின்றார்கள் என்று தான் புரிகின்றது.
ReplyDeleteமகிந்தர் உப்புடி அப்பாவியார் மாதிரி நடிப்பார் எண்டு யாரும் நினைகேல்ல, கண்டியளோ.
ReplyDelete