பாலியல் துஷ்பிரயோகத்திலிருந்து நமது பிஞ்சுகளை காப்போம்
(இன்று 23-08-2012 வெளியாகியுள்ள விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் இது)
இலங்கை இன்று எதிர்நோக்குகின்ற மிகப் பெரும் அபாயமாக பாலியல் துஷ்பிரயோகம் எனும் தீஞ்செயல் மாற்றம் பெற்றிருக்கிறது.
கடந்த வாரம் வெலிகம கோட்டேகொட பகுதியில் ஆறு வயதான பாத்திமா அப்ரா எனும் சிறுமி பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சிக்கப்பட்ட நிலையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தார். புனித நோன்பை நோற்ற நிலையில் இரத்த வெறி பிடித்த காமுகன் ஒருவனிடம் சிக்கிய அந்தச் சிறுமியை உயிருடன் மீட்க முடியாமல் போய்விட்டது.
வெலிகம பகுதியில் மாத்திரமன்றி முழு நாட்டு மக்களையும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்திய இந்த சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கதும் மற்றவர்களுக்கு படிப்பினைக்குரியதுமாகும்.
இன்று இலங்கையில் வெளியாகும் ஊடகங்கள் அனைத்திலுமே தினமும் 5க்கும் குறையாத பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் தொடர்பான செய்திகள் வெளியாகின்றன. அவற்றில் 75 வீதத்துக்கும் அதிகமானவை சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் மீதான துஷ்பிரயோகங்களேயாகும்.
நேற்று முன்தினம் வெளியான ஆங்கில தினசரி ஒன்றில் 'பாலியல் துஷ்பிரயோகம்' எனும் பொதுவான தலைப்பின் கீழ் 5 செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்தன. காலியில் 14 வயது சிறுமி அவரது காதலரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டார், ஊவா பரணகமவில் 15 வயது சிறுமி 24 வயது இளைஞரால் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டார், ரத்கம பகுதியில் 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக அவரது தாயார் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார், லியாங்கொல்ல பகுதியில் 14 வயது சிறுமியை 13 வயது சிறுவன் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினார், கண்டியில் 24 வயதான முன்னாள் கடற்படை வீரர் ஒருவர் 11 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினார், கடுவெலவில் 14 வயது சிறுமியை 35 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினார் என்பனவே குறித்த பத்திரிகையில் ஒன்றன் கீழ் ஒன்றாக பிரசுரிக்கப்பட்டிருந்த செய்திகளாகும்.
ஒரே காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள இச் சம்பவங்கள் நாட்டின் எந்தவொரு பகுதியுமே இதற்கு விதிவிலக்கல்ல என்பதை எமக்குத் தெளிவாக உணர்த்தி நிற்கின்றன.
வாழ்க்கையை ஆரம்பிக்கின்ற காலப்பகுதியில் பிஞ்சுகள் இவ்வாறான காமுகர்களால் கசக்கி எறியப்படுவதானது அவர்களது எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்குவதுடன் அவர்களை உளவியல் ரீதியாக பெரிதும் பாதிப்புறச் செய்கின்றன. சமூகத்தினால் ஒதுக்கப்படுகின்ற இவ்வாறான சிறார்கள் பின்னாளில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களாவும் விரக்தியுற்றவர்களாகவும் மாறிவிடுகின்றனர்.
சிறுசுகளின் வாழ்வை சீரழிக்கும் இவ்வாறான காமுகர்களுக்கு எதிரான சட்டத்தின் பிடி மேலும் இறுக்கப்பட வேண்டும். குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு ஈவு இரக்கமற்ற மரண தன்டனை விதிக்கப்பட வேண்டும். இதற்கான அழுத்தங்கள் நாடு முழுவதிலுமிருந்து சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
இதற்கப்பால் இன்று சிறுவர்கள் அதிகம் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்படுவதற்கு பிரதான காரணம் பெற்றோரின் அலட்சியப் போக்கேயாகும். தமது பிள்ளையின் பாதுகாப்பு தொடர்பில் கவனிப்பாரற்றிருக்கும் பெற்றோர் ஏதேனும் நடந்துவிட்ட பின்னரே கைசேதப்படுகின்றனர். வெலிகமவில் நடைபெற்ற சம்பவத்தை ஏனைய பெற்றோர்கள் தமக்கு படிப்பினையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இன்று அதிகமான பிள்ளைகள் குடும்ப உறவினர்களாலும் நன்கு தெரிந்தவர்களாலுமே துஷ்பிரயோகம் செய்யப்படுவதை நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் உணர்த்தி நிற்கின்றன. எனவேதான் பெற்றோர் தமது பிள்ளைகளை தொடர்ச்சியாக தமது கண்காணிப்பின் கீழேயே வைத்திருக்க வேண்டியது இன்று காலத்தின் கட்டாயத் தேவையாக மாறியிருக்கிறது.
அதுமாத்திரமன்றி இவ்வாறான விடயங்கள் தொடர்பில் தமது பிள்ளைகளை அறிவூட்டுவதும் ஏதேனும் நெருக்கடியான சந்தர்ப்பங்கள் தோற்றம் பெறும் பட்சத்தில் எவ்வாறு அதிலிருந்து பாதுகாப்பாக மீள்வது என்பது தொடர்பில் அறிவுறுத்துவதும் பெற்றோரின் கடப்பாடாகும்.
இவ்வாறான விடயங்களை பேசுவதற்குக் கூட வெட்கப்படுகின்ற அல்லது அதனை மோசமாகப் பார்க்கின்ற சிலர் நமது சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களைப் புறந்தள்ளிவிட்டு நமது பிஞ்சுகளை காப்பாற்ற இன்றே துணிந்து செயல்படுவோம். அல்லாஹ் நமது சமூகத்தைப் பாதுகாப்பானாக.
Post a Comment